ஸ்மார்ட் வாசகிகள் - கியூட் படைப்புகள்

திருஷ்டியை போக்கும் கால பைரவர்
ஆகாஷயா
 பிறரது பொறாமை மற்றும் வக்கிர எண்ணங்களினால், கடுமையான கண் திருஷ்டி ஏற்பட்டு உடலாலும், மனதாலும் பாதிக்கப்பட்டவர்களும், பல வகையான தோஷங்களினால் பாதிக்கப்பட்டு சலித்து போயிருப்பவர்களும், கால பைரவரை வழிபட அனைத்து விதமான திருஷ்டி மற்றும் தோஷங்கள் நீங்கும் என்பது  பரவலான நம்பிக்கை.
 ஒரு முறை சிவபெருமானுக்கும், பிரம்மாவுக்கும் தேவலோகத்தில் ஒரு வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி, சிவபெருமானை பிரம்மா அவமரியாதையாக பேசி விட்டார்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த பைரவருக்கு கோவம் வந்து விட்டது. ஏனென்றால் பைரவர் தான் சிவபெருமானின் முதன்மை சீடர். குருவின் மீதுள்ள பாசத்தில் பிரம்மாவின் ஐந்து தலைகளில் ஒரு தலையை கிள்ளி விட, அந்த தலை கீழே விழாமல் பைரவரின் கைவிரலில் ஒட்டிக் கொண்டு விட்டது.
இதை கவனித்துக் கொண்டிருந்த சிவபெருமான் பைரவரிடம் ”உன் கோவம் நியாயமானது... ஆனால் தண்டிக்கும் உரிமை உனக்கு இல்லை...” என்று சற்றே கடுமையாகக் கூறினார்.
பைரவருக்கு கவலை வந்து விட்டது. உடனே அவர்  சிவபெருமானிடம் ”சுவாமி...என் கையில் ஒட்டிக் கொண்டிருக்கும் தலையை எப்படி சுவாமி கீழே விழ வைப்பது? இதற்கு என்ன பரிகாரம் செய்வது” என்று கெஞ்சினார். அதற்கு சிவபெருமான் ஒரு பரிகாரம் கூறினார். அதாவது, பைரவரை பூலோகம் சென்று சுற்றி வருமாறும், அப்படி சுற்றி வரும் போது எந்த இடத்தில் பைரவரது கைவிரலில்  ஒட்டிக் கொண்டிருக்கும் பிரம்மனின் தலை கீழே விழுகிறதோ, அப்போது அவருக்கு விமோசனம் கிடைக்கும் என்பதே சிவபெருமான் பைரவருக்கு கூறும் பரிகாரம்.
சிவபெருமானின் அறிவுரையின்படி பைரவர் பூலோகம் வந்து சுற்றி வரும் போது, காசியில் அவரது கைவிரலில் ஒட்டிக் கொண்டிருந்த பிரம்மனின் தலை கீழே விழுகிறது. பைரவருக்கு விமோசனம் கிடைக்கிறது. அதனால் பைரவர் காசியிலேயே கால பைரவராக தங்கி அந்நகருக்கு பாதுகாப்பாய் இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன.
ஆக, கால பைரவர் அனைத்து விதமான திருஷ்டி மற்றும் தோஷங்களை போக்கும் கடவுளாக விளங்குகிறார்.
ஓ நண்பா! உனக்கா இந்த நிலை?
கிருஷ்ணாங்கினி

நேற்று இராமநாதனோடு  தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்தேன். ‘இந்த தொலைபேசி எண் இப்போது உபயோகத்தில் இல்லை’ என்ற பதிலே கிடைத்தது. அதனால் அவனுடைய செல்போனில்  முயற்சித்துப்  பேசினேன். அவனுடன் பேசியதில் இருந்து மனதே சரியில்லை.

அவன் எனக்கு பால்ய சிநேகிதன்.  நான் மளிகைக் கடை வைத்துக் கொண்டு கிராமத்திலேயே செட்டில் ஆகி விட, அவன் சென்னையில் அரசாங்கப் பள்ளி ஒன்றில்  தலைமை ஆசிரியராக வேலை செய்து ஓய்வு பெற்று விட்டான்.

அவனுக்கா இந்த நிலைமை வரவேண்டும்? முத்து முத்தாய் மூன்று குழந்தைகள். இரண்டு பேர் அமெரிக்காவில் உயர் பதவியில் இருக்க, ஒரு பெண் சென்னையில் சொந்தமாக கம்பெனி வைத்து நடத்துகிறாள். அப்படியிருக்க அவன் ஏன் ஹோமில் சேர வேண்டும்.  இந்த காலத்தில் குழந்தைகளுக்கு பெற்றோர் மீது கொஞ்சமும் அக்கரை இல்லை. என் மனது வலித்தது.

அடுத்த வாரம்   என் உறவுக்கார பெண்ணின்  திருமணம் சென்னையில் இருப்பதால்,  குடும்பத்தோடு   மூன்று  நாட்கள் சென்னை வாசம் தான். இராமநாதனை சந்தித்து இரண்டு, மூன்று வருடங்கள் ஆகிறது.அப்படியே அவனையும்  சந்தித்து விட்டு வரலாம் என்ற எண்ணத்தில் தான் நேற்று அவனுக்கு போன் செய்து குசலம் விசாரித்து விட்டு, அவனது முகவரியை படித்துக் காண்பித்து சரி பார்த்துக் கொண்டேன். அப்போது தான் அந்த அதிர்ச்சி.

