Tuesday 25 February 2014

உங்க வீட்டு சுட்டீஸ்

ஹாய் ரீடர்ஸ்,


A.Ashwanthan

இன்று 'ஹைலைட் கலை’ என்ற பகுதியில் முதல் வகுப்பு படிக்கின்ற அஷ்வந்தன் வரைந்த படம் இடம்பெற்றுள்ளது. 

இதுபோல உங்கள் வீட்டு சுட்டீஸ்கள் வரைந்த படமும் இடம் பெற, அவற்றை mmsmartlady@gmail.com என்ற இமெயில் முகவரிக்கு உடனே அனுப்பி வையுங்கள். தேர்வாகும் படைப்புகள் இந்த ப்ளாகில் வெளிப்படும்.

வாழ்த்துகள்

காம்கேர் கே புவனேஸ்வரி

Thursday 20 February 2014

பிப்ரவரி 21 உலக தாய்மொழி தினம்

பிப்ரவரி 21 உலக தாய்மொழி தினம் 
காம்கேர் புவனேஸ்வரி

1999-ஆம் ஆண்டு யுனெஸ்கோ மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவின்படி தாய்மொழி தினம் வருடாவருடம் உலகம் முழுக்க கொண்டாடப்பட்டு வருகிறது.

நம் தாய் மொழி தமிழ். அதில் எழுதவும், படிக்கவும் நிச்சயமாக தெரிந்திருக்க வேண்டும். இன்றைய இளம் தலைமுறையினரில் எத்தனை பேருக்கு தமிழ் எழுதவும், படிக்கவும் தெரிகிறது? காரணம் பள்ளியில் இரண்டாம் மொழியாக தமிழை தேர்ந்தெடுக்காமல் பிறமொழிகளைத் தேர்ந்தெடுப்பது தான். தமிழ் மொழியைக் கற்றுக் கொள்ள சிறப்பு வகுப்புகளுக்கு அனுப்புகின்ற பெற்றோர்களை இன்று அதிகம் காண முடிகிறது.

தாய்மொழியில் சரளமாக எழுதவும், படிக்கவும் தெரிந்திருப்பவர்களுக்கு வேறு எந்த மொழியை வேண்டுமானாலும் எளிதாகக் கற்க முடியும். சுலபமாக இருக்கும். கற்பனைத் திறன் அதிகரிக்கும். படைப்பாற்றல் பெருகும். செய்கின்ற எல்லா பணிளிலும் தன்னிறைவு கிடைக்கும். மனது எப்போதுமே ஒருவித நிறைவு இருக்கும். எதையும் எதிர்கொள்ளும் தைரியம் கிடைக்கும்.

தாய்மொழியை மதிக்க வேண்டும் என்று சொல்வதால், பிறமொழிகளைக் கற்கக் கூடாது என்று பொருளல்ல. நீங்கள் நன்றாக கவனித்துப் பார்த்தால் தெரியும், தாய் மொழியில் எழுதவோ, படிக்கவோ தெரியாதவர்கள் பிற மொழிகள் பல கற்றிருந்தாலும் அது கல்வி என்ற அளவிலேயே இருக்கும். பல மொழிகளைக் கற்றதிற்கான சான்றிதழ்களை மட்டுமே வைத்திருப்பார்கள்.

அவர்களால் எந்த மொழியிலும் சரளமாக பேசவோ, எழுதவோ முடியாது. ஆக சொந்த மொழியிலும் ஆற்றல் இல்லாமல், பிற மொழிகளிலும் புலமை பெறாமல் அரைகுறை ஞானத்துடனே தான் அவர்களால் வாழ முடிகிறது. இது தான் நடைமுறையில் நாம் காணும் உண்மை.

ஆனால் தாய்மொழியை நேசிப்பவர்கள், அவர்கள் கற்றறிந்த எல்லா மொழிகளையும் நடைமுறையில் சரளமாக பயன்படுத்துவதையும் நம்மால் காண முடிகிறது.

காரணம் இது தான்: தாய்மொழியில் புலமை பெறும் போது, மற்ற மொழிகளைக் கற்கத் தேவையான புரிதல் கிடைக்கிறது. அந்தப் புரிதலே ஒப்பீடு செய்தும், கற்பனை செய்தும் கற்றுக் கொள்ளும் ஆற்றலைக் கொடுக்கிறது. அந்தந்த மொழிகளுக்கான இலக்கணங்களில் ஆழ்ந்த புலமை பெற முடிகிறது.

என் கொள்ளு பாட்டி சஞ்சீவியம்மாள் பற்றி சொல்லியாக வேண்டும் அதாவது என் அம்மாவின் பாட்டி. புகைப்படம் கூட இல்லாத அவரைப் பற்றி என் அம்மா சொல்லி தான் தெரியும்.
புதுச்சேரியில் வாழ்ந்த அவர் நான்கு மொழிகள் படிக்கவும், எழுதவும் தெரிந்த திறமைசாலி. ஆனாலும் தமிழ் புத்தகங்கள் நிறைய படிப்பார், படித்ததை சுவராசியமாக சொல்வார். படிப்பு மட்டுமே நம்மை பண்படுத்தும், உயர்த்தும், உன்னதம் தரும் என்று திரும்ப, திரும்ப சொல்வார்.

தாய்மொழி பற்றிருந்ததால் தான் என் கொள்ளுபாட்டிக்கு 4 மொழிகளை எழுதவும் படிக்கவும் தெரிந்திருந்தது. 

உதாரணத்துக்கு சிறுவயதில் இருந்தே எலுமிச்சைப் பழத்தின் புளிப்புச் சுவையை சுவைக்கவே செய்யாத நபரிடம், எலுமிச்சைப் பழ ரசம் நன்றாக இருக்கும், எலுமிச்சைப் பழ ஊறுகாய் சூப்பராக இருக்கும், எலுமிச்சைப் பழ சாதம் அருமையாக இருக்கும் என்று சொல்வதற்கு ஒப்பாகும், தாய் மொழியின் அருமை தெரியாத ஒருவர் பிற மொழிகளைக் கற்பது என்பது.

நமக்கு பாரதியை பாடல்கள் இயற்றும் கவிஞராக மட்டுமே தெரியும். ஆனால் அவருக்கு ஆங்கிலப் புலமையும் உண்டு தெரியுமா?

