பார்த்தேன் - கேட்டேன் - படித்தேன்

பணம், புகழ், பதவி!


வாழ்க்கைக்கு பணம், புகழ், பதவி இவை மூன்றுமே சரிவிகிதத்தில் அவசியமாகிறது. இவற்றை எந்த விகிதத்தில் கலந்து பயன்படுத்துகிறோம் என்பதில் தான் நம் சாதுர்யமே இருக்கிறது. உடல்நிலை சரியில்லை என்றால் மருந்து மாத்திரை எடுத்துக் கொள்வோம் அல்லவா? அதில் டோசேஜ் கொஞ்சம் கூடி விட்டால் உடல்நிலையில் மிக மோசமான பின்விளைவுகள் ஏற்படும் வாய்ப்புண்டல்லவா? அது போல தான் நம் வாழ்விற்குத் தேவையான பணம், புகழ், பதவி என்ற மூன்று மந்திரங்களையும் சரிவிகிதத்தில் பயன்படுத்த வேண்டும்.

முன்பெல்லாம் நடுத்தரக் குடும்பங்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கும், சண்டை சச்சரவுகளுக்கும் பணப் பிரச்சனையே முக்கியக் காரணம் என்று  சொல்லுவார்கள். பணப்பிரச்சனை தீர்ந்து விட்டால் எல்லாம் சரியாகி விடும் என்ற நம்பிக்கையும் இருந்து வந்தது.

ஆனால் தொழில்நுட்பப் புரட்சி ஏற்பட்டுள்ள இன்று பல நடுத்தரக் குடும்பங்களில் அதீதமாக கிடைக்கின்ற வருமானம் தான் பிரச்சனைகளுக்குக் காரணமாக உள்ளது. பணம் உறவுமுறைகளை ஒதுக்கி வைக்கவும், மனிதர்களுக்கிடையேயான அன்னியோன்னியத்தைக் குறைக்கவும் கற்றுக் கொடுத்துள்ளது. சோஷியல் நெட்வொர்க்குகளில் டிஜிட்டல் மனிதர்களுடன் மட்டும் ஹாய் சொல்லி மகிழவும், அழுது புலம்பவும் சொல்லிக் கொடுத்துள்ளது. சமுதாய நல்லிணக்கம் குறைந்து சோஷியல் நெட்வொர்க் கலாச்சாரம் மிகைப்படுத்தப்பட்டு மாயையான சூழல் உருவாகி வருவதை ஒத்துக் கொள்ள முடிகிறதா?

புகழ் – பெரும்பாலும் அது வஞ்சப்புகழ்ச்சியாகவே உள்ளது. அது தெரியாமல் அந்த புதைகுழிக்குள் எட்டிப் பார்க்க முயன்று தவறி விழுந்து ஒட்டுமொத்த நிம்மதியையும் தொலைத்தவர்கள் ஏராளம் இன்று. பிறர் நம்மைப் புகழும் போது அந்த புகழ்ச்சியை நம் காதுகளுக்குள் மட்டும் ஏற்றிக் கொள்ள வேண்டும். இன்னும் சொல்லப் போனால் அது நம் ஊக்க சக்தி என்னும் பேட்டரியை சார்ஜ் செய்து கொள்ளும் அளவில் மனதுக்குள் ஏற்றிக் கொள்ளலாம். ஆனால் பலர் அதை போதையாக மனதுக்குள் ஏற்றி வைத்துக் கொண்டு ‘தான்’ என்ற அகந்தைப் பிசாசுக்கு அடிமையாகி விடுவதால் அவர்கள் செய்கையில் உண்மையும், நேர்மையும் இருப்பதில்லை. போலித்தனம் மட்டுமே மிஞ்சுகிறது.

பதவி – ஒரு சிறந்த மனிதர் மிக உயர்ந்த நல்ல பதவியில் இருந்து கொண்டு, அந்த பதவியைப் பயன்படுத்தி பிறருக்குப் பயன்படும் விதத்தில் நல்ல செயல்களை செய்யாமல் இருப்பது என்பதும் ஒரு வித சுயநலம் தான். வம்படியாக தீய செயல்களைச் செய்து பிறரை துன்புறுத்துபவர்களை விட இவர்கள் மோசமானவர்கள்.

ஒரு பத்திரிகை பேட்டி.

பணம், புகழ், பதவி – இவை மூன்றும் போதைத் தரக்கூடியவை. இந்த மூன்றையும் உங்கள் கண்ணோட்டத்தில் எப்படிப் பார்க்கிறீர்கள்? என்பது தான் கேள்வி.

