Thursday 20 March 2014

மார்ச் மூன்றாம் வெள்ளிக் கிழமை என்ன தினம்?

மார்ச் 21, 2014
உலக தூக்க விழிப்புணர்வு தினம்
காம்கேர் கே புவனேஸ்வரி

மார்ச் மாதம் மூன்றாம் வெள்ளிக் கிழமை உலக தூக்க விழிப்புணர்வு தினம். தூக்கத்துக்குக் கூடவா விழிப்புணர்வு?
ஆம். இன்று தூக்கமின்மை தான் பல பிரச்சனைகளுக்குக் காரணமாக உள்ளது. வேலைச் சுமையினால் மன உளைச்சல், ஸ்ட்ரெஸ் என்றெல்லாம் இளைஞர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே? அதற்கெல்லாம்  மிக முக்கியக் காரணம் தூக்கமின்மை தான். இரவில் நன்றாக தூங்கி, வேளா வேலைக்கு சத்தான சாப்பாடு சாப்பிட்டு வந்தாலே செய்கின்ற வேலையில் முழுமையாக ஈடுபட முடியும். மனநிறைவு கிடைக்கும். ஸ்ட்ரெஸ் குறையும்.
ஆனால், இன்றைய இளைய தலைமுறையினரின் ஒருநாள் பொழுது எப்படி செல்கிறது என்று பார்ப்போமா?
நடுஇரவு வரை கம்ப்யூட்டர், மொபைல், சமூக வலைதளங்களில் மூழ்கி விடியற்காலையில் தூங்க ஆரம்பித்து, எட்டு மணிக்கு எழுந்து அரக்க பரக்க காலைக் கடன்களை முடித்து, காபி கூட சாப்பிட நேரமில்லாமல் விழுந்தடித்துக் கொண்டு ஆஃபீஸ் சென்று மதியம் வரை சாப்பிடாமல் வேலை செய்து, மதியம் இரண்டு மணிக்கு மேல் ஒப்புக்கு ஏதோ சாப்பிட்டு, நான்கைந்து முறை டீ, காபி சாப்பிட்டு, ஸ்ட்ரெஸ் குறைக்க மூன்று நான்கு முறை சிகரெட் பிடித்து, மாலையில் ஸ்நாக்ஸ் என்ற பெயரில் எண்ணெயில் பொரித்த பண்டங்களை சாப்பிட்டு, திரும்பவும் வேலை செய்து, 2 மணி நேரம் பிரயாணம் செய்து இரவு வீடு திரும்பி, டிவி பார்த்துக் கொண்டே சாப்பிட்டு திரும்பவும் நடுஇரவு வரை கம்ப்யூட்டர், மொபைல்….. இதே தொடர்கதை தான்.
இதில் தூக்கம், நல்ல தூக்கம், அமைதியான தூக்கம் என்பது ஒரு நாளின் 24 மணிநேரத்தில் எந்த இடைவெளியிலும் வரவில்லையே. சாப்பாடு, தூக்கம், வேலை, விளையாட்டு, எல்லாமே கடமைகளாகவே போய்விட்டனவே. இது தான் எல்லா விதமான ஸ்ட்ரெஸூக்கும் காரணம்.
மனதில் எழுதி வைக்கும் கலை!
மனமும் உடலும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. இரண்டையும் ஆளத் தெரிந்தவர்கள் பாக்கியசாலிகள். கொஞ்சம் பயிற்சி எடுத்தால் எல்லோராலும் முடியும். காலையில் 4 மணிக்கு எழுவதற்கு அலாரம் வைக்கவே தேவையில்லை. மனதில் எழுதி வைத்து விட்டுத் தூங்கினாலே காலை 4 மணிக்கு ‘டான்’ என்று விழிப்பு வந்து விடும். மனதில் எழுதி வைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. முழுமையான ஆழமான நம் மீது ஆளுமை இருந்தாலே ஒழிய அது சாத்தியமில்லை.
எனக்குத் தெரிந்த பெண்மணி ஒருவர் பல வருடங்களாகவே 3 மணிக்கு எழுந்து விடுவார். கிரியேடிவ் பர்சனாலிடி. அமைதியாக எழுதுவது, தன்  ப்ராஜெக்ட்டுகளுக்குத் தேவையான ‘ப்ரீ ப்ராசஸ்’ பணிகளை தயார் செய்வது போன்றவற்றை அதிகாலை 3 மணி முதல் 6 மணிக்குள் முடிப்பாராம். பகலில் தூக்கம் வராதா? என்று கேட்டதற்கு தூக்கம் வராது. மிகவும் புத்துணர்வாகத் தான் இருக்கும். இன்னும் சொல்லப் போனால் காலையில் 6 மணி, 7 மணி வரை தூங்கினால் தான் சோர்வாக இருக்கும் என்றார்.