அவன் இப்போது  பழைய வீட்டில் இல்லையாம். பூரணி ஹோம்ஸீக்குச் சென்று விட்டானாம். முகவரியைக் குறித்துக் கொண்டேன்.
பூரணி ஹோம்ஸ்
55, வெள்ளாலர் தெரு
மந்தைவெளி
சென்னை
கட்டாயம் குடும்பத்தோடு வர வேண்டும் என்று அன்புக் கட்டளை வேறு போட்டிருக்கிறான்.  ஏன் ஹோமில் சேர்ந்து விட்டாய்? என்ன ஆயிற்று? என்று கேட்கக் கூட எனக்கு திராணியில்லை. துக்கம் அடைத்ததால் மேலே பேசவில்லை. குழந்தைகளைப்   ‘பார்த்துப் பார்த்து’ பாசத்தைக் கொட்டி வளர்த்தான். சுதந்திரம் கொடுத்து அவரவர்கள் இஷ்டப்பட்ட துறையில் ஜெயிக்க வைத்தான். அவனோடு சேர்ந்து அவன் மனைவியும் இரவு, பகல் என்ற அலுவலக ஷிப்டில் ஓடாய் உழைத்தாளே...அவர்களுக்கா இந்த நிலைமை?

என்ன கொடுமைடா இது. அவனை முதியோர் இல்லத்திலா சென்று பார்க்க வேண்டும்? என்று பல்வேறு குழப்பத்தோடு, கலங்கிய முகத்தோடு மெல்ல ஹோம்ஸ் இருக்கும் தெருவில் நான் நுழைந்தேன்.

அந்த கட்டிடத்தின் வாயிலில் பூரணி ஹோம்ஸ் என்று வண்ணமயமாக பெரிய எழுத்தில் பெயர் பொரிக்கப்பட்டிருந்தது. உள்ளே பெரிய கார் பார்க்கிங். வரிசையாக கார்கள் நிறுத்தப்பட்டிருந்தது. செக்யூரிடி வந்தழைத்து இராமநாதனின் அறைக்கு  என்னை அழைத்துப் போவதற்காக லிப்டில் கூடவே வந்தான். ரொம்ப வசதியான ஹோம்ஸ் தான் என்று நினைத்தபடி லிப்டை விட்டு வெளியே வந்தேன். இராமநாதன் தன் மனைவியோடு முகம் கொள்ளா சிரிப்போடு அவனது  ஃப்ளாட்டிலிருந்து வெளியே வந்து என்னை வரவேற்ற போது என் கண்களை என்னால் நம்பவே முடியவில்லை.

பிளாட்டின் பெயர் தான் பூரணி ஹோம்ஸ், அது முதியோர் இல்லம் இல்லை என்று புரிந்து போது என் மனதிலிருந்த கலக்கம் காணாமல் போய் சந்தோஷம் குடிகொண்டது.

தெய்வமே! தாய்க் குலத்தைக் காப்பாற்று
கே. பத்மாவதி
இன்று  காலை தான் அம்மா கிராமத்தில் இருந்து சென்னையில் இருக்கும் என் வீட்டிற்கு வந்தாள்.

நாளை மறுநாள் என் அத்தையின் கடைசி பெண்ணுக்குக் கல்யாணம். அதை சாக்கிட்டு 2 நாள் சேர்ந்தார்போல் இருக்கும்படி நான் தான் அம்மாவை வலுகட்டாயமாக வரவழைத்தேன். 

சென்ற வருடம் அப்பா இறந்த பிறகு, அம்மா தன்னந்தனியாக அவருடன் வாழ்ந்த வீட்டில் தான் இருப்பேன் என்று பிடிவாதமாக அங்கேயே வசித்து வருகிறாள். அப்பாவும் அம்மாவும் காந்தியவாதிகள். அவரது கொள்கைகளை வலுகட்டாயமாக கடைபிடித்து வாழ்ந்து காட்டியவர்கள்.  

ஐந்தாம் வகுப்புப் படிக்கும் என்னுடைய ஒரே பெண் ரோஷினியைக் கிளப்பிக் கொண்டு, நானும் என் மனைவி செல்வியும்  வேலைக்குத் தயாராகிக் கொண்டிருந்தோம். 

அம்மாவுக்கு ஏகப்பட்ட இன்ஸ்டிரக்‌ஷன்களை கொடுக்க வேண்டி இருந்தது. கிராமவாசியான அம்மாவுக்கு சென்னையின் அடுக்குமாடி குடியிருப்பு புதிது. அதோடு தனியாக வேறு இருக்க வேண்டும். நாளையும், நாளை மறுநாள் பற்றியும் கவலையில்லை. ஏனென்றால் இரண்டு நாட்கள்   செல்வி விடுப்பு எடுத்துக் கொள்வாள். என்னால் விடுப்பு எடுக்க முடியாத அலுவலகச் சூழல். 

என்ன செய்வது? யோசித்து ஒரு முடிவுக்கு வந்தோம்.  “டி.வி-யை  ஆன் செய்து விட்டுப் போகிறோம். அதுபாட்டுக்கும் மெலிதான சப்தத்தில் இருக்கட்டும். ஏன் என்றால் வீட்டில் யாரோ இருப்பதைப் போல வெளியில் தெரியும். அதோடில்லாமல் உங்களுக்கும் டிவி சப்தம் தனிமையைப் போக்கும். நீங்கள் உங்கள் விருப்பப்படி படித்துக் கொண்டோ அல்லது ஓய்வெடுத்துக் கொண்டோ இருங்கள். செல்வி  பர்மிஷன் போட்டு விட்டு சீக்கிரம் வந்துவிடுவாள்.” என்று அம்மாவிடம் சொல்லிக் கொண்டுப் புறப்பட்டோம். 

இரவு 8 மணி. நான் கை கால் கழுவி உடை மாற்றிக் கொண்டு அம்மா அமர்ந்திருக்கும் ஹாலுக்கு வந்தேன். செல்வி சமையல் அறையில் இருந்தாள். அங்கிருந்தபடியே ஹாலில் டி.வி. பார்த்துக் கொண்டே வேலையில் ஈடுபட்டிருந்தாள். ரோஷினி  ‘ஹோம் ஒர்க்’  செய்து கொண்டிருந்தாள். 