காந்தி ஒருமுறை திருவல்லிக்கேணி கூட்டத்தில் ஆங்கிலத்தில் பேசினாராம். உடனே நம் பாரதி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காந்திக்கு ஒரு கடிதம் எழுதினாராம். ‘உங்கள் தாய் மொழி குஜராத்தியிலோ அல்லது பெரும்பான்மை மக்கள் பேசும் மொழியான ஹிந்தியிலோ உரையாற்றி இருக்கலாமே? ஏன் ஆங்கிலத்தில் பேசினீர்கள்’

அதற்கு காந்தி, ‘இனிமேல் அவ்வாறே செய்கிறேன். சரி நீங்கள் ஏன் உங்கள் கடிதத்தை ஆங்கிலத்தில் எழுதினீர்கள்?’ என்று பதில் கடிதம் அனுப்பினாராம்.

பாரதியின் பதில் என்ன தெரியுமா? ‘பிறர் மனம் நோக எழுதும் பொழுது தாய் மொழியை உபயோகப்படுத்த கூடாது என்பதே எங்களின் தமிழர் பண்பாடு’ என்று பதில் தந்தாராம் பாரதி.

தாய்மொழி குறித்த மற்றொரு செய்தியோடு இப்பதிவை முடிக்கிறேன்.

கம்ப்யூட்டர் மற்றும் இண்டர்நெட் தொழில்நுட்பம் நம் நாட்டில் எட்டிப் பார்க்காத 1992 களிலேயே தமிழையும், கம்ப்யூட்டரையும் இணைத்து சாஃப்ட்வேர்கள், புத்தகங்கள் போன்ற படைப்புகளை எங்கள் COMPCARE நிறுவனம் வாயிலாக வெளியிட ஆரம்பித்தோம். அன்று அது முதன் முயற்சியாக இருந்தது. இன்று அப்பணியில் வெற்றி பெற்றுள்ளோம் என்பதை இந்நன்னாளில் பதிவு செய்வதன் மூலம் என் தாய்மொழி தமிழ்மொழிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழோடு வாழ்வோம். பிற மொழிகளோடு பயணிப்போம். வாழ்க்கைப் பயணத்தில் வெற்றி பெறுவோம்.

வாழ்த்துக்கள்.

காம்கேர் புவனேஸ்வரி

Tuesday 18 February 2014

அறிவையும் பகிர்ந்து கொள்வோம்!

ஹாய் மங்கையர் மலர் ரீடர்ஸ்,

இன்று நான் சந்தித்த 100 வயது  பெரியவரின் உண்மை கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.

நான் எழுதிய ‘லேப்டாப் A-Z’ புத்தகத்தின் விளம்பரம் ஆனந்த விகடனில் வந்திருந்தது.   வழக்கம் போல அதை ஸ்கேன் செய்து என் லேப்டாப்பில் பதிவு செய்து கொண்டு விட்டு என் நிறுவன வேலைகளில் மூழ்கினேன். 

அன்று புதன் கிழமை. காலை 8.30 மணி இருக்கும். என் செல்போனில் அழைப்பு வந்தது. எதிர் முனையில் ‘காம்கேர் புவனேஸ்வரி மேடம் இருக்காங்களா?
அவங்ககிட்ட பேசணும்...’ என்று நடுத்தர வயது குரல். ‘எஸ்.நான் தான் புவனேஸ்வரி...’ என்று சொன்னதும் அவர் கூறினார்.

‘என்னுடைய வீட்டில் குடியிருக்கும் 100 வயது பெரியவர் ஒருவர் உங்களை
சந்திக்கணும் என்று விரும்புகிறார். நீங்கள் அப்பாயின்ட்மெண்ட் கொடுத்தால் கார் வைத்து அவரை அனுப்பி வைக்கிறேன்’

‘எதற்காக என்னைப் பார்க்கணும் என்று அவர் விரும்புகிறார்?’

‘அவர் ஒரு ஜோசியர்...நிறைய ஆராய்ச்சிகள் செய்து வைத்திருக்கிறார்...கம்ப்யூட்டரில் கூட ஏதேதோ செய்து கொண்டே இருப்பார். லேப்டாப்பும் வைத்துள்ளார்...உங்களிடம் ஏதோ கேட்கணுமாம்’

எனக்கு விஷயம் ஓரளவிற்குப் புரிந்து போனது. லேப்டாப்பை இயக்குவதில்  தான் சந்தேகம் கேட்கப் போகிறார் என்று நினைத்துக் கொண்டே, என் டிஜிட்டல் டைரியைப் புரட்டியபடி நான் ஃப்ரீயாக இருக்கின்ற நாளைத் தேடினேன். சனிக்கிழமை மாலை  5 மணிக்கு வரும்படி நாள் கொடுத்தேன்.

சனிக் கிழமையும் வந்தது. சரியாக 5 மணிக்கு அவரது கார் என் நிறுவனத்தை அடைந்ததும், நானே நேரடியாக வாயிலுக்குச் சென்றேன். அப்பெரியவர்   கைதடியுடன் மெதுவாக காரை விட்டு இறங்கி நடந்து வந்தார். அவரைத்   தொடர்ந்து கார் டிரைவர்  கையில் ஒரு கூடையுடன் வந்தார். பெரியவர்          எனக்கு  கைகூப்பி வணக்கம் தெரிவித்தார். எனக்கு சிலிர்த்துப் போனது.

அவர் வேட்டி கட்டியிருந்தார். மேலே ஒரு பெரிய அங்கவஸ்திரம்(துண்டு)
போட்டிருந்தார். சட்டைப் போடாமலேயே அவரது வெள்ளை வெளேறென்ற  தாடி மேல் உடம்பு முழுவதையும் மறைத்திருந்தது. அவரைப் பார்க்கும் போது என் தாத்தாவின் நினைவு  வந்தது. என் தாத்தா, அப்பாவின் அப்பா, அச்சு
அசலாக அவரைப் போலவே இருப்பார். தாடி வைத்திருந்ததால் அவரை     நாங்கள் ‘தாடி தாத்தா’ என்று தான் அழைப்போம். தாடி என்ற அடைமொழி  இல்லாமல் எங்கள் தாத்தாவை நாங்கள் அழைத்ததாக நினைவே இல்லை.

