ஸ்...சீக்ரெட்! இது டைரி!

எனக்கு நான்கு பேருக்கு முன்னால் நின்று பேசவே பயமாக இருக்கிறது. கால்கள் நடுங்குகின்றன. எப்படி பயத்தைப் போக்கிக் கொள்வது? 
என்ற கேள்வியை கேட்டிருக்கிறார் விருதாச்சலத்தில் இருந்து ஸ்வாதி.
ஒன்று தெரியுமா? சாதனையாளர்கள் அனைவரும் சாதனையாளர்களாகவே பிறப்பதில்லை. அவர்களும் சாதாரணமானவர்களைப் போலவே தான் பிறக்கின்றனர்.  ஆனால் அவர்கள் வளர்கின்ற போது, ஒரு காலகட்டத்தில் தங்கள் நிலை உணர்ந்து, அடிப்படையான தங்களின் குணநலன்களில் தேவையான மாற்றங்களை செய்து கொண்டதோடு, வாழ்நாள் முழுவதும் தங்கள் பண்புகளை மேம்படுத்தி உயர்த்திக் கொள்ள தொடர்ச்சியாக உழைத்ததால் தான் உலகம் போற்றும் வெற்றியாளர்களாக மாறியிருகிறார்கள் என்பதே உண்மை. 
ஆம். பெரும்பாலான சாதனையாளர்கள் சிறுவயதில் படிப்பில் நாட்டமில்லதவர்களாக, பயந்த சுபாவம் உள்ளவர்களாக, தன்னம்பிக்கை அற்றவர்களாக, கோழைகளாக இருந்துள்ளனர். உதாரணத்துக்கு உலகமே ‘மஹாத்மா’ என்று போற்றுகின்ற மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி சிறுவயதில் மிகவும் வெட்க சுபாவம் உடையவராகவும், படிப்பில் சராசரி மாணவனை விட பின்தங்கியவராகவும், பிறரிடம் பேசுவதற்கே பயப்படும் கோழையாகவும் இருந்துள்ளார். கல்லூரி காலத்திலும் எல்லா பாடங்களிலும் தோல்வியடைந்துள்ளார். காந்திஜி தன் மாமாவின் வற்புறுத்தலினால் லண்டனுக்குச் சென்று சட்டம் படிக்கச் சென்ற போது பல மாதங்கள் வீட்டு நினைவுகளால் இரவு நேரங்களில் கண்ணீர் விட்டு அழுது கொண்டே இரவு நேர தூக்கத்தைத் துறந்திருக்கிறார். அடுத்த கப்பல் ஏறி ஊர் திரும்பி விடலாம் என்று பல நாட்கள் யோசித்திருக்கிறார்.
எல்லாவற்றையும் மீறி சட்டம் முடித்து இந்தியா திரும்பியவருக்கு தொடர்ச்சியான தோல்விகளே ஏற்பட்டன. லண்டனில் படித்த சட்டம் தவிர இந்தியாவின் சட்டம் பற்றி தெரிந்திருக்கவில்லை. முதல் வழக்கைக் கையாளும் போது கோர்ட்டில் வாதாட முடியாமல் கால்கள் நடுங்க ஆரம்பித்தன. இன்னும் சொல்லப் போனால் வாயில் இருந்து காற்று மட்டுமே வந்தது. பயம் உலுக்கி எடுக்க ஆரம்பிக்க, தன் வழக்கை சக வழக்கறிஞரிடம் ஒப்படைத்து விட்டு கோர்ட் அறையை விட்டு வெளியேறி ஓடி விட்டார்.
இந்நிலையில் காந்திஜிக்கு தென்னாப்பிரிக்காவில் கணக்குப் பதிவேடுகளை பராமரிக்கின்ற ஒரு நிறுவனத்துக்கு சட்ட ஆலோசனை வழங்கும் பணி கிடைத்தது. அதுவும் காந்திஜிக்கு சவாலாகவே இருந்தது. ஏனெனில் அவருக்கு கணக்கு பற்றி எதுவுமே தெரியாது.
இந்த காலகட்டத்தில் தான் காந்திஜி தன் நிலை உணர ஆரம்பித்தார். தொடர்ச்சியான சவால்கள் நிறைந்ததே வாழ்க்கை என்பதையும், ஒன்றில் இருந்து மற்றொன்றுக்கு மாறிக் கொண்டே இருந்தால் எந்த ஒரு பணியிலும் நிலைத்திருக்க முடியாது என்பதையும் புரிந்து கொண்டார். சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளவும், மேம்படுத்திக் கொள்ளவும், திறமையையும் வளர்த்துக் கொள்ளவும் முயற்சி செய்வது ஒன்று தான் வெற்றி பெற ஒரே வழி என்பதையும் புரிந்து கொண்டார். கணக்குகளைக் கற்றுக் கொண்டார். தன்னிடம் வருகின்ற வழக்குகளை தைரியமாக கையாள முயற்சி செய்தார். தன் வழக்கின் இரு தரப்பினரிடமும் கோர்ட்டுக்கு வெளியே பேசி அவர்களை சமாதானம் செய்து வைக்கின்ற திறமையைப் பெற்றார்.  இதன் காரணமாக வழக்குகள் விரைவில் முடிவுக்கு வந்தன. மனிதர்களின் குணத்தைப் படித்து, அவர்கள் இதயத்துக்குள் இடம் பிடித்து, இரு தரப்பினரின் அன்பையும் பெற்று, வழக்கை சுமூகமாக முடித்துக் கொடுத்து சிறந்த வழக்கறிஞர் என்ற பெயர் எடுக்க ஆரம்பித்தார்.
பேசுவதற்கே கால்கள் நடுங்கிய காந்திஜி, தலைசிறந்த வழக்கறிஞர் என்று பெயரெடுக்கக் காரணம்: அடிக்கடி சூழலை மாற்றிக் கொண்டே இருப்பதைத் தவிர்த்து,  கிடைத்த சூழகுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு, திறமைகளை மேம்படுத்திக் கொண்டதினாலேயே வெற்றி கிடைத்தது.