ஸ்ரீமத்பாகவதம் படித்துக் கொண்டிருந்த அம்மா மூக்குக் கண்ணாடியை கழற்றிவிட்டு என்னிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்தாள்.  இதை நாளை தபாலில் அனுப்பி விடுப்பா என்றாள். கடிதத்தில் இருந்தது என் மகளின் கையெழுத்து. ஆங்கில மீடியத்தில் படித்தாலும் தமிழ் வகுப்புகளுக்கு அனுப்பி தமிழையும் கற்றுக் கொடுத்ததன் பலன் அவளுக்கு தமிழ் நன்றாக எழுதவும் தெரியும். பேசவும் தெரியும். அவளது மழலைக் கையெழுத்து என்னை படிக்கத் தூண்டியது. அம்மாவிடம் அனுமதி பெற்று, செல்வியுடன் சேர்ந்து படிக்க ஆரம்பித்தேன். 

அன்பார்ந்த தொலைக்காட்சிக்கு, 
உங்கள் நிகழ்ச்சிகள் முழுவதையும் ஒரு நாள் முழுவதும் பார்க்கும் துர்பாக்கியம் இன்று எனக்கு நேரிட்டது. நீங்கள் எப்படிப்பட்ட நிகழ்ச்சியை வேண்டுமானலும் ஒளிபரப்புங்கள். அது சமுதாயத்தையும், இளைஞர்களையும் சீர்கெடுக்கும்  விதமாக இருப்பது என் மனதை உறுத்தியதால் தான் இந்த கடிதத்தை எழுத வேண்டியதாகி விட்டது. 

காலை 10 மணி துவங்கி ஏகப்பட்ட நாடகங்களை சீரியல்கள் என்ற பெயரில் ஒளிபரப்புகிறீர்கள். அதில் எல்லாம் மாமியார்களை மருமகள்கள் பாடாய் படுத்துவது போலவும், கொடுமைப்படுத்துவது போலவும், ஏன் விஷம் வைத்துக் கொலை செய்வது போலவும் காட்டுகிறீர்கள்.

பொதுவாக மாமியார்கள் எல்லோருக்கும் வயதாகி இருக்கும். 
குறைந்தபட்சம் 50 வயதாவது ஆகி இருக்கும். ஆனால் மருமகள்களுக்கு இளம் வயதாக இருக்கும். இன்னும் இந்த சமுதாயத்தில் பல ஆண்டுகள் வாழ வேண்டிய இளம் பெண்களை கொடுமைக்காரர்களாக சித்தரித்து அவர்களுக்கு தினம் தினம் நஞ்சை ஏன் புகட்டுகிறீர்கள். 

நல்லவர்களாகவே நிஜத்தில் வாழ்ந்து வரும் பெண்களுக்கும், இப்படித்தான் இருக்க வேண்டுமோ என்ற விஷத்தை அவர்களை அறியாமல் அவர்கள் உள்ளத்தில் புகட்ட வேண்டாமே. எப்போதும் போல மாமியார்களே கெட்டவர்களாக இருந்துவிட்டுப் போகட்டும். அவர்கள் வாழப் போவது குறைந்த வருடங்கள் தான். ஆனால் மருமகள்கள் வாழப் போவது பல வருடங்கள். எனவே உங்களுக்கு நாடகங்களில் யாரையாவது கெட்டவர்களாகக் காண்பித்தே ஆக வேண்டிய கட்டாயம் இருந்தால் வயதாகி கடமைகளை முடித்த  மாமியார்களையே கெட்டவர்களாகக் காண்பியுங்கள். நாங்கள் ஒன்றும் குறைந்து போய்விட மாட்டோம். தனக்கும், தன் குடும்பத்துக்கும், தனது குழந்தைகளுக்கும், இந்த சமுதாயத்துக்கும் தனது கடமைகளை எவ்வளவோ செய்ய வேண்டிய இளம் மருமகள்களை நல்லவர்களாக வாழ விடுங்கள். 

நன்றி 
இப்படிக்கு 
பட்டம்மா 

அம்மா பாகவத புத்தகத்தில் ஆழ்ந்திருந்தாள். ஏதோ சீரியல் ஓடிக் கொண்டிருந்த டி.வியை அணைத்துவிட்டு அம்மாவை என்றுமில்லாத புரிதலோடு பார்த்தாள்  செல்வி. நானும் தான்.  


காசி கயிறு
மல்லிகா சண்முகம்


காசிப் பட்டணத்துக்கே காலபைரவர்தான் காவல்காரர்.

காசியில் காலத்துக்குஅதிபதியான காலபைரவர் சக்தி உள்ளவர்.இவரை
வழிபட எதிரிகளின் தொல்லை விலகும். " ஸ்ரீ காலபைரவரை  வணங்கு;
காசி கயிற்றை கட்டு." என்பார்கள். காசிக்குச் சென்று ஸ்ரீ காலபைரவரை 
தரிசிக்க இயலாதவர்கள்கூட அங்கிருந்துபிரசாதமாகக் கொண்டு வரப்பட்ட காசிக் கயிற்றை மனதாரப் பிரார்த்தித்துக் கட்டிக் கொண்டால் 
கவசமென அந்தக் கயிறு நம்மைக் காக்கும்.