‘பெரியவருக்கு காது கேட்காது. கை அசைத்துப் பேசுங்கள். வாய் அசைவையும், கை அசைவையும் வைத்து அவர் நன்றாகப் புரிந்து கொள்வார். தேவைப்பட்டால் எழுதிக் காண்பியுங்கள்’ என்று சொல்லிவிட்டு டிரைவர் காருக்குச் சென்று விட்டார்.

100  வயது பெரியவர் வரப் போகிறார் என்றதும் என் அப்பா, அம்மாவையும் அன்று அலுவலகத்திற்கு வரச் சொல்லியிருந்தேன். அலுவலகத்தில் என் அறையில் நான் என் அப்பா, அம்மாவுடன் அவரைச் சுற்றி அமர்ந்தேன்.

என் முகத்தைப் பார்த்தவாறு, என் வயது, குலம், கோத்திரம் போன்றவற்றை ஏதோ என்னை முன்பே தெரிந்த நபர் போல சொல்லிக் கொண்டே போனார். நாங்கள்  மூவரும் ஆச்சர்யத்தில் அதிசயத்தோம். இறுதியில் அவர் வந்த காரணத்தைக் கூறினார்.

‘எனக்கு வயது 100... கண் நன்றாகத் தெரியும். முறுக்கைக் கடித்து சாப்பிடும் அளவிற்கு பல் நன்றாக உள்ளது. ஆனால் காது மட்டும் இடியே விழுந்தாலும் கேட்காது. நீ கம்ப்யூட்டரில் கெட்டிக்காரியா இருப்பதைப் போல நான் ஜோசியத்தில் கெட்டிக்காரன்.  என் அறிவை யாருக்காவது தானமா கொடுத்து விட்டு தான் சாகணும்...எனக்குள்ளேயே என் ஞானம் அழுகிக் கொண்டிருக்கிறது. என் வீட்டில் 100 புத்தகங்களுக்கும் மேல் இருக்கு. எனக்கு அப்புறம் யார் அவற்றைப் படிக்கப் போகிறார்கள்? பயன்படுத்தப் போகிறார்கள்?’ என்று ஆதங்கத்தோடு பேசிக் கொண்டே போனார் அந்தப் பெரியவர்.

எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. யாருக்குக் கிடைக்கும் இந்த வாய்ப்பு. என் அப்பா, அம்மாவுக்கு கேட்கவே வேண்டாம்...

‘ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனை
சான்றோன் என கேட்ட தாய்’ – இது தான் அவர்களின் மனநிலை.

தங்கள் பெண்ணை, அறிவிலும், அனுபவத்திலும் முதிர்ந்த இப்படிப்பட்ட பெரியவர்  வந்து சந்தித்து,  தன் அறிவை தானம் செய்ய வருவது குறித்து ஆனந்த பெருமிதத்தில் திளைத்தார்கள். இப்படி என் அப்பா அம்மா மனதை சந்தோஷப்படுத்தியதில் எனக்கும் பேரானந்தம் தான்.

மீண்டும் அவர் என்னை சந்திக்க விரும்பியதன் காரணத்தைத் தொடர்ந்தார்.

புத்தகத்தின் பின்பக்க அட்டையில் நான் என் அப்பா அம்மா பெயரில் நடத்தி வருகின்ற ‘ஸ்ரீபத்மகிருஷ்’ என்ற அறக்கட்டளைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அப்பா, அம்மா மீது இவ்வளவு மரியாதை வைத்திருக்கும் பெண் கண்டிப்பாக நல்ல படிப்பாளியாக மட்டுமில்லாமல், ஒழுக்கமுள்ளவளாகவும், நேர்சிந்தனை கொண்டவளாகவும் தான் இருப்பாள். எனவே இவளிடம் தான் தன் வித்தையை தானம் செய்ய வேண்டும், இவள் தான் சரியான நபர்  என்று முடிவெடுத்ததாக அவர் கூறினார். மேலும் நான் அவரை வாயிலுக்கு வந்து வரவேற்ற மரியாதையையும் மதிப்பதாகக் கூறினார்.

நான் பெற்ற இப்பேற்றுக்கு கடவுளிடம் மனதார நன்றி செலுத்தினேன். என் முன்னால் இருக்கும் பெரியவருக்கு கை கூப்பி நன்றி தெரிவித்தேன்.

இதற்கிடையில் என் நிறுவனத்திலேயே தயாரிக்கபடும் டீயை ஆவிபறக்க சாப்பிட்டோம்.

கோடு போட்ட காகிதங்களையும், இன்ங் பேனாவையும் கொடுக்குமாறு கேட்டார். எனக்கு கோடு போட்ட பேப்பர்கள் பிடிக்காது. ஏனென்றால் அவை  எழுதும்  போது என் எண்ணங்களை கட்டுப்படுத்தும், ஃப்ரீயாக எழுத இயலாது என்பதால் வைத்துக் கொள்வதில்லை. அதுபோல இன்ங் பேனாவும் வைத்திருப்பதில்லை. நான் வேகமாக எழுதும் போது பேனாவின் நிப் வளைந்துவிடும். எனவே இன்ங் பேனாவும் இல்லை.

கோடு போடாத காகிதங்கள், ரீஃபில் பேனா, வைத்து எழுதுவதற்கு டேபிள் என்று வசதியாக அவரை அமரச் செய்தேன்.

பிள்ளையார் சுழி போட்டு எழுத ஆரம்பித்தார். அப்பா என்றால் சூரியன், அம்மா என்றால் சந்திரன் என்று ஜாதகத்தின் அடிப்படையை அன்றே தொடங்கி விட்டார். நாங்கள் மூவரும் பொறுமையாக அவர் சொல்வதைக் கேட்டோம். ஏற்கனவே நான் 15 வருடங்களுக்கு முன்பே அஸ்ட்ராலஜி சாஃப்ட்வேர் தயாரித்திருக்கிறோம். அந்த அனுபவம் இருந்ததால் பெரியவர் சொல்லிக் கொடுப்பது நன்றாகவே புரிந்தது எனக்கு.