10, 12-ம் பரிட்சை ரிசல்ட் வரும் நேரம்...மாணவ, மாணவிகளுக்காக... 
மங்கையர் மலர் 
மே 1-15, 2014  இதழில் வெளியான கட்டுரை

நம்பிக்கை... நெஞ்சில் வை...
(உண்மை நிகழ்வின் அடிப்படையிலான கட்டுரை)

இன்று +2 ரிசல்ட். நான் வசிக்கின்ற அப்பார்ட்மெண்ட்டில் உள்ள பிள்ளைகள் பரபரப்பாக தங்கள் மொபைலிலும், கம்ப்யூட்டரிலும் ரிசல்ட் பார்த்துக் கொண்டிருந்தார்கள். எங்கள் தெருவில் இருக்கும் பிரவுசிங் செண்டரில் சீசனல் பிசினஸாக ரிசல்ட் பார்த்துச் சொல்லும் பிசினஸ் பிசியாக நடந்து கொண்டிருந்தது.

ஒவ்வொரு குழந்தையின் முகத்தையும் நான் பார்த்துக் கொண்டிருந்தேன். யாருக்குமே முழு திருப்தி இல்லை. 1200 க்கு 1100 மதிப்பெண் எடுத்த பிள்ளைகளுக்கும் வாடிய முகம் தான். 1200 க்கு 700 மதிப்பெண் எடுத்த பிள்ளைகளுக்கும் வாடிய முகம் தான். தேர்வில் ஃபெயிலான பிள்ளைகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். வாழ்க்கையே முடிந்து விட்டதைப் போல துக்கம். அவமானம். தலை நிமிராமல் வீட்டு அறைக்குள் முடங்கிப் போயினர். தோல்வி அடைந்த பிள்ளைகளின் பெற்றோர்கள் கண்களும், மூக்கு நுனியும் சிவக்க அழுது புலம்பி திட்டி தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தத் தெரியாமல் குமுறிக் கொண்டிருந்தனர்.