இவரை வணங்கிய பின் கையில் காசிக் கயிறு என்ற கருப்பு  நிறக் கைறை கட்ட வேண்டும். கருப்பு கயிறு உடல் நலத்திருக்கும், வாழ்க்கை வளத்திருக்கும் காப்பாக அமையும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
காசிக்கு போவதே பாவத்தைத் தொலைக்காதன். அந்த பாவங்களை 
கரிய இருளுக்கு ஒப்பிட்டு, நம் வலது கை மணிக்கட்டில் கருப்பு கயிறு
கட்டப்படுகிறது. இந்தக் கயிற்றில் ஐந்து முடிச்சுக்கள் இருக்கும்.
ஆணவம், பொறாமை, ஆசை,காமம், உடல் நிலையானது என்ற 
எண்ணமாகிய மாயை ஆகியவற்றை அந்த முடிச்சுக்கள் குறிக்கின்றன.

இந்த கயிற்றால் ஏற்படும் பலன்கள்:;-

1 பயத்தை போக்கும்.

2. தைரியும் தரும்.

3. கர்ம வினைகளை அழிக்கும்.

4. விபத்துகளிருந்து காக்கும்.

5. ஏவல், பில்லி, சூனியம் செய்வினை போக்கும்.

6.நோய்களையும், தோஷங்களையும்  விலக்கும்.

7. தீய கனவுகளை தோன்றாமல் செய்யும்.

8. கடன்கள் தீர்க்கும்.

9. பைரவர் அருளை பெருக்கும்..


குறையொன்றுமில்லை இறைவா ...
ரஜினி பாலசுப்ரமணியன்

ஆர்தர் ஆஷ் என்ற விம்பிள்டன் சாம்பியன் 1983-ல் இருதய ஆபரேஷன் செய்துகொண்டபோது வந்த இரத்தகலப்பு காரணமாக எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருந்தார். அப்பொழுது அவரது ஏராளமான ரசிகர்கள் “ஏன் கடவுள் உன்னைத் தேடிப்பிடித்து இந்தநோயால் அவஸ்தைப்பட வைத்தார்? என்று எழுதித் தள்ளினார்கள். அதற்கு ஆஷ் கூறிய பதில்:

“உலகில் கோடான  கோடி மக்களில் சுமார் 50 கோடி சிறுவர்கள் டென்னிஸ் விளையாட ஆசைப்படுகிறார்கள். அதில் 5 கோடி பேர் விளையாடத் துவங்குகிறார்கள். 50 லட்சம் பேர் விளையாடக் கற்றுக் கொள்ளுகிறார்கள். 5 லட்சம் பேர் முறையாக பயிற்சி செய்கிறார்கள். 50,000 பேர் அந்த டென்னிஸ் வளையத்துக்குள் நுழைகிறார்கள். இவர்களில் 5000 பேர் ‘கிராண்ட் ஸ்லாம்-க்குத் தகுதி பெறுகிறார்கள். 50 பேர் விம்பிள்டனுக்குத் தேர்வு செய்யப்படுகிறார்கள். அதில் 4 பேர் அரையிறுதிச் சுற்றுக்குள் நுழைகிறார்கள். 2 பேர் இறுதிப் போட்டியில் நுழைந்து கடைசியில் ஒருவர் மட்டுமே வெற்றி பெற்று கோப்பையை வெல்கிறார். அப்பொழுதெல்லாம் கடவுளிடம் நான் “ஏன், எப்படி?” என்று கேட்கவில்லை. துன்பத்தில் இருக்கும்போது மட்டும் அவரை அப்படிக் கேட்க எனக்கு என்ன தகுதி இருக்கிறது?  என்ற அவர் வார்த்தைகள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கும். 


துன்பம் வரும்போது இறைவனைக் குறைகூறுவது எவ்வளவு நியாயமற்ற செயல் என்பதை இதைவிடத் தெளிவாக யாராவது சொல்ல முடியுமா?