முதலில் பணம் பற்றிய கேள்விக்கு பதில் சொல்கிறேன். இதற்கு நான் என் இளவயதுக்குப் போக வேண்டும். என் பெற்றோரிடம் பணம் இருந்ததில்லை. இருந்தாலும் வீட்டிற்கு வருபவர்களுக்கெல்லாம் இல்லை என்று சொல்லாமல் சாப்பாடு போட்டுக் கொண்டே இருப்பார்கள். வாழ்க்கையில் சந்தோஷமாக இருப்பதற்கு பணம் வேண்டும் என்பதே இல்லை. நான் சிறுவனாய் இருந்த போது காலையில் 4 மணிக்கு எழுந்து அப்பாவுடன் தொழுது விட்டு மதரஸா பள்ளியில் குரான் படித்து, ரயில்வே ஸ்டேஷனில் பேப்பர் கட்டுக்களை எடுத்து விநியோகம் செய்து, வீட்டிற்கு வந்து சாப்பிட்டு, உடை மாற்றி பள்ளிக்குச் சென்று, மாலையில் திரும்பி, பணம் வசூலிக்கச் சென்று, வீட்டுப் பாடங்களை முடித்து விட்டு, சாப்பிட்டுப் படுப்பேன். மூச்சு விட நேரமிருக்காது. என்றாலும் சந்தோஷத்துக்கு அளவேயில்லாமல் இருந்தது. பணம், நல்ல பணமாய் நேர்வழியில் வந்ததாய் இருந்தால் வாழ்க்கை அமைதியாய் இருக்கும்.

அடுத்தது புகழ். இதை நான் ஒரு உதாரணத்தின் மூலம் விளக்குகிறேன். முதன் முதலில் ராக்கெட்டை அனுப்பும் முயற்சியில் நான் தோல்வியடைந்த போது, எனக்கு மேலதிகாரியாக இருந்த சதீஷ் தாவன் என்ற அருமையான மனிதர், அந்தத் தோல்விக்கு தன்னைப் பொறுப்பாக்கிக் கொண்டார். ஆனால் அடுத்த முறை ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய போது அந்த வெற்றிக்கு என்னை காரணமாக்கினார். இது எப்பேர்ப்பட்ட உயர்ந்த காரியம்! தோல்வியை தான் எடுத்துக் கொண்டு, வெற்றியை எனக்குக் கொடுத்த அந்த உயர்ந்த செய்கை, இன்னமும் என் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. அதன் பிறகு ஏதாவது காரியத்திற்காக புகழ் வந்தால், உடனே நான் சதீஷ் தாவனை நினைத்துக் கொள்வேன்.

அடுத்தது பதவி. அது வரும், போகும். நாம் ஏன் அதற்காக கவலைப்பட வேண்டும்? 

இந்த நேர்காணல் நடந்த வருடம் 2003. டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களை எழுத்தாளர் சிவசங்கரி கல்கி வார இதழுக்காகப் பிரத்யேகமாக எடுத்த பேட்டியின் ஒரு பகுதி தான் இது.

என்ன ஒரு அருமையான பதில். பணம், புகழ், பதவி குறித்து இதைவிட அருமையான பதில் வேறொன்றிருக்க முடியுமா என்பது சந்தேகம் தான்.

சாதித்தவர்கள் சொல்கிறார்கள்… காது கொடுத்துக் கேட்டுத் தான் பார்ப்போமே!


சில சந்தர்ப்பங்களும், மாபெரும் வெற்றிகளும்!