திடீரென்று எங்கள் தெரு முனையில் இருக்கும் ஒரு வீட்டில் அலறல் சப்தம். கூட்டம் கூடியது. காற்று துக்கச் செய்தியைப் பரப்பியது.
தேர்வில் தோல்வி அடைந்த ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டு விட்டாள். செய்தியைக் கேள்விபட்ட எனக்கே உயிரை உலுக்கியது. அந்தப் பெண்ணை நான் தினமும் என் நிறுவனம் செல்லும் வழியில் பார்ப்பேன். துறுதுறுவென பார்ப்பவரை ஈர்க்கும் முகம். சாதிக்கப் போகிறேன் என சொல்லாமல் சொல்லும் கண்கள். ஒடிசலான உடல்வாகு. அப்பா, அம்மா இருவருக்கும் கட்டட வேலை. ஒருமுறை நான் பேச்சுக் கொடுத்தேன். அப்போது அவள், ‘நான் படித்து முடித்து என் அப்பா அம்மாவை ஒரு பெரிய வீடு கட்டி அதில் சந்தோஷமா வச்சுக் காப்பாத்துவேன்’ என்று சொல்லியிருக்கிறாள். சொன்ன சொல்லைக் காப்பாற்றாமல் ஏண்டி செத்துப் போனாய்? என்று என் மனம் அரற்றியது.

நன்றாகப் படிக்கும் பெண் தானே? எப்படி தோல்வி அடைந்தாள். ரீ-வேல்யுயேஷனுக்கு அப்ளை செய்து பார்த்திருக்கலாமே பெண்ணே… திருத்துபவர்களும் மனிதர்கள் தானே கண்ணே… உன் விடைத்தாளைத் திருத்தும் போது அவர்கள் மனநிலை எப்படி இருந்ததோ? நம் வெற்றி தோல்வி என்பது நம் உழைப்பிலும், முயற்சியிலும் மட்டும் இல்லை கண்மணி… பல சூழல்களைத் தாண்டித் தான் அதற்கான ரிசல்ட் தெரியும். ஆனால் உழைப்பதை மட்டும் நாம் சலிக்காமல் செய்து விட வேண்டும். அதற்கான பலன் நேரடியாக இல்லையென்றாலும் நிச்சயம் மறைமுகமாகக் கிடைக்கும். இது பற்றியெல்லாம் புரியாமல் சட்டென போய்விட்டாயே குழந்தாய்?

தூர இருந்து ரசித்த எனக்கே அவள் மறைவு தாங்க முடியவில்லையே? ஆசை ஆசையாய் ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணென்று வளர்த்த அந்த ஏழைப் பெற்றொருக்கு எப்படி இருக்கும்? அழுது புரண்டாலும் என்று ஆறும் அவர்கள் துக்கமும், இழப்பும்?

குறைந்த மதிப்பெண், தேர்வில் தோல்வி, கிடைத்த கோர்ஸ் கிடைக்கவில்லை – இப்படி தோல்வி எந்த வடிவத்தில் உங்களை வந்தடைந்திருந்தாலும் அதுபற்றி நீங்கள் கவலைப் படுங்கள், அழுங்கள். சோகமாய் இருங்கள். இரண்டு நாட்கள் சாப்பிடாமல் கூட இருங்கள். ஆனால் எந்தத் தவறான முடிவையும் எடுக்காதீர்கள்.
என் வாழ்வில் நான் சந்தித்த ஒரு நபரை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன். அவரைப் பற்றித் தெரிந்து கொண்ட பின் முடிவெடுங்கள் - நீங்கள் எவ்வளவு பாக்கியசாலிகள் என்று.