வலி
C.ராஜேஸ்வரி




பளீரென்ற  வலியில் துடித்து போனாள் ராஜம்.     இப்படிதான்  கடந்த ஆறு மாதமாக  இடது  கையில் வலியுடன் எரிச்சலும்  ஏற்பட்டு சில நிமிடங்களில்  மறைந்து விடுகிறது.முதலில் இதை பெரியதாக எடுத்து கொள்ளவில்லை  ராஜம்.    நாளாக நாளாக வலி தொடர்ந்து வர  ஆரம்பித்தவுடன்  அமெரிக்காவில்  இருக்கும் தான்  மகளிடம்  போனில்  சொன்னாள்.   மகள்  பதறி  போய்  " ஆறு மாதமாவா  வலியை வைத்துகொண்டு  டாக்டரிடம்  போகாமல் இருக்கிறாய்? உடனே  போய்  பார்" என்று  உத்தரவிட்டாள்.ராஜத்திற்கு  வயது ஐம்பத்தைந்து.  இது வரை எந்த நோயும்  பெரிதாக வந்ததில்லை.  இந்த வலி வேறேதும்  பெரிய கோளாறில் கொண்டு போய் விட்டு  விடுமோ என்ற பயத்துடன் டாக்டரிடம்  சென்றாள்."மேடம்,  உங்களுக்கு சர்க்கரை வியாதி  இது வரை இல்லை  என்று சொல்றீங்க.   ஆனால்  அது எப்போ  வேணாலும் வரலாம்.  சக்கரை வியாதி  இருந்தாலும்  இப்படி வலி வர  வாய்ப்பு இருக்கு.  அதனால்  சர்க்கரை  நோய்க்காக  ஒரு G.T.T டெஸ்ட் (க்ளுகோஸ் டாலரன்ஸ் டெஸ்ட் ) எடுத்து விடுங்கள்     கூடவே  கையையும்  ஒரு எக்ஸ்ரே எடுத்துக் கொண்டு  இரண்டு  ரிப்போர்ட்களுடன்  என்னை வந்து பாருங்கள் "அதே ஆஸ்பத்திரியில் மறு நாள் G.T.Tக்கு  பதிவு  பண்ணிவிட்டு  எக்ஸ்ரே எடுக்க சென்றாள் .மறுநாள் இரண்டு ரிப்போர்ட்களுடன் , மனதில் பயத்துடன்  டாக்டரிடம் சென்றாள இரண்டு ரிப்போர்ட்களையும்  பார்த்தார் டாக்டர் . " மேடம் , உங்களுக்கு  சர்க்கரை நோய் இல்லை என்று  G.T.T. ரிப்போர்ட்  மூலம் தெரிகிறது.  உங்கள்  கை எலும்பும் வலுவாக  இருக்கிறது.  எந்த கோளாறும்  எக்ஸ்ரேயில் தெரிய வில்லை.  உங்களுக்கு வயதாகி  விட்டது.  அதனால் தான் வலிக்கிறது.  வேறெந்த  கோளாறுமில்லை .  பிசியோதெரபிஸ்டை  பாருங்கள்." டாக்டர் பீஸ், எக்ஸ்ரே,  G.T.T டெஸ்ட் என்று  செய்ததில்  இரண்டாயிரம்  ரூபாய்  செலவானது.   ஒன்றுமில்லாததற்கு  இரண்டாயிரம்  ரூபாய்  செலவழித்தொமே என்று  மனதிற்கு  தோன்றியது ."அம்மா,  டாக்டர் என்ன  சொன்னார்? "போனில் ஆவலுடன்  கேட்டாள் மகள் " எனக்கு வயதாகிவிட்டதாம் .  இரண்டாயிரம்  ரூபாய் செலவழித்து  எனக்கு வயதாகி விட்டது என்பதை  தெரிந்துக்  கொண்டேன்.  எனக்கு வேறெந்த கோளாறும் இல்லையாம்.   பிசியோதெரபிஸ்டை  பார்க்க சொன்னார்."  பிசியோதெரபிஸ்டிடம் சென்றாள்  ராஜம்.  மெழுகு தெரபி தரப்பட்டது.   ஹீட் தெரபி  செய்யப் பட்டது.  அந்த அறையின்  மேற் கூரையிலிருந்து  கயிறு  ஜகடையில் தொங்கவிடப்பட்டு  இருந்தது.   கயிறை இரண்டு கைகளினாலும்  மேலிருந்து  கீழே  ஐம்பது  தடவை  இழுத்து விடச் சொன்னார்  பிசியோதெரபிஸ்ட் . இதை எங்கையோ  செய்த மாதிரி இருக்கே  என்ற யோசனை தோன்ற ,  பட்டென்று  ஞாபகம் வந்தது,  " ஆஹா  இது நான் சின்ன  வயதில்  கிராமத்தில்  கிணற்றில்  தண்ணீர்  இழுத்ததை  போல இருக்கிறதே.  இப்போது  இருக்கும்  வீட்டிலும் கிணறு. ஜகடை, வாளி இருக்கிறது.  ஆனால் ஒரு வாளி தண்ணீர்  கூட  இழுத்தது கிடையாது.  எப்போதும்  மோட்டார் மூலம்  தண்ணீர்  ஏற்றி  சொகுசாக  இருக்கிறோம்.  அந்த சொகுசை அனுபவித்ததின்  பலன் தான்  இந்த  வலி.  ஒரு  நாளைக்கு  இரு நூறு ரூபாய்  என்று  பதினைந்து நாட்களுக்கு   மூவாயிரம்  ரூபாய்  கொடுத்து  இங்கு  தண்ணீர் இழுப்பதை  போல் பாவனையில்   எக்ஸ்சைஸ் செய்கிறோமே " என்று தோன்றியது.பிறகு இரண்டு கைகளையும்  நீட்டி மடக்கி ஐம்பது தடவை செய்ய சொன்னார்  பிசியோதெரபிஸ்ட்.    இதுவும்  அம்மியில்  அரைப்பது  போலவே தோன்றியது.  அதன் பிறகு  கையை  வட்டமாக சுற்றச் சொல்லி  ஐம்பது தடவை  செய்ய  சொன்னார்.  இது  ஆட்டுக்கல்லில்  இட்லி  மாவு அரைத்ததை  ஞாபகப்படுத்தியது . எக்ஸ்சைசாக  செய்வதை விட நிஜமாகவே  அம்மியில் அரைத்தால் என்ன என்று  தோன்றியது ராஜதிற்கு.   உடனே  அம்மியும், ஆட்டுகல்லும்  வாங்கி  சமையலுக்கு  அரைக்க தொடங்கினாள். தினமும்  கிணற்றில் நீர் இறைத்து  அந்தக் குளிர்ந்த  நீரில்  குளித்து ஆனந்தப் பட்டாள்கரண்ட்  அடிக்கடி போகிறது.  அதனால் என்ன.  அம்மியில் அரைப்பேன் , கிணற்றில்  நீர்  இழுத்து  குளிப்பேன்.  கரண்ட்  இல்லையே  என்ற கவலை  போயே போச்சு   ராஜத்திற்கு.அந்தக் காலத்தில் தன்  தாய், பாட்டி  யாரும்  கை, கால், முதுகு  வலி என்று  சொன்ன ஞாபகமே இல்லை  ராஜத்திற்கு.   இப்போதும்  கூட வீட்டு வேலை  செய்யும்  வயதான  ஆயா  கூட  கை, கால்,  மடக்க முடியாமல்  அவதிப்படுவதில்லை.   அவர்களுக்கு  சுகாதார குறைவினால்  தான்  வியாதிகள் வருகிறதே  தவிர,  பி,பி, சர்க்கரை  வியாதி  வருவதில்லை.   காரணம்  தினம்  அவர்கள்   குனிந்து பெருக்கி,  தரையில்  கால்களை  மடக்கி  அமர்ந்து  பாத்திரம்  தேய்த்து  வேலை  செய்வதால்  அவர்கள்    ஆரோக்கியமாக    இருப்பதாக தோன்றியது   ராஜத்திற்கு..போன் அடித்தது.  அமெரிக்காவிலிருந்து  மகள் அழைப்பு.  " அம்மா ,  இப்போ  வலி எப்படி இருக்கு?  "வலியா?   எனக்கா?  வேலை செய்தேன்  வலி  போயே போச்சு " சந்தோஷமாக  சொன்னாள்  ராஜம்.
C.ராஜேஸ்வரி

என்னுயிர் தோழி கேளொரு சேதி


சியாமளா ராஜசேகர் 



நாள் தள்ளிப் போனதடி 

நாணம் என்னைத் தின்றதடி 
நானும் சேய்க்குத் தாயாக 
நாளும் கூடி வந்ததடி .....!! 

