![]() |
காம்கேர் கே புவனேஸ்வரி |
ஆண்களின் எண்ணிக்கையை விட பெண்களின் எண்ணிக்கைக் குறைந்து வருகிறது. எங்கு பார்த்தாலும்
பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள். 3 வயது குழந்தை 30 வயது ஆணால்,
40 வயது பெண்மணி 19 வயது ஆணால் என்று வயது வித்தியாசமின்றி பாலியல் துன்புறுத்தலுக்கு
உட்படுத்தப்படுகிறார்கள். கருவில் உதித்த பெண் சிசு முதல் பல்லும், சொல்லும் போன பாட்டிகள்
வரை எந்த நேரத்தில் என்ன ஆகுமோ என்ற ஒருவித பயத்துடன் நாட்களை நகர்த்த வேண்டிய அவலத்தில்
தான் வாழ்ந்து வருகிறோம். இதுதவிர கருவிலேயே பெண் குழந்தைகளை அழித்து விடுவதும் ஆங்காங்கு
நடந்து கொண்டுதான் உள்ளது.
மிக சமீபத்தில் ஒரு செய்தியைப் படிக்க
நேர்ந்தது. சென்னையில் பிசியாக இருக்கும் ஓரிடத்தில், முன்இரவு நேரத்தில், புதிதாகக்
கட்டிக் கொண்டிருந்த கட்டிடத்துக்கு அருகே, மது அருந்திய இளைஞர்கள் 4 பேர் அமர்ந்து
போதையில் பிதற்றிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அமர்ந்திருந்த இடத்துக்கு அருகே, ஒரு
நாய் 8 குட்டிகளை ஈன்றிருந்தது. போதையில் அந்த இளைஞர்கள் தாயின் உடலோடு உடலாய் ஒட்டிக்
கொண்டு படுத்திருந்த நாய் குட்டிகளை சீண்டிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் ஒருவன்
ஒரு குட்டி நாயின் மீது கல்விட்டு எறிய, தாய் நாய்க்கு வந்ததே கோபம்… ஆக்ரோஷமாய் குரைத்து,
பாய்ந்து பயம்காட்டி, வெறியில் அங்கும் இங்கும் ஓடி அவர்களை கொலைவெறியில் பார்த்து
ஊளையிட ஆரம்பித்தது. போதை கண்களை மறைக்க, அந்த இளைஞர்களுக்கு அந்த தாய் நாய் மீது வந்ததே
கோபம்… அந்த இடத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த செங்ககற்களை எடுத்து அந்த குட்டி நாய்கள்
மீது வேகமாக அடித்தார்கள். ஆளுக்கு 2 நாய்க்குட்டிகள் என 8 நாய்களையும் அடித்தே கொன்று விட்டார்கள். அந்தத் தாய் நாய் மீதும்
தொடர்ந்து கல்லடிக் கொடுத்து விரட்டியபடியே இருந்திருக்கிறார்கள். தாய்நாய் எவ்வளவு
போராடியும் தன் குட்டிகளைக் காப்பாற்ற முடியவில்லை. இந்த செய்தியை இறந்த எட்டு குட்டிநாய்களும்
வரிசையாய் படுத்திருக்க, தாய்நாய் ஏக்கத்தோடு அவற்றைப் பார்த்தபடி நின்று கொண்டிருக்கும்
புகைப்படத்தோடு வெளிடிட்டிருந்தார்கள். அது மிகவும் பரிதாபமாக உள்ளத்தை உருக்கும் காட்சியாக
இருந்தது.
நாயாக இருந்தாலும், போதையில் அந்த
இளைஞர்களுக்கு அந்தத் தாய்நாயைப் பார்க்கும் போது பெண்நாயாக மட்டுமே பார்க்க முடிந்திருக்கிறது.
அதனால் தான் அதைப் பழிவாங்கும் எண்ணத்தில் பிறந்து சிலமணி நேரங்களே ஆகியிருந்த பிஞ்சு
நாய்க்குட்டிகளை கொன்று வெறியை தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
சமீபத்தில் டெல்லியில் தன் நண்பனோடு
சினிமாவுக்குச் சென்றுவிட்டு பஸ்ஸில் வீடு திரும்பிக் கொண்டிருந்த ஒரு இளம் பெண்ணுக்கு
நடந்த கொடூரமான பாலியல் வன்கொடுமைக்கும் போதையில் இருந்த இளைஞர்கள் தான் காரணம். சுயநினைவில் இருக்கின்ற எந்தஒரு மனிதனாலும் அந்த
அளவுக்கு கொடூரங்களை செய்ய முடியாது.