2008-ஆம் ஆண்டு. இன்லண்ட் லெட்டர் ஒன்று எனக்கு வந்திருந்தது.
----------------------------------------------------------------------------------
‘அன்புடையீர் அம்மா அவர்களுக்கு,
எனது பணிவன்பான இனிய நமஸ்காரங்கள். தாங்கள் நடத்தி வரும் மென்பொருள் நிறுவனத்தையும், தங்களால் தமிழில் எழுதப்பட்டு வரும் நூல்களையும் கேள்விப்பட்டுள்ளேன். பத்திரிகைகளில் தாங்கள் எழுதி வரும் கம்ப்யூட்டர் தொடர்களையும், தன்னம்பிக்கைக் கட்டுரைகளையும் தொடர்ந்து படித்து வருகிறேன்.
கடந்த மூன்று வருடங்களாக கணினி அடிப்படைகளைக் கற்றுக் கொண்டு வருகிறேன். அத்துடன் தொலைதூரக் கல்வியில் B.Sc., பட்டப் படிப்பையும் படித்து வருகின்றேன். எனக்கு தற்போது C, C++, Java போன்ற கம்ப்யூட்டர் மொழிகளைக் கற்றுக் கொள்ள ஆர்வமாக உள்ளது.
எனக்கு அம்மா அவர்கள் Java, C, C++ போன்ற நூல்களை இலவசமாக தந்து உதவுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இந்த உதவியை தாங்கள் செய்து கொடுப்பீர்கள் என்று அன்புடன் எதிர்பார்க்கிறேன்.
இவண்
தங்கள் உண்மையுள்ள,
ரமேஷ்
----------------------------------------------------------------------------------
இவருக்கு என்ன குறைச்சல்…கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கிறார். அத்துடன் கம்ப்யூட்டரில் பயிற்சியும் எடுத்து வருகிறார். நீங்கள் நினைப்பது எனக்குப் புரிகிறது.

கொஞ்சம் பொறுங்கள். கடிதத்தின் அடுத்த பக்கத்தில் உள்ள வாசகங்களையும் படியுங்கள்.
----------------------------------------------------------------------------------
பின்குறிப்பு:

‘அம்மா, என் வயது 35. நான் சிறைச்சாலையில் கடந்த 10 வருடங்களாக தண்டனைக் கைதியாக இருக்கிறேன்’
----------------------------------------------------------------------------------
இப்படி எழுதி சிறைச்சாலையின் அவருடைய கைதி எண்ணைக் குறிப்பிட்டு, சிறை அலுவலரிடம் கையெழுத்து வாங்கி, சீல் வைத்திருந்தார். சிறைச்சாலையின் முகவரியைக் குறிப்பிட்டு அம்முகவரிக்கு புத்தகங்களை அனுப்பி வைக்குமாறு கேட்டிருந்தார்.
ஏதோ சந்தர்ப்ப வசத்தால் சிறைக்குச் சென்ற அந்த இளைஞர் நம்பிக்கையை இழக்காமல் தன்னுடைய படிப்பைத் தொடர்ந்துள்ளார். நம்பிக்கை உள்ள மனிதர்களுக்கு அவர்கள் விரும்பும் சூழல் தானாகவே அமையப்பெறும் என்பதற்கு இதைவிட என்ன உதாரணத்தைக் காட்ட முடியும்.

அவரது தன்னம்பிக்கைக் கொடுத்த ஆர்வம், அவரைப் படிக்கத் தூண்டியது. ஏதோ ஒருநிறுவனம் கைதிகளுக்கு சிறப்பு கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்க, அதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்த, அந்நிறுவனமே அவருக்கு எல்லா கம்ப்யூட்டர் மொழிகளையும் கற்றுக் கொடுத்தது.

அவரது நம்பிக்கை கொடுத்த தைரியம், எனக்குக் கடிதம் எழுத வைத்தது. நானும் புத்தகங்களை அனுப்பி வைத்தேன்.
அவரது நம்பிக்கைக் கொடுத்த சக்தி, அவர் ஜெயிலில் இருந்து வெளியே வரும் முன்பே நல்ல வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. ஆம். அவருக்குக் கம்ப்யூட்டர் பயிற்சி அளித்த நிறுவனமே அவருக்கான ஒரு வேலையை ஏற்பாடு செய்து கொடுத்தது.

இந்தக் கதையை எல்லாம் நான் சிறைச்சாலை அலுவலர்களிடம் தொலைபேசியில் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.
25 வயதில் ஜெயிலுக்குச் சென்ற இவராலேயே முடியும் போது உங்களால் முடியாதா?
----------------------------------------------------------------------------------
ஹைலைட் பாயிண்ட்:

“தோல்வி எந்த வடிவத்தில் உங்களை வந்தடைந்திருந்தாலும் அது குறித்து நீங்கள்...

• கவலைப் படுங்கள்
• சோகமாய் இருங்கள், அழுங்கள்
• இரண்டு நாட்கள் சாப்பிடாமல் கூட இருங்கள்

ஆனால் எந்தத் தவறான முடிவையும் எடுக்காதீர்கள்”
இவை மாணவர்களுக்கு மட்டும் அல்ல. நம் ஒவ்வொருவருக்கும் தான்.