அங்க மெங்கும் சிலிர்த்ததடி 
அழகு மேனி கருத்ததடி 
அடி வயிறு அரித்ததடி 
அசை வெனக்குத் தெரிந்ததடி ....!! 

கிறக்கம் என்னை வதைத்ததடி 
குமட்டிக் கொண்டு வந்ததடி 
மாங்காய் கடிக்க இனித்ததடி 
சாம்பல் தின்ன பிடித்ததடி ......!! 

மயக்கம் நித்தம் வந்ததடி 
மசக்கை என்னை வறுத்ததடி 
வடித்த சோறு வெறுத்ததடி 
இருந்தாலும் மனம் துள்ளுதடி ....!! 

உலக உருண்டை போலுமென் 
உடலில் வயிறு பெருத்ததடி 
உருண்டு உள்ளே உதைத்ததடி 
உதையை உளமும் ரசித்ததடி ....!! 

நடையும் எனக்குத் தளர்ந்ததடி 
நடுக்கம் என்னுள் எழுந்ததடி 
ஆனாலும் என் மனமோ 
ஆனந்த யாழ் மீட்டுதடி ....!! 

பத்து மாத சுமையடி 
சுமை இதுவும் சுகமடி 
பூமலரும் நாள் காண 
பூவை மனம் ஏங்குதடி ....!! 

நலங்கில் மகிழ்ச்சி விளைந்ததடி 
வளை யோசை வசந்தமடி 
நலமுடன் பிள்ளை பெற்றெடுத்து 
நல்ல சேதி சொல்வேனடி ....!!!                    



தன்னம்பிக்கை
எஸ். நித்யாலஷ்மி



நீ விழுந்த போதெல்லாம்

தாங்கிப் பிடிக்கும்

இந்தக் கை

மனம் உடையும் போதெல்லாம்

தட்டிக் கொடுக்கும்

இந்தக் கை

தனியே நீ அழும்போதெல்லாம்

உன் கண்ணீரைத் துடைக்கும்

இந்தக் கை

அது வேறு யார் கையும் அல்ல
உன்னுள் உள்ள உனது தன்னம்பிக்கை
அதை மட்டும் ஒரு போதும்
இழந்து விடாதே!!!



பழையன கழிதலும், புதியன புகுதலும்...
-ரா. சொர்ணாம்பிகை எட்வர்ட்




அம்மாவும், பாட்டியும்
ஆட்டுக்கல்லிலும், அம்மியிலும்
அரைத்துக் கொடுத்த
அலுப்பு மருந்து பொடியும்....
ஐந்து மருந்து தூளும்....
அகில உலகமும்
பார்க்கும் படி அச்சில் ஏற்றி
ஐ-பேடில் அரங்கேற்றம் செய்து
பேஸ்புக்கில் பதிவு செய்து
அதைப்பார்த்து தான் குழந்தைக்கு
பெயர் வைக்கவும்,
மருந்து கொடுக்கவும்
மருவி மருவி தேடுகிறார்கள்
இன்றைய மகள்களும்....! மருமகள்களும்....!


ஏக்கம்

சியாமளா ராஜசேகர்


 




மூன்றுமுடிச்சு கழுத்தில்போட்டு 
மூவைந்து வருடமாச்சு 
முத்தென்னுள் முகிழ்க்கவில்லை 
மூடர்வார்த்தை தைத்திடுதே ! 

மூடுபனி என்வாழ்வை 
மூடிவைத்த மாயமென்ன 
மூப்புவந்து சேருமுன்னே 
மூரலென்னுள் மலராதோ ? 

வளைஅடுக்க வழியில்லை 
வளைகாப்பு நடக்கவில்லை 
பூச்சூடிப் பார்க்கவில்லை 
பூயென்னுள் பூக்கவில்லை ! 

பனிக்குடம் உடைந்ததில்லை 
பால்வடிந்து மணந்ததில்லை 
பழிசுமந்து கிடந்திடவே 
பாவமென்ன செய்தேனோ ? 

சொத்துசுகம் இருந்தென்ன 
சொர்க்கமே பிள்ளையன்றோ 
தாய்மைவரம் வேண்டுகின்றேன் 
தாயாகத் தவிக்கின்றேன் ! 

மார்பணைத்துப் பால்புகட்ட 
மங்கைமனம் துடிக்கிறதே 
மறலிவந்து கூப்பிடுமுன் 
மழலைமடி நிரப்பாதோ ? 

மலடியென்ற பட்டத்துடன் 
மயானம்போக மனமில்லை 
மாதம்பத்து நான்சுமக்க 
மடிப்பிச்சை கேட்கின்றேன் !!




ஒரு குழந்தையின் ஏக்கம்
ஆர். பிருந்தா ரமணி




வாரம் எல்லாம் அலுவலகத்திற்கு ஓடி
ஞாயிறன்றும் அழகுநிலையத்தைத் தேடி
பரபரப்பாக இருக்கும் அம்மாவே!
எனக்கு ஒரு வாய் பப்பு சாதம் ஊட்டுவாயா?