‘நான் ரொம்ப நாள் உயிரோடு இருக்க மாட்டேன். இன்னும் 3 மாதமோ, 6 மாதமோ அவ்வளவு தான் என் ஆயுள். அதற்குள் நான் எல்லாவற்றையும் உன்னிடம் ஒப்படைக்கணும் குழந்தாய். எனவே தினமும் 1 மணி நேரம் எனக்காக ஒதுக்குவாயா? நான் வந்து உனக்குக் கற்றுத் தருகிறேன். அப்புறம் என்கிட்ட இருக்கும் புத்தகத்தை எல்லாம் உன்கிட்ட ஒரு நல்ல நாள் பார்த்துக் கொடுக்கணும்’ – இது தான் பெரியவரின் விண்ணப்பம்.

 அன்று நாங்கள் எந்த பதிலையும் சொல்லவில்லை. சரி என்று தலையை மட்டும் ஆட்டினேன். எங்களை விட்டு பிரிய மனமில்லாமல் இரவு 9 மணி அளவில் கிளம்பினார். கிளம்பும் போது 116 ரூபாயை(அவர் சம்பிரதாயப் படி) தான் கொண்டு வந்திருந்த வெற்றிலை, பாக்கு, பழம், குங்குமம் இவற்றோடு வைத்துக் கொடுத்தார் எனக்கு.

‘ஜோதிடத்தில் ஜாம்பவனான நான் கம்ப்யூட்டரில் புலியான உன்னிடன் தோற்றுப் போவதற்காகத் தான் வந்திருக்கிறேன்...நான் உன்னிடம் தோற்றுப் போவதில் எனக்குப் பெருமை தான்..’ என்று சொல்லிவிட்டு விடைபெற்றார். இவரது இந்த வார்த்தைகள் என்னை மிகவும் பாதித்தது. ‘நடப்பெதெல்லாம் நல்லதுக்கா, கெட்டதுக்கா’ மனதுக்குள் மிகப்பெரிய கேள்விக்குறி.

 அன்றில் இருந்து பெரியவர் ஒருநாள் விட்டு ஒரு நாள்  என் நிறுவனத்துக்கு 2 மணி நேரம் வருகிறார். ஞாயிறு அன்று நானும், என் பெற்றோரும் அவருக்கும் சேர்த்து சமையல், சாப்பாடு செய்து கொண்டு காலையிலே அவர் கோட்டூர்புரத்தில் இருக்கின்ற அவர் இருப்பிடம் சென்று மதியம் வரை தங்கி ஜோதிடப் பாடம் கற்றுக் கொண்டு திரும்புகிறோம்.

என் அம்மாவை தன் மகளாகவும், அப்பாவை மாப்பிள்ளையாகவும், என்னை பேத்தியாகவும் பாவித்து,  ‘மகள், மாப்பிள்ளை, பேத்தி’ என்று  உறவு முறை சொல்லி வாஞ்சையாக அழைப்பதைப் பார்க்கும் போது எங்கள் மூதாதையர்களில் ஒருவரே நேரில் வந்திருந்து இப்படி அனுகிரகம் செய்வதைப் போல் தோன்றுகிறது. இந்த வருட தமிழ் புத்தாண்டு எந்த வருடமும் இல்லாத அளவிற்கு மிகச் சிறப்பாக இருந்தது.  பழம், பூ, மாங்காய், வேப்பம்பூ, வெல்லம், அரிசி  என்று சாஸ்திரம் தப்பாமல் வீடு தேடி வந்து சீர் வைத்துக் கொடுத்து ஆசிர்வாதம் செய்துவிட்டுச் சென்றார்.

அவரது புத்தகங்கள் என் அலுவலகத்துக்கு வருவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது.  இவர் ஜோதிடத்தால் பயனடைந்த(இழந்த பல கோடிகளைத் திரும்பப் பெற்ற) ஒரு பிசினஸ் மேன் ஒருவர் தான் தங்குவதற்கு ஏசியுடன் வீடு கொடுத்துள்ளார். தள்ளாத இந்த வயதிலும், தானாகவே மடியாக சமைத்து சாப்பிடுகிறார். காக்காய்க்கு அன்னமிட்ட பிறகு தான் சாப்பிடுகிறார். ஜோதிடத்தில்  வருகின்ற வருமானத்தை வைத்து ஜீவனம் செய்கிறார். தனக்குப் போக இருப்பதை தானம் செய்கிறார்.

தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி, சான்ஸ்கிரிட் என்று ஒன்பது மொழிகளை சரளமாகப் பேசுகிறார். ஜோதிடத்தில் வல்லுநராக திகழ்கிறார். கம்ப்யூட்டர் முன் அமர்ந்து கீபோர்டில் சர்வ சாதாரணமாக டைப் செய்து பிரிண்ட் எடுக்கிறார். வெளியிடங்களுக்குச் செல்லும் போது லேப்டாப்பை எடுத்துச் செல்கிறார். இவர் ஜோதிடம் சொல்லி, நாள் குறித்துக் கொடுத்து பிசினஸ் தொடங்கிய பலர் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள்.

இவரிடம் பர்சனல் விஷயங்களைப் பற்றிக் கேட்டால் மட்டும் பதில் வருவதில்லை. கண்களில் ஆழ்ந்த சோகம் தெரிகிறது. அதை மறைப்பதற்கு  ‘என்ன...சொல்லிக் கொடுக்கும் போது பேச்சை மாற்றுகிறாய்?’ என்று செல்ல கோபத்தோடு பாடத்தைத் தொடர்கிறார்.

இவரது தொடர்பு கிடைத்த நாளில் இருந்து என் டேபிளில் கோடு போட்ட காகிதங்களும், இன்ங் பேனாவும் இடம் பெற்றுள்ளது. இப்போதெல்லாம் எனக்கும் இவை பிடிக்கிறது.

இப்படியே நாட்கள் சென்று கொண்டிருந்தன...

ஜோதிடத்தில்  மட்டுமல்லாது, அவரது அனுபவங்கள் அனைத்தும் எனக்குள் சென்று கொண்டிருந்தன...

அவர் தன் அனுபவங்களை என்னிடம் ஷேர் செய்து கொள்கின்ற சில நேரங்களில் நான் டல்லாக இருந்தால்,

 ‘என்ன மக்கு போல இருக்கிறாய்....புத்தகமெல்லாம் எழுதறே...இப்படி டல்லா இருக்கியே...நீ எழுதறியா? இல்லா யாராவது எழுதிக் கொடுத்து உம்பேரைப் போட்டுக்கறியா?...’