நன்றி: விஜயபாரதம், 25-04-2014





       ஒரு உண்மை கதை. அந்தச் சிறுவனுக்கு 13 வயதிருக்கும். குடும்ப வறுமை காரணமாக படிப்பை பாதியில் நிறுத்துகின்ற சூழல். பசியின் கொடுமை. பால் கறத்தல்; ஆடுகளின் உடல் ரோமங்களை கத்தரித்தல், மோர் கடைதல்;  தோல்களைப் பதனிடுதல் இப்படியாகத் தெரிந்த வேலை, தெரியாத வேலை என்று எல்லா வேலைகளையும் செய்யத் தொடங்கினார். இடையில் காதல்; திருமணம்; குழந்தை.
குடும்பத்தை நடத்த வருமானம் போதவில்லை. தன் 21-வது வயதில், வருமானத்துக்காக லண்டன் சென்றார். ஒருநாள் பசியின் கொடுமையில் ஒரு நாடகக் கொட்டகை வாசலில், கண்கள் செருக சுவற்றில் சாய்ந்து அமர்ந்திருந்தார்.
அந்த நாடகக் கொட்டகைக்கு நிறைய பேர் குதிரையில் நாடகம் பார்க்க வருவார்கள். அப்போது ஒரு பெரும் பணக்காரர் குதிரையில் நாடகம் பார்க்க வந்தார். கொட்டகை வாசலில் பசியோடு அமர்ந்திருந்த இளைஞனிடம், ‘நீ இந்த குதிரையைப் பார்த்துக் கொள்…வரும்போது காசு தருகிறேன்’ என்றார்.
அந்த இளைஞனுக்கு வயிற்றுப் பசிக்குக் காசு கிடைக்கப் போகிறதே என்ற மகிழ்ச்சி. பசியின் கொடுமையை அனுபவித்தவருக்கு மட்டுமே அதன் வலி தெரியும். மற்றவர்களுக்கு அது பரிதாபப்பட்டு ‘உச்’ கொட்டும் வெறும் உணர்வு மட்டுமே.
‘என்ன பெருசா காசு கொடுத்துடப் போகிறார்’ என்று அலட்சியப்படுத்தாமல், அந்த பணக்காரரின் குதிரையை சுத்தப்படுத்தி சேணத்தை பளபளப்பாக துடைத்து புதிது போல பளபளப்பாக்கினார்.
குதிரையின்  சொந்தக்காரர் நாடகம் முடிந்து வெளியே வந்தார். அவரின் கண்களை அவராலேயே நம்ப முடியவில்லை. அந்த அளவுக்கு குதிரையை பராமரித்து வைத்திருந்தார் அந்த இளைஞன். 
அவர் எதிர்பார்த்ததுக்கும் மேலாக பணம் கொடுத்தார் அப்பணக்காரர். அடுத்த நாளில் இருந்து நாடகம் பார்க்க வந்த மற்றவர்களும் குதிரையை அவரிடம் ஒப்படைக்க ஆரம்பித்தனர்.  வருமானம் பெருகத் தொடங்கியது.
ஒரு வேளை சாப்பாட்டிற்காக ஒரு குதிரையை பராமரிக்கத் தொடங்கிய அந்த இளைஞர், சொந்தமாக குதிரை லாயம் அமைத்து, வேலைக்கு ஆட்களை அமர்த்தி முதலாளியாகி விட்டார்.
வாழ்வாதாரத்துக்கு வழி செய்து கொண்டபின் அவரது இலக்கிய ஆர்வம் தலைதூக்க ஆரம்பித்தது. நாடகக் கொட்டகைக்குள் நாடகங்களை பார்வையிடும் பார்வையாளராக உள்ளே நுழைந்தார். அதில் ஈடுபாடு அதிகரிக்கவே, அங்கு ஏதேனும் வேலை கேட்டார். முதலில் நடிகை நடிகர்களுக்கு உதவி செய்யும் வேலை கிடைத்தது. அடுத்து நாடகங்களில் சிறுசிறு வேடங்களில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. கொஞ்சம் கொஞ்சமாக தன் திறமையை நிரூபித்துக் கொண்டே வந்த அந்த இளைஞர் நாடகங்களைத் திருத்தி எழுதும் பணியையும் செய்யத் தொடங்கினார்.  அதன் உச்சமாக, நாடகங்களையும் தாமே எழுதவும் ஆரம்பித்தார். அவர் இயற்றிய நாடகங்கள் அவரருக்கு பாராட்டுகளையும், உயர்ந்தோர் பலரின் ஆதரவையும், பொது மக்களின் நட்பையும் ஈட்டிக் கொடுத்தன. மிகச் சிறந்த நாடக ஆசிரியரானார்.
ஒருசில ஆண்டுகளுக்குள் நாடகக் கொட்டகையின் உரிமையாளராகவும் ஆகிவிட்டார். பல நாடகக் கொட்டகைகளுக்குப் பங்குதாரரும் ஆனார். செல்வம் வந்து நேரத் தொடங்கியது.
அந்த அற்புத இளைஞர் யார் தெரியுமா? ரோமியோ ஜூலியட் நாடகப் புகழ் ஷேக்ஸ்பியர் தான் அந்த மாமேதை.
எழுத்தினால் பெரும்பணம் சம்பாதித்தவர்களில் முதன்மையானவர் ஷேக்ஸ்பியர் தான் என்பதற்கான சான்றுகளும் வரலாற்றில் பதிவாகியுள்ளன.
ஒரு குதிரையை பராமரிக்கத் தொடங்கியவர் குதிரை லாயம் அமைத்து பெரும்பணக்காரர் ஆனதும், இலக்கிய நாடகங்களைப் பார்க்கும் பார்வையாளராகப் பார்க்கச் சென்றவர் உலகப் புகழ்பெற்ற பல நாடங்களை எழுதி புகழ் பெற்றதும், பல நாடகக் கொட்டகைகளுக்குச் சொந்தக்காரரானதும் வெறும் அதிர்ஷ்டம் என்ற மேஜிக்கினால் அல்ல.  சந்தர்பங்களை சாதகமாக்கிக் கொண்ட அவரது புத்திசாலித்தனம் மட்டும் தான் காரணம்.
இதுபோன்ற சந்தர்பங்கள் ஷேக்ஸ்பியருக்கு மட்டும் வாய்ப்பதில்லை. வாழ்க்கை நம் அனைவருக்குமே நித்தம் இதுபோன்ற அற்புதமான வாய்ப்புகளை அள்ளி வீசிக் கொண்டு தான் இருக்கின்றன. நாம் தான் அவற்றை சரியாக ‘கேட்ச்’  பிடிப்பதில்லை. தவறவிட்டுக் கொண்டே இருக்கிறோம். யார் சரியாக சந்தர்ப்பம் என்ற பந்தை சரியாக  ‘கேட்ச்’ பிடிக்கிறாரோ, அவரே வெற்றி பெறுகிறார். சந்தர்ப்பங்களை சரியாக ‘கேட்ச்’ பிடிக்கக் கற்றுக் கொள்வோம். பயிற்சி எடுப்போம். வெற்றியடைவோம்.



