அன்பார்ந்த மங்கையர் மலர் வாசகிகளுக்கு,
அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.
உங்கள் அனைவரோடும் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் முதல் தொழில் நுட்பத் தகவல்களுடன் எழுத்து மூலமாகவும், சாட்டிங் மூலமாவும் எழுதிக் கொண்டும், உரையாடிக் கொண்டும் பயணித்ததுக் கொண்டிருப்பது இனிய அனுபவமாகவும், மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கின்ற செயலாகவும் அமைந்திருக்கிறது.
மங்கையர் மலரும், காம்கேரும் இணைந்து, தமிழ் பத்திரிகை உலகிலேயே முதன் முதலாக, பெண்கள் அனைவரையும் ஜூனியர் பில்கேட்ஸாக்குகின்ற அருமையான முயற்சியை மிகுந்த நம்பிக்கையோடு மேற்கொண்டோம்.
அதன் தொடக்கமாக ‘மங்கலையர் மலர்’ இதழில் ‘ஸ்மார்ட் லேடி’ கம்ப்யூட்டர் தொடர், அதில் கம்ப்யூட்டர் தொடர்பான கேள்வி பதில் குவிஸ், அதற்காகவே பிரத்யேகமான இமெயில் வசதி, யு-டியூபில் மங்கையர் மலரின் வீடியோ ப்ரமோக்கள், அதைத் தொடர்ந்து ஃபேஸ்புக் மூலம் வாசகிகள் வட்டத்தை உருவாக்கிக் கொண்டு அதில் அவர்கள் தங்கள் தொழில் நுட்பச் சந்தேகங்களைக் கேட்டு தெளிவு பெறும் வசதி, அடுத்து மங்கையர் மலரில் ப்ளாக் மூலம் வாசகிகளின் திறமைக்கு ஊக்கம் கொடுத்தல்...என்று எங்கள் முயற்சிகளை ஒவ்வொன்றாக அதிகரித்துக் கொண்டே வந்தோம்.
எங்கள் அனைத்து முயற்சிகளுக்கும் நீங்கள் அனைவரும் உற்சாகத்துடன் கொடுத்த பேராதரவு எங்களுக்கு மிகவும் ஊக்கத்தைக் கொடுத்தது. உங்கள் ஆர்வம், இன்னும் ஏதேனும் செய்ய வேண்டும், உங்களுடைய தொழில் நுட்பத் தாகத்துக்கு எங்கள் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என்ற உத்வேகத்தைக் கொடுக்கிறது...
எத்தனை எத்தனை வாசகிகள்...
தன்னம்பிக்கைப் பெண்மணிகள்...
வீட்டில் இருந்தபடியே சாதனை பல செய்து ஜொலிக்கும் ஹவுஸ் மேக்கர்கள்,
புகைப்பட கலைஞர்கள்,
எழுத்தார்வளர்கள், சிறியதும், பெரியதுமாக பிசினஸ் செய்கின்ற பெண்கள், தங்கள் பிள்ளைகளின் வளர்ச்சியில் தாங்கள் மகிழ்ந்து வாரந்தோறும் சாட்டிங்கில் என்னோடு பகிர்ந்து கொண்டு மகிழ்ந்த வாசகிகள்...
ஒவ்வொருவருக்குள்ளும், வாழ்க்கையில் ஏதேனும் சாதிக்க வேண்டும் என்கின்ற உத்வேகம் கொழுந்து விட்டு எறிந்து கொண்டிருப்பதை எங்களால் உணர முடிகிறது.
உங்கள் நட்பை, ஆதரவை நாங்கள் இழந்து விடக் கூடாது என்பதால், ‘ஸ்மார்ட் லேடி’ கட்டுரைத் தொடர் முடிவடைந்த பிறகும், நீங்கள் அனைவரும் தொடர்ந்து எங்களுடன் தொழில் நுட்ப தொடர்பில் பயணிக்க நாங்கள் சில முயற்சிகளை எடுத்து வருகிறோம்.
உங்கள் ப்ளாகுகளை எங்கள் ப்ளாகில் இணைத்துக் கொண்டு தொடர்ந்து நீங்கள் எங்களின் தொடர்பில் இருப்பதற்கும், உங்களை மேம்படுத்திக் கொள்வதற்கும், ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் அவ்வப்போது கேட்டுத் தெளிவு பெறுவதற்கும் சில வசதிகளை ஏற்படுத்துக் கொடுக்க உள்ளோம்.
அவை பற்றியெல்லாம் விரைவில் அறிவிப்போம்.
இந்த புத்தாண்டு(2014) உங்கள் அனைவருக்கும் எல்லா வளங்களையும், உடல், மன ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் அள்ளிக் கொடுக்க இறைவனைப் பிராத்தித்துக் கொள்கிறோம்.
வாழ்த்துகளுடன் என்றும் உங்கள் ஆதரவை நாடும்,
காம்கேர் கே. புவனேஸ்வரி
ஸ்மார்ட் லேடி மற்றும்
மங்கையர் மலர் ஆசிரியர் குழுவுடன் இணைந்து....