----------------------------------------------------------------------------------
நான் 12-ம் வகுப்பு தேர்வு எழுதி விட்டு ரிசல்ட்டுக்காகக் காத்திருக்கிறேன். எதிர்பார்த்த மதிப்பெண் வருமா என்று கவலையாக உள்ளது? 
- செல்வி, திருவண்ணாமலை

இந்த கேள்விக்கான பதிலை, தேர்வு எழுதி விட்டு ரிசல்ட்டுக்காகக் காத்திருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் பொதுவாக கொடுக்கிறேன்.

என் அன்புச் செல்வங்களே,
நலம். நலம் காண அவா.  
என்ன எல்லோரும் பரிட்சை எழுதி முடித்து ரிசல்ட்டுக்காக காத்திருக்கிறீர்களா? ரொம்ப டென்ஷனா இருக்கா? உங்க டென்ஷனைக் குறைத்து ரிலாக்ஸாக இருக்கத் தான் இந்த கடிதத்தை உங்களுக்கு அனுப்பி உள்ளேன். சலிப்பில்லாமல் ஜாலியான மனநிலையில் பொறுமையாக படித்துப் பாருங்கள்.
வெற்றி, தோல்வி குறித்து கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் உங்களுக்கே ஆச்சர்யமாக இருக்கும்.
100/100 மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு,  99.5 மதிப்பெண் எடுத்தால், அவர்களைப் பொறுத்தவரை அது மிகப்பெரிய தோல்வி. 99.5 எடுத்த மாணவன் அழுது கொண்டிருந்தால், நல்ல மதிப்பெண் தானே? ஏன் அழுகிறான்? என்று மற்றவர்களுக்கு ஆச்சர்யமாக இருக்கும். ஆனால் அவன் மனதில் அவனின் வெற்றியாக 100 மதிப்பெண்ணை எழுதி வைத்திருந்ததால் வந்த விளைவு தான் அழுகையும், ஏமாற்றமும்.
100-க்கு 50 மதிப்பெண் எடுப்பவர்களுக்கு 60 மதிப்பெண் எடுத்தால், அவர்களைப் பொறுத்தவரை அது மிகப்பெரிய வெற்றி. 60 மதிப்பெண் வாங்கிய மாணவன் சாக்லெட் கொடுத்து சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தால் 60 மதிப்பெண் தானே வாங்கியிருக்கிறான்? எதற்கு இந்த கூத்து? என்று பார்ப்பவர்கள் ஏளனம் செய்யலாம். ஆனால் அவன் மனதில் எழுதி வைத்திருந்த  50 மதிப்பெண்ணுக்கு சற்று அதிகமாக மதிப்பெண் வந்ததுமே அவனுக்கு தான் வெற்றி பெற்றுவிட்ட சந்தோஷம். 
ஆம். வெற்றி, தோல்வி இரண்டுமே ஒருவித மனநிலை தான். இவை இரண்டும் நாம் நமக்குள் உருவாக்கிக் கொள்ளும் ஒரு கண்ணாடி பிம்பம். நம் மனதில் நாம் உருவேற்றி வைத்திருக்கும் உணர்வுப் பூர்வமான அழகான பிம்பம் தான் வெற்றி தோல்விகளை நிர்ணயம் செய்கிறது.
வெற்றிக்கானக் காரணங்களை குறிக்கோள், உழைப்பு, முயற்சி இவற்றை மட்டும் சொல்லிவிட முடியாது. உங்கள் உடல்நிலை, மனநிலை, வீடு, கல்விக்கூடம், சமுதாயம், நண்பர்கள், ஆசிரியர்கள் இப்படி பலதரப்பட்ட காரணிகள் உங்கள் வெற்றிக்குச் சாதகமாக இருப்பதால் தான், நீங்கள் வெற்றி பெற்றதாக பெருமிதம் கொள்ள முடிகிறது.
எப்படி உங்கள் வெற்றிக்கு நீங்கள் எடுக்கும் முயற்சிகள் மட்டும் காரணமில்லையோ, அதுபோல, உங்கள் தோல்விக்கும் நீங்கள் மட்டும் காரணமல்ல என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். வெற்றிக்குக் காரணிகளாகச் சொன்ன அத்தனை காரணிகளும் உங்கள் தோல்விக்கும் காரணிகளாக இருக்கலாம்.
நம் வாழ்க்கை என்பது ஏற்கனவே எழுதி வைக்கப்பட்ட ஒரு புத்தகம். அதில் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு பக்கம். அடுத்த பக்கத்தில் என்ன இருக்கிறது என்பதை அடுத்த நாள் தான் தெரிந்து கொள்ள முடியும். உங்கள் சக்திக்கு ஏற்ப கடுமையாக முயற்சியுங்கள். வெற்றி தோல்விகள் குறித்து பயப்படாதீர்கள். குறிக்கோளுடன் முயற்சிப்பதும், உழைப்பதும்  மட்டுமே உங்கள் பணியாக இருக்க வேண்டும். வெற்றி, தோல்வி என்பது உங்கள் கைகளில் இல்லை. ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் நம்பிக்கையை  மட்டும் கைவிட்டு விடாதீர்கள்.
உதாரணத்துக்கு ஒரு உண்மை சம்பவத்தைச் சொல்கிறேன்.
  • 1831 ல் வியாபாரத்தில் தோல்வி.
  • 1832 ல் சட்டசபைத் தேர்தலில் தோல்வி.
  • 1834 ல் வியாபாரத்தில் மீண்டும்தோல்வி.
  • 1835 ல் அவரது காதலி மரணம்.
  • 1836 ல் அவருக்கு நரம்பு நோய் வந்தது.
  • 1838 ல் தேர்தலில் தோல்வி.
  • 1843 ல் காங்கிரஸ் தேர்தலில் தோல்வி.
  • 1848 ல் மீண்டும் காங்கிரஸ் தேர்தலில் தோல்வி.
  • 1855 ல் செனட் தேர்தலில் தோல்வி.
  • 1856 ல் துணை அதிபர் தேர்தலில் தோல்வி.
  • 1858 ல் செனட் தேர்தலில் மீண்டும் தோல்வி.
  • 1861 ல் அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்று அமெரிக்க ஜனாதிபதியானார்.