உலகிலேயே மிகப்பெரிய பள்ளிக்கூடம் 
நம் நாட்டில் தான்! 

நன்றி: ஸ்ரீராமகிருஷ்ண விஜயம், ஏப்ரல் 2014



டாக்டர் ஜகதீஸ் காந்தியும், அவரது மனைவி திருமதி பார்தியும் உண்மையான மகான்கள்… யார் இவர்கள்? என்ன செய்தார்கள் இந்த சமுதாயத்துக்கு? தெரிந்து கொள்ள கடைசி வரை படியுங்கள்.

ஐந்தே ஐந்து மாணவர்களை வைத்து ஆரம்பிக்கப்பட்ட ஒரு சிறிய பள்ளி, இன்று 47,000 மாணவர்களுடன் உலகிலேயே மிகப்பெரிய பள்ளிக்கூடம் என்று பெயரெடுத்து பிரமாண்டமாக விஸ்வரூபமெடுத்துள்ள அதிசயத்துக்குப் பின்னால் பேருழைப்பும், விடாமுயற்சியும், அயராத ஊக்கமும் துணை நின்றிருக்கிறது.

சி.எம்.எஸ்(CMS-City Montessori School) என்று அழைக்கப்படும் பிரமாண்டமான அப்பள்ளிக்கூடம், உத்திரபிரதேசத்தில் உள்ள லக்னோவில் அமைந்துள்ளது.

3800 பணியாளர்கள்…
1000 வகுப்பறைகள்…
3700 கம்ப்யூட்டர்கள்…
47000 மாணவர்கள்…

படிப்பதற்கே மிரட்சியாக இருக்கிறதல்லவா? இப்பள்ளி 1959 ஆம் ஆண்டு டாக்டர் ஜகதீஸ் காந்தி(Dr Jagdish Gandhi) மற்றும் அவரது மனைவி திருமதி பார்தி(Bharti) அவர்களால் ஐந்தே ஐந்து மாணவர்களை மட்டுமே வைத்து ஆரம்பிக்கப்பட்டது என்றால் நம்ப முடிகிறதா? 

ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி என்பது உரிமை. இதுதான் அவர்களது நம்பிக்கையாக இருந்தது.

இப்பள்ளி வளாகத்தினுள்ளேயே பிரமாண்டமான மேல்கூரை செய்யப்பட்ட ஃபுட்பால் ஸ்டேடியம் அமைந்துள்ளது. காலையில் இறைவணக்கத்துக்காக அத்தனை மாணவர்களும் கூடும் பிரமாண்டமான இடவசதியும் செய்யப்பட்டுள்ளது. புத்தகங்களுக்காகவும், நோட்டுகளுக்காகவும் வருடா வருடம் 1000 பவுண்டுகளுக்கும் அதிகமான தொகை செலவழிக்கப்படுகிறது. ஒவ்வொரு வகுப்பிலும் 40 முதல் 50 மாணவர்கள் வரை மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். இத்தனை வசதிகள் இருந்தாலும், இதுவரை இப்பள்ளி அரசாங்கத்திடம் இருந்து உதவிப் பணம் பெறவில்லை என்பது கூடுதல் ஆச்சர்யப்படுத்தும் தகவல்.