3, 4 மாதங்கள் தொடர்ந்து இதுபோல வேலை செய்து கொண்டே இருக்கும் போது என்றாவது ஒரு நாள் உடலை அடித்துப் போட்டாற் போல தூக்கம் வரும். அன்று முழுமையாக ரெஸ்ட் எடுத்துக் கொண்டு விட்டால் போதும். உடலுக்குத் தெரியும் நமக்கு என்ன தேவை என்று. உடல் அதற்கு தேவையான அனைத்து சக்திகளையும் அதனுள்ளே இருந்து பெற்றுக் கொள்ளும் அற்புத ஆற்றல் பெற்றது. என்னால் உடலையும், மனதையும் ஒரே நேர்கோட்டில் பயணிக்க வைக்க முடிகிறது. உங்களாலும் முடியும், முயற்சியுங்கள் என்றார்.
நல்ல தூக்கத்துக்கு குட்டி குட்டி டிப்ஸ்கள்:
  1. ஒவ்வொரும் இரவில் குறைந்தபட்சமாக 5 மணி நேரமாவது தூங்க வேண்டும்.
  2. இரவு சாப்பிடுவதற்கு முன் நல்ல வெதுவெதுப்பான நீரில் குளித்து விட்டு சாப்பிட்டால் உடலும், மனமும் ரிலாக்ஸ் ஆவது உறுதி. நன்றாக தூக்கம் வரும்.
  3. இரவு தூங்குவதற்கு முன் தொலைபேசியில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தால் தூக்கம் கலையும். உரையாடலின் வைப்ரேஷன் தூக்கத்தை விரட்டி அடிக்கும். மன உளைச்சலை ஏற்படுத்தும்.
  4. இரவு நேரத்தில் பர்சனல் மொபைல் போனை சைலண்ட் மோடில் போட்டு விட்டு 9 மணி அல்லது 10 மணிக்குப் பிறகு மொபைலில் பேசுவதில்லை என்று உறுதி எடுத்துக் கொள்ளலாம்.
  5. மறக்காமல், அடுத்த நாள் மிஸ்டு கால் அல்லது குறுஞ்செய்திகளைப் பார்த்து அவர்களை அழைத்துப் பேசலாம்.
  6. முக்கிய தகவல்களுக்காக வீட்டுக்காகப் பயன்படுத்தும் மொபைல் போனை மட்டும் சைலண்ட்டில் போடாமல் வைத்துக் கொள்ளலாம்.
  7. இமெயிலிலும், ஃபேஸ்புக், டிவிட்டர், ப்ளாக் போன்ற சமூக வலைதளங்களில் இரவு நீண்ட நேரம் அமர்ந்திருந்தாலும் தூக்கம் தூரமாக ஓடி விடும். எனவே, இரவில் அவற்றுக்கு டாட்டா பை பை சொல்லி விடலாம்.
  8. மனதுக்குப் பிடித்த இசை கேட்கலாம். காமெடி டைம் பார்க்கலாம். புத்தகம் படிக்கலாம். எழுத விருப்பம் இருப்பவர்கள் எழுதலாம். வரைய விருப்பம் இருப்பவர்கள் வரையலாம். என்ன செய்தால் மனம் நிறைவாக இருக்குமோ அதை செய்யலாம். கால் மணி அல்லது அரை மணி நேரமானாலும் பரவாயில்லை. செய்து பாருங்கள். மாற்றம் தெரியும்.
  9. வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்களுடன் சிரித்துப் பேசி, அவர்கள் பள்ளி/கல்லூரியில் நடந்த விஷயங்களை பகிர்ந்து கொண்டால் மனம் ரிலாக்ஸ் ஆவது உறுதி.
  10. கூடுமானவரை சாப்பிடும் போதோ அல்லது தூங்கச் செல்வதற்கு முன்போ, கடுமையான விவாதங்களை தவிர்க்கப் பழகவும்.