நாளெல்லாம் கணினியுடன் பேசி
மீதி நேரத்தில் நண்பர்களுடன் பேசி
அலுப்புடன் வரும் அப்பாவே!
எனக்காக உப்பு மூட்டை தூக்குவாயா?

பொழுதெல்லாம் அலைபேசியுடன் கொஞ்சி
தொலைக்காட்சியில் மூழ்கி
மிதக்கும் கனவுகளுடன் இருக்கும் அக்காவே!
என்னைத் தூக்கி வைத்துக் கதை சொல்வாயா?

இவை அனைத்தும் என் மழலை மொழியில்
சொல்லத்தான் நினைக்கிறேன்!
அதற்குள் வாயில் ரப்பர் நிப்பிள்!!!!


ஸ்மார்ட் லேடிக்கு ஒரு சல்யூட்...!
-ரா. சொர்ணாம்பிகை எட்வர்ட்.


சமையல் அறையில் சாகித்ய அகாதமி பெற்ற காலங்கள் ஓடிவிட்டது...!
விண்வெளியை வென்று விட்டோம் கல்பனா சாவ்லாவாய்...!
அன்றே போருக்கு சென்றோம் ஜான்சிராணியாய்....!
மறுத்துவாராய் மலர்ந்தோம் முத்துலக்ஷ்மி ரெட்டியாய்...!
ஐ.நா சபையில் விஜயலக்ஷ்மி பாண்டிட்டாய்...!
இன்று வீட்டில் இருந்து கொண்டு
மடிக்கணினி மூலமாக, விரல் நுனியில்....
உலகின் பழமையான தமிழ் மொழியின் வாயிலாக....
தன்னையும் உயர்த்தி...!
தன் திறமையையும் உயர்த்தி...!
உலகயே தன் வசமாக்கும் தன்னம்பிக்கை துருவ நட்சத்திரங்கள் ஆக்கிய
மங்கையர் மலர் ஸ்மார்ட் லேடிக்கு ஒரு சல்யூட்...!

அரசு பள்ளியும், மெட்ரிக் பள்ளியும்
-ரா. சொர்ணாம்பிகை எட்வர்ட்

பள்ளிப் பேருந்து
வீட்டு வாசலில்
இறக்கி விட்டது
மெட்ரிக் குழந்தையை
அரசு பள்ளியில்
இருந்து தாயின்
கையை பிடித்துக்
கொண்டு கொஞ்சி
விளையாடிக் கொண்டு
வந்த குழந்தையை
ஏக்கத்துடன் பார்த்தது
மெட்ரிக் குழந்தை

கலங்காதிரு பெண்ணே!
பிரியாதர்ஷினி எட்வர்ட்


பெண்ணே...!
வாழப்பிறந்தவளே...
புவி ஆளப்பிறந்தவளே....
சிலரின் வார்த்தைகளால்
உன் வாழ்வை
நீ வெறுக்காதே....!
வாழ்க்கை
பிரச்சனைகளின்
தொகுப்பு....!
அவற்றை உடைப்பதே
வாழ்வின் விறுவிறுப்பு...!
அது தரும் உனக்கு சுறுசுறுப்பு....!
நீ
சோராதே
அதை பார்த்து...!
பிய்த்து எறிந்துவிடலாம்...!
பஞ்சு மிட்டாயாய் கடித்து மென்றுவிடலாம்..!
------------------
கார் குண்டு வெடிக்காத கனவு நிறைவேறதா....?
-பாக்தாத் மக்கள் ஏக்கம்...!
குண்டு வெடிப்பு இல்ல சேவல் கூவும் சத்தம் கேட்காதா...?
-காஷ்மீர் மக்கள் கவலை...!
நாளை பொழுது அமைதியாக விடியாதா....?
-யாழ்பாண மக்கள் கனவு...!
நம்பிக்கை உண்டு ஒவ்வொரு விடிவின் மேலும்....!
-உலக மக்கள்
----------------------
பிரியாதர்ஷினி எட்வர்ட்
வயது:23
இளநிலை ஆய்வாளர் வணிகவியல்,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி,
நெல்லை-11


அதிகாலை நடைவழியில் ......!!!

சியாமளா ராஜசேகர்





வீதி வழியெங்கும் 
விருட்சத் தோரணங்கள் 
குடை விரிக்கும் ! 

நாசி நுகர தூயவளி 
சுவாசப் பை நிறைக்கும் ! 

நாடி நரம்பெங்கும் 
புத்துணர்ச்சி பிறக்கும் ! 

ஆசி வழங்குமாற் போல் 
மரமல்லி பூச்சொரியும் ! 

கிளை தெளிக்கும் பன்னீராய் 
பனித்துளி வரவேற்கும் ! 

தவழ்ந்து வரும் தென்றலும் 
சுகமாய் மேனி வருடும் ! 

கூவி புள்ளினமும் 
பரவச ஒலி எழுப்பும் ! 

கீழ்வானில் செங்கதிரும் 
பைய தலை தூக்கும் ! 

மலரும் அரும்பின் ஒலி 
காதோரம் முத்தமிடும் ! 

புலரும் பொழுதின் ஒளி 
பதமாய் இதமளிக்கும் ! 

தினம் காணும் காட்சியெனினும் 
மனம் விழையும் தினம் காணவே ! 

அதிகாலை நாளும் 
காலார நடை பயின்றால்... 
அலுப்பெல்லாம் பறந்தோடும் 
நோய்நொடியும் தொலைந்தோடும் ....!!