இன்று இப்பள்ளி உத்திரபிரதேசத்தில் 20 வளாகங்களாக பரந்து விரிந்து வளர்ந்திருந்தாலும், இவை அனைத்துமே கடந்த 14 வருடங்களில் மட்டுமே என்பது செய்தி. பள்ளி மாணவர்களின் பெற்றோர்களிடம் இருந்து 1000 ரூபாயும், உயர்கல்வி மாணவர்களிடம் இருந்து 2500 ரூபாயும் வசூலிக்கிறார்கள்.


டாக்டர் ஜகதீஸ் காந்தி கூறுகிறார்!



    75 வயதாகும் டாக்டர் ஜகதீஸ் காந்தி நினைவு கூறுகிறார்… ‘1959-ம் ஆண்டு இப்பள்ளியை நாங்கள் தொடங்கியபோது உலகிலேயே இப்பள்ளி மிகப்பெரிய பள்ளியாக வரும் என்று நினைத்துப் பார்க்கவே இல்லை…ஆனால் எந்தக் குழந்தைக்கும் கல்வி மறுக்கப்படக் கூடாது என்பதும், கல்வி என்பது எல்லாக் குழந்தைகளுக்குமான உரிமை என்பதும் மட்டுமே எங்களின் கொள்கையாக இருந்து வந்தன.

    ‘ஆரம்ப காலங்களில், நானும் என் மனைவியும் ஒவ்வொரு வீட்டு பெண்ணுக்கும் கல்வியின் அவசியத்தைப் புரிய வைத்து அவர்கள் வீட்டுக் குழந்தைகளை பள்ளிக்கு வரச் செய்ய பெருமளவில் முயற்சி எடுத்தோம். ஆனாலும் எங்கள் பள்ளியின் மொத்த மாணவர்கள் 5 ஆக மட்டுமே இருந்தது.

    ‘300 ரூபாய் கடன் வாங்கி எங்கள் பள்ளியைத் தொடங்கினோம். அதன் பிறகு படிக்கின்ற மாணவர்களின் வாய்வழி விளம்பரம் மூலம் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்கத் தொடங்கியது.

    ‘லக்னோவைச் சுற்றியே 20 வளாகங்கள் எங்கள் பள்ளிக்காக உள்ளது. மாநிலத்தின் பெரும்பாலான நகரங்களின் மக்கள் தொகையை விட இந்த எண்ணிக்கை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. நாளுக்கு நாள் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

    ‘எங்கள் பள்ளியின் பலமே எங்கள் பணியாளர்கள் தான். ஆசிரியர்கள், துணை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத மானேஜ்மெண்ட் பணியாளர்கள், எலக்ட்ரீஷியன்கள், தோட்டக்காரர்கள், மரவேலை செய்யும் பணியாளர்கள், பள்ளி பஸ் டிரைவர்கள், பள்ளி வகுப்பறைகளை சுத்தம் செய்கின்ற பணியாளர்கள் உட்பட 3800 பணியாளர்களின் மாபெரும் உழைப்பே எங்கள் பலம்.

‘எங்கள் பள்ளியின் அத்தனை மாணகவர்களையும் எங்களால் அசம்பளிக்காக கூட்ட இயலாது. ஏனெனில் மாணவர்களும் ஒரே சமயத்தில் ஒரே இடத்தில் கூடும் அளவுக்கு அத்தனை பெரிய இடம் இல்லை. பிரிவு பிரிவாகத் தான் ஒருங்கிணைத்து மீட்டிங் போட இயலும்.

மேலும், தன் வாழ்நாள் சாதனையாக திரு. ஜகதீஸ் காந்தி தொடர்ந்து கூறுகிறார்….

    ‘2013 கின்னஸ் புத்தகத்தில் இப்பள்ளி உலகிலேயே அதிக எண்ணிக்கைக் கொண்ட பள்ளியாக பதிவானது. இப்பதிவு, அதுவரை உலக அளவில் அதிக எண்ணிக்கை மாணவர்களைக் கொண்ட பிலிப்பைன்ஸ் நாட்டில் மனிலாவில் உள்ள ரைஸால் உயர்நிலைப் பள்ளியின்(Rizal High School in Manila) பதிவை முறியடித்தது. அப்பள்ளியின் மாணவர்களின் எண்ணிக்கை 19,738   மட்டுமே. கின்னஸ் புத்தகத்தில் எங்கள் பள்ளி பதிவான அன்றைய தினம் எங்களுக்கு மிகப் பெருமையான தினமாகும்.’

மகள் கீதா கிங்டன் கூறுகிறார்!



டாக்டர் ஜகதீஸ் காந்தியின் மகள் கீதா கிங்டன் இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக உள்ளார். இவர் இப்பள்ளியை பற்றி கூறுகிறார்.

‘ஒரு பஸ்ஸில் 50 மாணவர்கள் என்று வைத்துக் கொண்டாலும், எங்களுக்கு 1000 பஸ்கள் தேவை. ஒட்டு மொத்த லக்னோவும் டிராஃபிக் ஜாமாகி விடும்….