- என்று என்னை உரிமையாக விமர்சித்து, என் மனநிலையை இயல்புக்குக் கொண்டு வருவார்.

 நாளை அல்லது நாளை மறுநாள் நான் உயிரோடு இருக்க மாட்டேன் என்று இரண்டு நாட்களுக்கு முன் சொன்னார்...

சொன்னதை நிரூபித்து விட்டார்.   சொன்ன நாளில் இறைவனடி சேர்ந்து விட்டார். 

அழுகை வரவில்லை...நல்லதொரு ஆசானை இழந்து விட்ட துக்கம் மனதை கனக்கச் செய்தது. நல்ல படிப்பினையைக் கொடுத்து விட்டுச் சென்றுள்ளார்.

ஆம். அவரது வார்த்தைகள் என் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.

 ‘என் அறிவை யாருக்காவது தானமா கொடுத்து விட்டு தான் சாகணும்...எனக்குள்ளேயே என் ஞானம் அழுகிக் கொண்டிருக்கிறது...’

தன் அனுபவம் மற்றும் ஞானம் இவற்றை  பதிவு செய்யாமல் சுமையாக தனக்குள்ளேயே தேக்கி வைத்துக் கொள்வது எத்தனை பெரிய துக்கத்தைக் கொடுக்கும் என்பதை சொல்லாமல் சொல்லி விட்டுச் சென்று விட்டார். தன் இறுதிக் காலத்தில் என்னிடம் அவர் பகிர்ந்து கொண்டது கொஞ்சம் தான். அவை கடலில் கரைத்தப் பெருங்காயம் தான்.

அறிவு, ஞானம், கல்வி, பணம்...
இவை அனைத்தும்  நமக்கு மட்டுமே பயனளித்தால்
அது மிகப்பெரிய பாரமாகிப் போய் விடும்...
அத்தனையையும் பகிர்ந்து கொள்ள வேண்டும்
என்கின்ற மாபெரும் உண்மையைச்
சொல்லி விட்டுச் சென்று விட்டார்,  100 வயது  தாத்தா...

அனுபவஸ்தர்கள் வாழ்ந்து
சொல்லி விட்டுச் சென்றுள்ளார்கள்...
கடைபிடிப்பதும், நிராகரிப்பதும்
அவரவர் விருப்பம்.




வாழ்த்துக்கள். 
காம்கேர் கே புவனேஸ்வரி
19-02-2014


Thursday 13 February 2014

பிப்ரவரி 14

ஹாய்  மங்கையர் மலர் ரீடர்ஸ்,

முதல் ஆண்டு நிறைவு - பருத்தி
2-ம் ஆண்டு நிறைவு - காகிதம்
3-ம் ஆண்டு நிறைவு - தோல்
4-ம் ஆண்டு நிறைவு - பழமும் மலரும்
5-ம் ஆண்டு நிறைவு - மரம்
6-ம் ஆண்டு நிறைவு - சர்க்கரை
7-ம் ஆண்டு நிறைவு - கம்பளி
8-ம் ஆண்டு நிறைவு - உப்பு
9-ம் ஆண்டு நிறைவு - செம்பு
10-ம் ஆண்டு நிறைவு - தகரம்
12-ம் ஆண்டு நிறைவு - பட்டு நைஸ்லின்
15-ம் ஆண்டு நிறைவு - கிறிஸ்டல்
20-ம் ஆண்டு நிறைவு - சைனா
25-ம் ஆண்டு நிறைவு - வெள்ளி
30-ம் ஆண்டு நிறைவு - முத்து
40-ம் ஆண்டு நிறைவு - ரூபி
50-ம் ஆண்டு நிறைவு - பொன்
60-ம் ஆண்டு நிறைவு - வைரம்
இதெல்லாம் என்ன என்று யோசிக்கிறீர்களா? 
??????
??????
??????
??????
??????
??????
??????
??????
??????
??????
??????
??????
??????
??????
??????
??????
??????
??????
??????
??????
??????
??????
??????
??????
??????
??????
??????
??????
??????
??????
??????
??????
??????
??????
??????
??????
இதெல்லாம் கல்யாணம் முடிஞ்சு ஒவ்வொரு வருஷம் நிறைவு பெறும் வருடங்களின் பெயர்கள். 

இன்று பிப்ரவரி 14, 2014. valentine's day.
காதலிப்பவர்கள் காதலில் வெற்றி பெற்று திருமணம் செய்து கொண்டு மேலே சொன்ன அத்தனை வருடங்களையும் சந்தோஷமாக வாழ வாழ்த்துக்கள்.

குறிப்பு

இந்தியாவில் மட்டும் தான் valentine's day. ஆண்-பெண் காதலுக்காக மட்டும் கொண்டாடி மிகைப்படுத்துகிறார்கள்.  ஆனால், மேலை நாடுகளில் அன்பிற்கு இலக்கணமாக உள்ள ஒரு தினமாகக் கொண்டாடப்படுகிறது. அதாவது, குழந்தைகள் பெற்றோர்களிடம் காட்டுகின்ற அன்பு, சகோதரன் சகோதரிகளுக்கிடையே காட்டும் அன்பு, இளைஞர்கள் முதியோரிடம் காட்டும் அன்பு, மாணவர்கள் ஆசிரியர்களிடம் காட்டும் அன்பு என அன்பின் பரிமாணங்களைப் பகிர்ந்து கொள்ளும் தினமாகக் கொண்டாடி மகிழ்கிறார்கள் என்பதை இந்நாளில் பதிவு செய்ய விரும்புகிறேன்.
காம்கேர் கே புவனேஸ்வரி

Monday 10 February 2014

இண்டர்நெட் பாதுகாப்பு தினம்

ஹலோ மங்கையர் மலர் ரீடர்ஸ், 

        ஸ்மார்ட் லேடி தொடருக்கும் அதன் தொடர்பான ஃபேஸ்புக் மற்றும் ப்ளாகிற்கும் ஆதரவளித்து வரும் வாசகிகள் அனைவருக்கும் மங்கையர் மலர் சார்பில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இன்று மிக முக்கியமான நாள்.        

இன்று Safer internet day (SID), ஃபிப்ரவரி 11. இண்டர்நெட் பாதுகாப்பு  குறித்த விழிப்புணர்வு நாள்.  Cyber பயணம் குறித்து சில விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். 