  11. இரவில் முக்கால் வயிறு மட்டும் சாப்பிடும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
  12. கொழுப்பு சத்து மிகுதியான உணவு வகைகளைத் தவிர்க்கலாம்.
  13. சாப்பிட்ட பிறகு அரை மணி நேரம் கழித்து ஒரு கிளாஸ் வெந்நீர் சாப்பிடலாம். நல்ல ஜீரணம் ஆகும். 
  14. இரவில் படுக்கும் முன் அரை டம்ளர் சூடான பால் சாப்பிடலாம். தூக்கம் வரும். கண்டிப்பாக டீ, காபி போன்றவற்றை தவிர்க்கவும்.
  15. சாக்லெட் போன்ற இனிப்பு வகைகளையும் தவிர்க்கவும். அவை தூக்கத்தைத் துரத்தி அடிக்கும்.
  16. தூங்குவதற்கு முன் சிகரெட், மதுவை தள்ளி வையுங்கள்.
  17. வாகன விபத்துக்கள் பெரும்பாலும் தூக்கமின்மையினாலும், போதையில் வண்டியை ஓட்டுவதாலும் தான் ஏற்படுகிறது. இரவில் வண்டியை ஓட்டும் டிரைவர்கள் கண்களை தூக்கம் அழுத்தும் போது வண்டியை ஓரம் கட்டி விட்டு குட்டித் தூக்கம் போட்டு விட்டு பயணத்தைத் தொடரலாம்.
  18. படுக்கும் அறையில் மெல்லிய கலரில் நைட் லேம்ப் ஒன்றை ஒளிர விடவும். கும்மிருட்டில் தூங்க வேண்டாம்.
  19. என்ன பிரச்சனை என்றாலும் மனதில் ஓரங்கட்டி விட்டு தூங்க முயற்சிக்கவும். கவலைபடுவதால் மட்டும் பிரச்சனைகளுக்கு விடிவு காலம் ஏற்பட்டு விடாது. கடவுள் நம்பிக்கை இருந்தால் கடவுள் மீது பாரத்தைப் போடுங்கள் அல்லது உங்களுக்கு எதன் மீது நம்பிக்கை இருக்கிறதோ அதன் மீது பாரத்தை இறக்கி வைத்து விட்டு உறங்கச் செய்யுங்கள். இது கொஞ்சம் கஷ்டம் தான். கஷ்டப்பட்டு முயற்சியுங்கள். பலன் கிடைக்கும்.
  20. ஏதேனும் ஒன்றில் மீது எந்த கேள்வியும் கேட்காமல் கண்மூடித்தனமான நம்பிக்கை வைக்கப் பழகுங்கள். அது உங்கள் மன பாரத்தை இறக்கி வைக்கும் சுமை தாங்கியாகவாவது இருக்க உதவும்.

‘போதும், போதும்’ என்ற உங்கள் அனைவரின் மனக்கூவல் என் தூக்கத்தைக் கலைக்கிறது. ப்ளீஸ் என்னை தூங்க விடுங்கள்.
என்னைப் போலவே உங்களுக்கும் நல்ல தூக்கம் வர வேண்டுமா…மேலே சொன்ன விஷயங்களைப் பின்பற்ற முயற்சியுங்கள். அப்படியும் தூக்கம் வரவில்லையா, கடைசியாக ஒரே ஒரு டிப்ஸ்…
 உங்கள் இருப்பிடத்துக்கு அருகில் உள்ள சிவாலயம் செல்லுங்கள். அங்கு வீற்றிருக்கும் சண்டிகேஸ்வரருக்கு மூன்று முறை கைதட்டி அட்டண்டென்ஸ் கொடுங்கள். உறக்க நிலையில் இருக்கும் சண்டிகேஸ்வரரின் கவனத்தை ஈர்த்து, நல்ல தூக்கம் வர வேண்டும் என்று கடவுளிடம் வேண்டி தடைபடாத தூக்கத்துக்காக பிராத்தியுங்கள். நிச்சயம் நல்ல தூக்கம் வரும்.
இது ஜோக்கோ, காமெடியோ இல்லை. இனி எப்போதெல்லாம் கோயிலுக்குச் செல்கிறீர்களோ அப்போதெல்லாம் மறக்காமல் சண்டிகேஸ்வரருக்கு கைதட்டி அட்டண்டென்ஸ் கொடுக்கத் தவறாதீங்க…நல்ல தூக்கத்தை மிஸ் பண்ணாதீங்க…
Have a Happy Sleep.