பஸ்ஸில் இளம் பெண்ணை கொடூரமாகச் சீரழித்து
அவரது இறப்பிற்குக் காரணமான இளைஞர்களுக்கும், பிறந்து சிலமணிநேரங்களே ஆன பிஞ்சு நாய்க்குட்டிகளை
கல்லாம் அடித்தே கொன்ற இளைஞர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. போதை, பெண் பாலினம்
மீதான வக்கிரம், ஆண் என்கின்ற கர்வம் இப்படி எல்லாமுமாக சேர்ந்து அவர்கள் கண்களை மறைக்க
என்ன செய்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் கொடூரங்களை அரங்கேற்றி வருகிறார்கள்.
ஆகஸ்ட் 15, 2014 சுதந்திர தின விழாவில்
நம் நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடி நிகழ்த்திய உரையில் மிக அழகாக ஒரு விஷயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
‘பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. இதற்கு ஆண்கள் வெட்கத்தால் தலைகுனிய வேண்டும். பெண்களைத் துன்புறுத்தும் ஆண்களும் நம்மில் ஒருவரது மகன் தான். பெண் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியேச் செல்லும் போது எங்கு செல்கிறாய் என்று கேட்டு கட்டுப்படுத்துவதைப் போல, ஆண் குழந்தைகளையும் கேள்வி கேட்க வேண்டும். கட்டுப்படுத்த வேண்டும். ஆண் குழந்தைகளுக்கும் ஒழுக்க நெறிகளையும், கட்டுப்பாடுகளையும் கற்றுத் தர வேண்டும்…’
இதைத் தானே பாரதியார் அன்றே அழகாய் பாடிச் சென்றுள்ளார்.
கற்பு
நிலையென்று சொல்ல வந்தார்,இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்;…………..
ஆணெல்லாம்
கற்பைவிட்டுத் தவறு செய்தால்
அப்போது பெண்மையும் கற்பழிந்தி டாதோ?...........
வீட்டில் அம்மாக்கள் தங்கள் பெண் குழந்தைகளுக்குக்
கற்றுத் தருவதைப் போல, ஆண் குழந்தைகளுக்கும் ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும்.
மேலும் அப்பாக்கள் நல்ல ரோல்மாடலாக இருக்க வேண்டும். ‘ஆம்பிளை சிங்கம்டா நீ’, ‘நீ அம்பளைடா…பெண் போல அழுது
கொண்டிருக்கிறாய்?’ என்ற ஆண்களை உசுப்பேற்றுகின்ற வார்த்தைகள் அகராதியில் இருந்தே நீக்கப்பட
வேண்டும். ஆண், பெண் என்கின்ற பேதமில்லாமல் வளர்க்கப்படுகின்ற குழந்தைகள் மனதளவில்
ஆரோக்கியமாக வளர்கிறார்கள். பெண் குழந்தைகளைக் கண்காணிப்பதைப் போலவே, ஆண் குழந்தைகளையும்
கண்காணிக்க வேண்டும்.
இறைவன் படைப்பில் ஆணும், பெண்ணும்
சமம். இருவரையும் ஒப்பிடக் கூடத் முடியாது. அதற்கு அவசியமும் இல்லை. ஒவ்வொருவருக்கும்
தனித்தனி சிறப்புகளும், மேன்மைகளும் உள்ளன. உதாரணத்துக்கு நெருப்பு என்பது பஞ்சபூதங்களில்
ஒன்று, தண்ணீர் என்பது மற்றொன்று. இரண்டில் எது சிறந்தது என்று ஒப்பிட முடியுமா? இரண்டுமே
நமக்குத் தேவை. தனித்தனியாக சக்திவாய்ந்தவை. அதுபோல தான் ஆண், பெண் என்ற இருபாலினரும்
தனித்தனியாக சக்தி வாய்ந்தவர்கள்.
புரிந்து கொள்வோம். ஆரோக்கியமான சமுதாயத்தை
உருவாக்கப் போராடுவோம். வெற்றி பெறுவோம்.