    ‘இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் பலர் அமெரிக்காவில் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பெற்று, அங்கு இப்பள்ளிக்குப் பெருமை சேர்க்கும் விதமாக நல்ல உயர் பதவியில் உள்ளனர்.

பள்ளி மாணவி கூறுகிறார்!

    இப்பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயதேயான கனிகா குப்தா பெருமை பொங்கக் கூறுகிறார்….

    ‘என்னால் இப்பள்ளியை விட்டு வேறொரு சிறிய பள்ளியில் படிப்பதை கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாது. அப்படிச் செல்வதைப் போல கற்பனையும் செய்ய முடியவில்லை…

    மேலும் அவர் தொடர்கிறார்…

    ‘உலகின் மிகப் பெரிய பள்ளியில் படிப்பதால் பலதரப்பட்ட மாணவர்களை சந்திக்க முடிகிறது…வித்தியாசமான விருப்பங்களையும், பழக்க வழக்கங்களையும் கொண்ட நண்பர்களைப் பெற முடிகிறது.

இப்பள்ளியின் பெருமைக்குக் காரணம்!

    ஒட்டு மொத்தத்தில், இப்பள்ளி தன் மாணவர்களுக்கு நல்ல ஒழுக்கத்தையும், வாழ்க்கைக்குத் தேவையான  உயர்ந்த பண்புகளையும், குணநலன்களையும் கற்றுக் கொடுத்து சமுதாயத்தில் நல்ல குடிமகன்களாக வாழக் வழிவகை செய்து வருவதே இப்பள்ளியின் பெருமையாகும்.

இரு மகான்களும், அவர்களது தாரக மந்திரமும்!




    அந்த வகையில் இப்பள்ளியை உருவாக்கி வளர்ந்த டாக்டர் ஜகதீஸ் காந்தியும், அவரது மனைவி திருமதி பார்தியும் இப்பள்ளியை வைத்து பணம் சம்பாதிக்க ஆசைப்படவில்லை. அப்படி ஆசைப்பட்டிருந்தால் இப்பள்ளியும் பத்தோடு ஒன்றாக இருந்திருக்குமே தவிர உலகின் முதன்மையான பள்ளியாக வந்திருக்காது. மேலும் ‘எந்தக் குழந்தைக்கும் கல்வி மறுக்கப்படக் கூடாது என்பதும், கல்வி என்பது எல்லாக் குழந்தைகளுக்குமான உரிமை என்பதும்’ மட்டுமே இவர்களின் தாரக மந்திரமாக இருந்து வந்தன. அதானல் தான் இவர்கள் இருவரையும் ‘உண்மையான  மகான்கள்’ என்று இக்கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தேன்.

          எப்படி என்று தெரிந்து கொள்ள மீண்டும் இக்கட்டுரையின் முதல் பாராவிற்குச்  செல்லுங்கள்.


ப்ளீஸ்...சிகரெட் பிடிக்காதீங்க...
தினமலர்.காமில் 
எழுதியவர்: திரு. எல். முருகராஜ்


பிப்ரவரி 4-ம்தேதி கேன்சர் தினம்.
உலகம் முழுவதும் ரோஸ் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
மருந்து மாத்திரைகளை விட அன்பும், அரவணைப்பும் அதிகம் தேவைப்படுவது இந்த புற்றுநோய்க்குதான். இந்த நோய் தானாக வருவதை விட புகையிலை, சிகரெட் போன்ற பழக்கங்களால் வலிய வரவழைத்துக் கொள்பவர்களே அதிகம்.

அதிலும் இளைஞர்கள் சிகரெட் பிடிக்கம் பழக்கத்தால் குரல்வளை புற்று நோய் வந்து பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகக்கூடாது என்பதற்காக, அந்த நோயின் பிடியில் சிக்கி திரும்பிய ஒருவர் தனது வாழ்வின் லட்சியமே இளைஞர்களை சிகரெட் பிடிக்கும் பழக்கத்தில் இருந்து மீட்பதுதான் என்ற எண்ணத்தோடு எழுபது வயதிலும் இளைஞர்கள் இருக்குமிடமான கல்லூரி போன்ற இடங்களை தேடித்தேடிப்போய் பரப்புரை செய்துவருகிறார்.


அவரது பெயர் .சர்புதீன்சென்னை முகப்பேரைச் சேர்ந்தவர்.


மாநில அரசு ஊழியராக இருந்த போது அவர் சார்ந்திருந்த அமைப்பின் செயலாளராகவும் இருந்தார். இந்த பொறுப்புக்கு முக்கிய தேவையான பேச்சுக்கலையிலும் வல்லவர்.