உலகம்...நல்லதும் இருக்கும், கெட்டதும் இருக்கும். இன்று நாம் பயணித்துக் கொண்டிருக்கும் சைபர் வேர்ல்டிலும் இரண்டுமே கலந்திருக்கும். கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் சார்ந்த உலகிற்கு சைபர் வேர்ல்ட் என்று பெயர். அதில் பாதுகாப்பாய் பயணிக்கும் சூட்சுமத்தைக் கற்றுக் கொள்ள வேண்டியது நம் ஒவ்வொருவருக்கும் அவசியமாகிறது. ஏனெனில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகோடு, இரயில் தண்டவாளம் போல சைபர் வேர்ல்டும் இணைந்து வந்து கொண்டிருக்கிறது. இரண்டையும் பேலன்ஸ் செய்தே வாழ வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் அறிமுகமான ஆரம்ப காலகட்டங்களில் நம் வாழ்வில் இருந்து, மிகவும் பின்தங்கி இருந்த சைபர் வேர்ல்ட், கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி இன்று இணையாக வந்து கொண்டிருக்கிறது. இனிவரும் காலத்தில் சைபர் வேர்ல்ட் இன்னும் வேகமாக முன்னேறிச் சென்று விடும்; நம் வாழ்க்கை முழுமையாக சைபர் வேர்ல்டைச் சார்ந்தே இருக்கும் என்பதில் சந்தேகத்துக்கு இடமே இல்லை.

இப்போது இந்த உலகம் நமக்கு இரண்டு வாய்ப்புகளைக் கொடுத்துள்ளது. ஒன்று நேரடியாக அந்தந்த அலுவலகங்களுக்குச் சென்று வசதிகளைப் பயன்படுத்திக் கொள்வது; மற்றொன்று இன்டர்நெட்டில் ஆன்லைனில் உட்கார்ந்த இடத்தில் இருந்தே அவற்றைப் பெறுவது.

இனி வரும் காலத்தில், சைபர் வேர்ல்டில் எல்லாமே இன்டர்நெட் மயமாக்கப்பட்டிருக்கும். புத்தகங்கள், தியேட்டர்கள், கடைகள், லைப்ரரிகள், பள்ளிகள், கல்லூரிகள்...இப்படி எல்லாமே இருக்கும் இடம் தேடி இன்டர்நெட் மூலம் வந்து விடும். மனிதர்களின் சேவைகள் குறைந்து எங்கும் எதிலும் கம்ப்யூட்டர் மற்றும் அதன் தொழில் நுட்பங்களின் ஆதிக்கம் நிறைந்திருக்கும். தவித்த வாய்க்கு தண்ணீர் கிடைக்காத குறையாக மனித உதவி குறைந்து போயிருக்கும். எனவே, இப்போதிலிருந்தே, வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பத்தோடு இணைந்து வளர்ந்து வாருங்கள். அப்போது தான் இனி வரும் காலத்தில் மற்றவர்களை சார்ந்திருக்காமல் வாழ முடியும்.

நம் வாழ்வில் நாம் சந்திக்கின்ற அத்தனை பிரச்சனைகளையும் சைபர் வேர்ல்டில் கம்ப்யூட்டர், இன்டர்நெட் சார்ந்தவைகளாக சந்திக்க வேண்டியுள்ளது. டெபிட் கார்ட், கிரெடிட் கார்ட் மோசடிகள், நெட்பேங்கிங் சிக்கல்கள், மொபைல் போன் அம்பலங்கள்,  இன்டர்நெட் மிரட்டல்கள், இமெயி(லி)ல் அச்சுறுத்தல்கள், ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சோஷியல் நெட்வொர்க்குகளில் அத்துமீறல்கள்,  யு&டியூபில் அம்பலமாகும் இரகசியங்கள், வெப்சைட்டுகளில் ஆன்லைன் மோசடிகள், ஆன்லைன் ஆள்மாறட்டம், கம்ப்யூட்டரில் வைரஸ்கள், குழந்தைகள் மீதான ஆபத்துக்கள் என்று ஏகப்பட்ட ஆபத்துக்கள் நித்தம் நம்மை பயமுறுத்திக் கொண்டு தான் இருக்கின்றன. 

இதுபோன்ற கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் சார்ந்த குற்றங்களுக்கு சைபர் க்ரைம் என்று பெயர். சைபர் குற்றங்களுக்கும், ஆபத்துக்களுக்கும் பயந்து கொண்டு சைபர் வேர்ல்டை விட்டு விலகி விடவும் முடியாது. அப்படி விலகினால், நாம் இந்த சமுதாயத்தை விட்டே விலகி வாழ வேண்டிய சூழல் உண்டாகி விடும். மாற்றங்களோடு இணைந்து பயணிக்கும் போது தான் சமுதாயத்தோடு ஒன்றி வாழ முடியும்.

நம் நாட்டில் கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆரம்ப காலகட்டத்திலேயே சாஃப்ட்வேர் நிறுவனத்தை தொடங்கி, இன்டர்நெட் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்ட காலகட்டத்தில் சைபர் வேர்ல்டில் காலடி எடுத்து வைத்ததோடு, தமிழையும், கம்ப்யூட்டரையும் இணைத்து சாஃப்ட்வேர் தயாரிப்புகளை உருவாக்கி, அம்முயற்சியில் வெற்றி பெற்றேன். அந்த தொழில்நுட்ப முயற்சி இத்துறையில் முதல் முயற்சியாகும் என்பது குறிப்பிடத் தக்கதாகும். 

என் 20 வருட தொழில்நுட்ப அனுபவத்தினாலும், 70-க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர் மற்றும் சாஃப்ட்வேர் தொடர்பான நூல்களை எழுதிய அனுபவத்தினாலும், பயிலரங்குகள் பல நடத்துவதன் மூலம் ஆயிரக்கணக்கானவர்களை சந்திப்பதால் கிடைக்கின்ற நேரடி அனுபவத்தினாலும், சைபர் வேர்ல்டில் பாதுகாப்பாய் பயணிப்பதற்குத் தேவையான தொழில்நுட்ப விவரங்களை தொகுத்து புத்தகமாக்கியுள்ளேன். 