சுந்தர காண்டம் என்ற பெயர் வைத்ததேன்?
மல்லிகா சண்முகம்



சுந்தரமென்றால் அழகு பொருந்தினது என்று பொருள்.
ராமாயணத்தின் தத்வர்த்தத்தைக் கவனித்தவர்களுக்கு  அயோத்யையிலிருந்து ஜீவன் இந்திரியங்கள், அந்தக்காரணம் , முக்குணங்கள் என்ற இவைகளால் அக்ரமிக்க்ப்பட்டு ஸம்ஸார தசையில் கட்டுண்டு கிடைக்கையில் பரம .கருணிகரான பகவான் அதைத் தேடிச் சென்று  மறுபடியும் தன்னடிச் சோதிக்குச் சேர்த்துக் கொள்ள விரும்பிப  பரம குருவை அனுப்பிகிறார். அந்தக் குருவினுடைய தரிசனம் சிஷ்யனான ஜீவனுக்குக கிடைத்ததும் பகவானுடைய கல்யாண குணங்களை அவர் ஜீவனுக்கு உபதேசித்ததும்,அவர் தன்னைக் காப்பார்ரூவறென்று  ஜீவன் தைரியம்டைந்ததும், தன் நிலமையையும்  துக்கத்தையும் ஜீவன் ஆச்சர்யன் மூலமாக பகவானுடைய சன்னிதியில் தெரிவித்துக கொண்டதும் ஆச்சரியன் ஜீவனுடைய நிலமையைப பகவனிடத்தில் விண்ணப்பம் செய்து கொண்டதும் இந்தக் காண்டத்தில் சொல்லப்படுகின்றன. ஆகையால் இது சுந்தர காண்டமெனத் தகும்.  

சாப்பிட்ட இலையில்...
-பிருந்தா ரமணி



என் உறவினர் வீட்டில் நடந்த பூஜை ஒன்றில் கலந்து கொள்வதற்காக நாங்கள் குடும்பத்துடன் சென்றிருந்தோம். பூஜை முடிந்தவுடன் எல்லோரும் சாப்பிட உட்கார்ந்தோம்.  எங்கள் வீட்டில் சிறு வயது முதலே சாப்பிடும்போது தட்டில் எதையும் மிச்சம் வைக்காமல் சாப்பிட வேண்டும், சாப்பாட்டை வீணாக்கக் கூடாது என்று சொல்லி வளர்த்ததால் பந்தியில் தேவையானதை மட்டும் கேட்டு வாங்கிச் சாப்பிடுவது வழக்கம். நிறைய வாங்கி, அப்படியே சாப்பிடாமல் வைத்து விட்டு வரும் வழக்கம் இல்லை. ஆனால் அன்று அந்த வீட்டுப் பாட்டி இலையில் ஏதாவது கொஞ்சம் வைத்துத் தான் போட வேண்டும் என்று கொஞ்சம் சாதத்தைக் கொண்டு வந்து போட்டார்கள். அவர் சொன்ன விளக்கம் இது தான்: சாப்பிட்ட இலையை வெளியே கொண்டு போய்ப்  போடுவோம்;அப்போது அதைச் சாப்பிட வரும் பிராணிகள் (நாய், காகம் போன்றவை) இலையில் உணவு ஏதும் இல்லாவிட்டால், மனம் வருந்திச் செல்லும். இதைத் தவிர்க்க, நாம் சாப்பிட ஆரம்பிப்பதற்கு முன்பாகச் சிறு உருண்டை சாதத்தை ஓரமாக எடுத்து வைத்து விட்டுச் சாப்பிட்டால் நாம் இலையைத் தூக்கிப் போடும் போது அதைச் சாப்பிட வரும் பிராணிகள் ஏமாற்றம் அடையாமல் சாப்பிட்டு விட்டுச் செல்லும் என்பதைப் புரிந்து கொண்டோம். அவர் சொல்லுவதும் நியாயம் தானே!

உணவும், குணமும்!
- கே. பத்மாவதி
நம் ப்ளாகில் எழுதிய முதல் வாசகியின்  கட்டுரை!


உணவுக்கும், குணத்துக்கும் சம்மந்தம் உண்டு என்பதை மகாபாரதத்தில் ஓர் நிகழ்வு அருமையாக விளக்குகிறது. அது என்ன என்று பார்ப்போம்.

பீஷ்மர் அம்புப் படுக்கையில் வீற்றிருக்கிறார். அப்போது அவரிடம் தர்மநீதியைப் பற்றிப் பற்றிச் சொல்லுங்கள் என்று எல்லோரும் கேட்கின்றனர்.

‘மனிதர்கள் நடுநிலையாக இருக்க வேண்டும். தவறை யார் செய்தாலும் நடுநிலையோடு கண்டிக்க வேண்டும்’ என்றார் பீஷ்மர்.

அப்போது திரெளபதி கேட்கிறார்.
‘இந்த நியாய எண்ணம் என்னை துகில் உரித்த போது ஏன் வரவில்லை?’

பீஷ்மர் பொறுமையாக பதிலுரைத்தார்.
‘அப்போது நான் துரியோதனனின் சாப்பாட்டை சாப்பிட்டு வளர்ந்தேன். அதனால் நடுநிலை தவறி நடந்து கொண்டேன். அநியாயங்களுக்கு துணை நின்றேன். இப்போது நான் அம்புப் படுக்கையில் படுத்திருப்பதால் அவன் உணவால் உருவான இரத்தம் அனைத்தும் வெளியேறி விட்டது. இப்போது நான் என் சுய குணத்தோடு இருக்கிறேன். அதனால் என் பேச்சில் தர்மமும், நடுநிலையும் வெளிப்படுகிறது’

உணவு அளிப்பவனின்  குணநலன்களினால், அந்த உணவை உண்டு வாழ்பவர்களின் குணநலன்கள் மாறுபடும் என்பது இந்நிகழ்வின் மூலம் தெளிவாகிறதல்லவா?