இவருக்குள்ள ஒரே கெட்ட பழக்கம் சிகரெட் பிடிப்பதுதான். இவருக்கு பொழுது போகாத போதெல்லாம் சிகரெட் பிடிப்பார், நண்பர்கள் யாருக்கு பொழுது போகவில்லை என்றாலும் இவரிடம் வந்து சிகரெட் பிடித்து செல்வார்கள். இப்படி ஒரு நாளைக்கு இரண்டு பாக்கெட் சிகரெட் பிடிப்பது என்பது இவரது அன்றாட அலுவலில் சேர்ந்துவிட்டது. இப்படி பல ஆண்டுகள் தொடர்ந்த இவரது சிகரெட் பழக்கம் விபரீதமாக வெளிப்பட்டது.

ஒரு நாள் காலை படுக்கைவிட்டு எழுந்தவர் பேசமுடியாது திணறினார். பக்கத்தில் இருந்த மருத்துவ மனைக்கு சென்ற போது அவர்கள் காது மூக்கு தொண்டை நிபுணரை கலந்து ஆலோசிக்க சொன்னார்கள். அவர் கொடுத்த மருந்து மாத்திரைகளை சாப்பிட்டபோது அது ஒரு வாரம் வேலை செய்தது, அதன் பிறகு நிலமை இன்னும் மோசமாகியது.

பிரிதொரு மருத்துவ மனையின் ஆலோசனையின் பேரில் தொண்டை சதையை எடுத்து சோதனை செய்து பார்த்தபோதுதான், சர்புதீனுக்கு குரல்வளை புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது.

மனிதர் ஆடிப்போய்விட்டார். குணப்படுத்த முடியுமா? என்று எங்கெங்கோ போய் முட்டி மோதி பார்த்தார். இனிமேல் சிகரெட்டை தொடவே மாட்டேன் என்று சூளுரைத்தார். இதெல்லாம் தாமதமான முடிவு. நீண்ட நாள் சிகரெட் குடித்ததன் பலனாக கிடைத்த இந்த குரல்வளை புற்றுநோய்க்கு பலியாகிவிடாமல் உங்களை காப்பாற்றுகிறோம் ஆனால் இனிமேல் பேசுவது என்பதும் சுவாசிப்பது என்பதும் முடிந்து போன விஷயம் என்றார்கள்.

அதன்படியே நடந்தது. 

மூக்கு என்பது முகத்தின் ஒரு அங்கமாகத்தான் இன்று வரை இருக்கிறது, அதன் குணாதிசயமான நுகரும் தன்மை இழந்துவிட்டது. சுவாசம் தொண்டையில் போடப்பட்ட குழியின் வழியாகவே நடக்கிறது. இதெல்லாம் நடந்தது இவரது ஐம்பதாவது வயதில். விரக்தியான வாழ்க்கையில் இருந்த போதுதான் சென்னை அடையார் கேன்சர் இன்ஸ்டியூட் டாக்டர் விதுபாலாவின் அறிமுகம் கிடைத்தது.

அவர் இவரிடம் நிறைய பேசி நம்பிக்கையை வளர்த்தார். சிகரெட் பிடிக்கும் பழக்கத்தால் உங்களுக்கு ஏற்பட்ட குரல்வளை புற்று நோய் நமது இளைஞர்கள் யாருக்கும் ஏற்படக்கூடாது என்பதற்காக நீங்கள் ஏன் பள்ளி, கல்லூரி போன்ற இடங்களிலும் இளைஞர் கூடுமிடங்களிலும் பேசக்கூடாது என்று சொன்ன போது நான் எப்படி பேச முடியும் என்றார்.

முயற்சித்தால் எல்லாம் முடியும் என்று சொன்னதுடன் இது தொடர்பாக சிறப்பு பயிற்சி கொடுத்தனர். பின்னர் "எலக்ட்டோ ஸ்பீச் 'என்ற சிறிய கைக்கடக்கமான கருவியை கொடுத்தனர். பேட்டரியால் இயங்கும் இந்த கருவியை தொண்டையில் வைத்துக்கொண்டு இவர் பேசும்போது ரோபா என சொல்லப்படும் எந்திர மனிதன் பேசுவது போல பேச்சு வந்தது.

சர்புதீனுக்கு பெரிதும் சந்தோஷம் தனது தேவைகளை காலம் காலமாக பக்கம் பக்கமாக எழுதி காண்பித்த நிலைமைக்கு விடுதலை கிடைத்தது. இவர் பேசுவது முதலில் புரியாதது போல இருக்கும், சிறிது நேரம் கவனம் செலுத்தினால் பிறகு எளிதான புரிந்து விடும். முதன் முதலாக இவருடன் மொபைல் போனில் பேசும் போது ஒரு மெஷின் பேசுவது போலத்தான் உணருவார்கள் ஆனால் பிறகு போகப்போக இவரது பேச்சு பிடிபட்டுவிடும்.