புத்தகத்தின் பெயர்:  நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்
                                         (சைபர் க்ரைம் குறித்த விழிப்புணர்வு புத்தகம்)
மங்கையர் மலர் 15 ஜனவரி 2014 இதழில் வெளியான புத்தக விமர்சனம்

சென்னை காவல்துறை அதிகாரி டாக்டர் ஆர். சிவகுமார்(DC, CCB, Chennai)  அவர்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில், நாம் சந்திக்கின்ற சைபர் குற்றங்களுக்கு சட்டரீதியாக அணுகும் முறைகளையும், காவல் துறையில் புகார் அளிக்கும் வழிமுறைகளையும் இந்நூலில் விளக்கிக் கொடுத்துள்ளேன். 

'நீங்கள் உங்கள் அளவில் பாதுகாப்பாக இருங்கள், உண்மையாக செயல்படுங்கள்'--இதுதான் காவல்துறையினர் பொதுமக்களுக்கு வலியுறுத்தும் கருத்துக்கள்.

சைபர் வேர்ல்டில் மூன்றாவது கண் நம்மை கண்காணித்துக் கொண்டிருக்கிறது என்ற உணர்வோடு தான் பயணம் செய்ய வேண்டும். அது காமிராவின் கண்ணாக இருக்கலாம்; வேவு பார்க்கும் ஸ்பை சாஃப்ட்வேர்களின் கண்ணாக இருக்கலாம்; வைரஸின் கண்ணாக இருக்கலாம்; பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு டீ குடிக்கும் நண்பனின் கண்களாக இருக்கலாம்...எச்சரிக்கை உணர்வோடு தான் பயணிக்க வேண்டும். அப்போது தான் சைபர் வேர்ல்டில் நம் பயணம், பாதுகாப்பான பயணமாக இருக்கும்.

வாழ்த்துக்கள். Happy Journey!

           -  காம்கேர் கே.புவனேஸ்வரி
                                                                                                         நன்றி: விகடன் பிரசுரம்

Saturday 8 February 2014

நீங்களும் படைப்பாளி தான்!

ஹாய், நீங்கள் மங்கையர் மலரை தொடர்ந்து படித்து வருகிறீர்களா? உங்களுக்கும் மங்கையர் மலரில் எழுத விருப்பமா? உங்கள் ஆர்வத்தை ஊக்குவிக்க மங்கையர் மலர் ப்ளாக் www.mmsmartlady.blogspot.in தயாராய் உள்ளது. தமிழில் யுனிகோடில் டைப் செய்து mmsmartlady@gmail.com என்ற இமெயில் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். தேர்வாகும் படைப்புகள் மங்கையர் மலர் ப்ளாகில் பப்ளிஷ் ஆகும். வாழ்த்துக்கள். காம்கேர் கே புவனேஸ்வரி
Picture Courtesy: Google

Sunday 2 February 2014

பிப்ரவரி 4 உலக புற்றுநோய் விழிப்புணர்வு தினம்

அன்பார்ந்த மங்கையர் மலர் வாசகிகளே,
நாளை (பிப்ரவரி 4, 2014) உலக புற்றுநோய் விழிப்புணர்வு தினம். புற்று நோய்க்கு மிக முக்கியக் காரணமான சிகரெட் பிடிக்கும் வழக்கமுள்ள உங்கள் அண்ணன், தம்பி, அப்பா, கணவன் யாராக இருந்தாலும் அவர்களிடம்  நான் இங்கே பகிர்ந்துள்ள தினமலர்.காமில் திரு எல். முருகராஜ் அவர்கள் எழுதியுள்ள ப்ளீஸ்...சிகரெட் பிடிக்காதீங்க...  என்ற கட்டுரையைக்  கொடுத்துப் படிக்கச் செய்யுங்கள். அவர்களில் ஓரிருவர் மனம் மாறினாலே இந்த சமுதாயத்துக்கு நாம் செய்கின்ற மாபெரும் உதவியாக இருக்கும்.

பிப்ரவரி 4-ம்தேதி கேன்சர் தினம்.
உலகம் முழுவதும் ரோஸ் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
மருந்து மாத்திரைகளை விட அன்பும்அரவணைப்பும் அதிகம் தேவைப்படுவது இந்த புற்றுநோய்க்குதான். இந்த நோய் தானாக வருவதை விட புகையிலைசிகரெட் போன்ற பழக்கங்களால் வலிய வரவழைத்துக் கொள்பவர்களே அதிகம்.

அதிலும் இளைஞர்கள் சிகரெட் பிடிக்கம் பழக்கத்தால் குரல்வளை புற்று நோய் வந்து பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகக்கூடாது என்பதற்காகஅந்த நோயின் பிடியில் சிக்கி திரும்பிய ஒருவர் தனது வாழ்வின் லட்சியமே இளைஞர்களை சிகரெட் பிடிக்கும் பழக்கத்தில் இருந்து மீட்பதுதான் என்ற எண்ணத்தோடு எழுபது வயதிலும் இளைஞர்கள் இருக்குமிடமான கல்லூரி போன்ற இடங்களை தேடித்தேடிப்போய் பரப்புரை செய்துவருகிறார்.


அவரது பெயர் .சர்புதீன்சென்னை முகப்பேரைச் சேர்ந்தவர்.

மாநில அரசு ஊழியராக இருந்த போது அவர் சார்ந்திருந்த அமைப்பின் செயலாளராகவும் இருந்தார்இந்த பொறுப்புக்கு முக்கிய தேவையான பேச்சுக்கலையிலும் வல்லவர்.

இவருக்குள்ள ஒரே கெட்ட பழக்கம் சிகரெட் பிடிப்பதுதான்இவருக்கு பொழுது போகாத போதெல்லாம் சிகரெட் பிடிப்பார்நண்பர்கள் யாருக்கு பொழுது போகவில்லை என்றாலும் இவரிடம் வந்து சிகரெட் பிடித்து செல்வார்கள்இப்படி ஒரு நாளைக்கு இரண்டு பாக்கெட் சிகரெட் பிடிப்பது என்பது இவரது அன்றாட அலுவலில் சேர்ந்துவிட்டதுஇப்படி பல ஆண்டுகள் தொடர்ந்த இவரது சிகரெட் பழக்கம் விபரீதமாக வெளிப்பட்டது.