யார் சொல்லியும் சிகரெட் பழக்கத்தை விடாத பல இளைஞர்கள் இவர் மைக்கில் பேசுவதைக் கேட்டு அந்த நிமிடமே சிகரெட்டை தூக்கி எறிந்திருக்கின்றனர். இப்படி ஒருவரல்ல இருவரல்ல பல ஆயிரம் பேரை சிகரெட் பழக்கத்தில் இருந்து மீட்டு இருக்கிறார் மீட்டு வருகிறார்.

இவரது இந்த தன்னலமற்ற சேவையை பாராட்டி பலர் பாராட்டி விருதுகள் கொடுத்த போதும், எம்புள்ளைய சிகரெட் பழக்கத்தில் இருந்து மீட்டுக்கொடுத்த ஐயா நீங்க நல்லா இருக்கணும் என்று சொல்லும் ஏழை பெற்றோர்களின் வாழ்த்தையே பெரிதாக எண்ணுகிறார்.

இவரிடம் முதல் முறையாக பேசும்போது ஒரு எந்திரத்திடம் பேசுவது போலத்தான் இருக்கும். கொஞ்சம் புரிபடாது கவனத்தை சிதறவிடாமல் பேசினால் புரியும். 

உங்கள் பகுதி பள்ளி, கல்லூரியில் ஏதேனும் விழா நடக்கும் போது இவரை ஒரு பதினைந்து நிமிடம் பேசுவதற்காக வாய்ப்பு கொடுத்தால் நிச்சயம் சிகரெட் பிடிக்கும் இளைஞர்கள் மீட்டு எடுக்கப்படுவார்கள்.

வயதை மீறி தனது நோயைத்தாண்டி ஆரோக்கிய சமுதாயம் அமைய தனது வாழ்க்கை தொண்டுள்ளத்துடன் அர்ப்பணித்துக்கொண்டுள்ள சர்பபுதீனின் சேவைக்காகவாவது இறைவன் இவருக்கு நீண்ட ஆயுளை தந்தருளட்டும்.

-நன்றி:தினமலர்.காம்/நிஜக்கதை பகுதி


தி இந்து, ஜனவரி 30 2014 பத்திரிகை செய்தி....


ஒரு நாள் ஞானி ஒருவரின் முன் கடவுள் தோன்றிப் பின்வருமாறு கேட்டார்.


‘ஏ ஞானியே, எனக்கு இந்தப் பூவுலக மனிதர்களுடன் கண்ணாமூச்சி விளையாட வேண்டுமென்று விருப்பமாக உள்ளது. அவர்கள் கண்களுக்கு அகப்படாமல் சில காலம் எங்காவது ஒளிந்து கொள்ள வேண்டுமென்று நினைக்கிறேன்...’

‘அப்படியா? விசித்திரமாக இருக்கிறதே உங்கள் ஆசை’ என்றார் ஞானி.

‘ஆமாம் நான் சமுத்திரங்களுக்கு அடியாழத்தில் போய் ஒளிந்து கொள்ளட்டுமா? அல்லது பலகோடி அண்டங்களுக்கு அப்பாலுள்ள கிரகம் ஒன்றில் போய் ஒளிந்து கொள்ளட்டுமா? வேறு  மறைவிடம் ஏதாவது சொல்ல முடியுமா? நான் எங்கே ஒளிந்து கொள்ளலாம்?’

சற்று யோசித்து விட்டு ஞானி சொன்னார்.

‘கடவுளே! நீர் வெறெங்குமே ஓட வேண்டாம்...மனிதர்களின் மனதுக்குள் ஒளிந்து கொள்ளுங்கள். அவர்கள் கண்டு பிடிக்கவே மாட்டார்கள்!!!’

இது எப்படி இருக்கு?


அன்பார்ந்த வாசகிகளே,

இந்த இடத்தில் பிற பத்திரிகைகள், வெப்சைட்டுகள், வலைப்பூக்கள் இவற்றில் வெளியான சிறந்த படைப்புகளை நாங்கள் தேர்வு செய்து பப்ளிஷ் செய்வோம். 
தற்சமயம் நீங்கள் உங்கள் படைப்புகளை இப்பகுதிக்கு அனுப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.

வாழ்த்துக்கள்.

காம்கேர் கே புவனேஸ்வரி
ஸ்மார்ட் லேடி டீம்
மங்கையர் மலர்