ஒரு நாள் காலை படுக்கைவிட்டு எழுந்தவர் பேசமுடியாது திணறினார்பக்கத்தில் இருந்த மருத்துவ மனைக்கு சென்ற போது அவர்கள் காது மூக்கு தொண்டை நிபுணரை கலந்து ஆலோசிக்க சொன்னார்கள்அவர் கொடுத்த மருந்து மாத்திரைகளை சாப்பிட்டபோது அது ஒரு வாரம் வேலை செய்ததுஅதன் பிறகு நிலமை இன்னும் மோசமாகியது.

பிரிதொரு மருத்துவ மனையின் ஆலோசனையின் பேரில் தொண்டை சதையை எடுத்து சோதனை செய்து பார்த்தபோதுதான்சர்புதீனுக்கு குரல்வளை புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது.

மனிதர் ஆடிப்போய்விட்டார்குணப்படுத்த முடியுமாஎன்று எங்கெங்கோ போய் முட்டி மோதி பார்த்தார்இனிமேல் சிகரெட்டை தொடவே மாட்டேன் என்று சூளுரைத்தார்இதெல்லாம் தாமதமான முடிவுநீண்ட நாள் சிகரெட் குடித்ததன் பலனாக கிடைத்த இந்த குரல்வளை புற்றுநோய்க்கு பலியாகிவிடாமல் உங்களை காப்பாற்றுகிறோம் ஆனால் இனிமேல் பேசுவது என்பதும் சுவாசிப்பது என்பதும் முடிந்து போன விஷயம் என்றார்கள்.

அதன்படியே நடந்தது. 

மூக்கு என்பது முகத்தின் ஒரு அங்கமாகத்தான் இன்று வரை இருக்கிறதுஅதன் குணாதிசயமான நுகரும் தன்மை இழந்துவிட்டதுசுவாசம் தொண்டையில் போடப்பட்ட குழியின் வழியாகவே நடக்கிறதுஇதெல்லாம் நடந்தது இவரது ஐம்பதாவது வயதில்விரக்தியான வாழ்க்கையில் இருந்த போதுதான் சென்னை அடையார் கேன்சர் இன்ஸ்டியூட் டாக்டர் விதுபாலாவின் அறிமுகம் கிடைத்தது.

அவர் இவரிடம் நிறைய பேசி நம்பிக்கையை வளர்த்தார்சிகரெட் பிடிக்கும் பழக்கத்தால் உங்களுக்கு ஏற்பட்ட குரல்வளை புற்று நோய் நமது இளைஞர்கள் யாருக்கும் ஏற்படக்கூடாது என்பதற்காக நீங்கள் ஏன் பள்ளிகல்லூரி போன்ற இடங்களிலும் இளைஞர் கூடுமிடங்களிலும் பேசக்கூடாது என்று சொன்ன போது நான் எப்படி பேச முடியும் என்றார்.

முயற்சித்தால் எல்லாம் முடியும் என்று சொன்னதுடன் இது தொடர்பாக சிறப்பு பயிற்சி கொடுத்தனர்பின்னர் "எலக்ட்டோ ஸ்பீச் 'என்ற சிறிய கைக்கடக்கமான கருவியை கொடுத்தனர்பேட்டரியால் இயங்கும் இந்த கருவியை தொண்டையில் வைத்துக்கொண்டு இவர் பேசும்போது ரோபா என சொல்லப்படும் எந்திர மனிதன் பேசுவது போல பேச்சு வந்தது.

சர்புதீனுக்கு பெரிதும் சந்தோஷம் தனது தேவைகளை காலம் காலமாக பக்கம் பக்கமாக எழுதி காண்பித்த நிலைமைக்கு விடுதலை கிடைத்ததுஇவர் பேசுவது முதலில் புரியாதது போல இருக்கும்சிறிது நேரம் கவனம் செலுத்தினால் பிறகு எளிதான புரிந்து விடும்முதன் முதலாக இவருடன் மொபைல் போனில் பேசும் போது ஒரு மெஷின் பேசுவது போலத்தான் உணருவார்கள் ஆனால் பிறகு போகப்போக இவரது பேச்சு பிடிபட்டுவிடும்.

யார் சொல்லியும் சிகரெட் பழக்கத்தை விடாத பல இளைஞர்கள் இவர் மைக்கில் பேசுவதை
கேட்டு அந்த நிமிடமே சிகரெட்டை தூக்கி எறிந்திருக்கின்றனர்இப்படி ஒருவரல்ல இருவரல்ல பல ஆயிரம் பேரை சிகரெட் பழக்கத்தில் இருந்து மீட்டு இருக்கிறார் மீட்டு வருகிறார்.

இவரது இந்த தன்னலமற்ற சேவையை பாராட்டி பலர் பாராட்டி விருதுகள் கொடுத்த போதும்எம்புள்ளைய சிகரெட் பழக்கத்தில் இருந்து மீட்டுக்கொடுத்த ஐயா நீங்க நல்லா இருக்கணும் என்று சொல்லும் ஏழை பெற்றோர்களின் வாழ்த்தையே பெரிதாக எண்ணுகிறார்.

இவரிடம் முதல் முறையாக பேசும்போது ஒரு எந்திரத்திடம் பேசுவது போலத்தான் இருக்கும்கொஞ்சம் புரிபடாது கவனத்தை சிதறவிடாமல் பேசினால் புரியும். 

உங்கள் பகுதி பள்ளிகல்லூரியில் ஏதேனும் விழா நடக்கும் போது இவரை ஒரு பதினைந்து நிமிடம் பேசுவதற்காக வாய்ப்பு கொடுத்தால் நிச்சயம் சிகரெட் பிடிக்கும் இளைஞர்கள் மீட்டு எடுக்கப்படுவார்கள்.

வயதை மீறி தனது நோயைத்தாண்டி ஆரோக்கிய சமுதாயம் அமைய தனது வாழ்க்கை தொண்டுள்ளத்துடன் அர்ப்பணித்துக்கொண்டுள்ள சர்பபுதீனின் சேவைக்காகவாவது இறைவன் இவருக்கு நீண்ட ஆயுளை தந்தருளட்டும்.

-நன்றி:தினமலர்.காம்/நிஜக்கதை பகுதி

- காம்கேர் கே. புவனேஸ்வரி