30 வருடங்கள் தன் வாழ்நாளில் தோல்வி ஒன்றையே சந்தித்து வந்த மாமனிதன் இறுதியில் தன் புகழ் உலகமெங்கும் பரவும் விதத்தில் வெற்றியை சந்தித்தார். இத்தனை தோல்விகளையும் சந்தித்தவர் யார் தெரியுமா? அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன்தான். இவரை விடவா உங்களுக்கு தோல்விகள் அதிகம்…? அதிக தோல்விகள், அதிக படிப்பினைகள்,  இவையே வெற்றியின் இரகசியம்…!
நம் வாழ்க்கையில் எந்த நிமிடமும் வெற்றிக்கான வெளிச்சம் தென்படலாம். தோல்வியினால் துவண்டு போய் கண்களை மூடிக் கொண்டு அழுது கொண்டிருந்தால் வெற்றிக்கான வெளிச்சத்தை பார்க்க முடியாமல் தவற விட்டு விடுவோம். எனவே தோல்விகளை அஸ்திவாரமாக்கிக் கொண்டு தொடர்ந்து விடா முயற்சியுடன் வாழ்க்கைப் பயணத்தில் பயணித்து வந்தால் வெற்றி நிச்சயம். தோல்விகள் கூட நம்மைக் கண்டு வெட்கித் தலை குனிந்து ஓட்டமெடுப்பது உறுதி.
தோல்விக்கு பயந்தாங்கொள்ளிகளைத் தான் ரொம்ப பிடிக்குமாம். அதனால் தான் அவர்களையே குறிவைத்துக் கொண்டு அவர்களை தஞ்சம் அடைகிறது. நாம் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றால் பயப்படாமல் தைரியமாக எதையும் எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
பரிட்சையில் தோல்வியடைந்து விட்டாலோ அல்லது குறைந்த மதிப்பெண் எடுத்து விட்டாலோ, தற்கொலை செய்து கொள்வது, பயந்து கொண்டு வீட்டை விட்டு ஓடுவது இதுபோன்ற கோழைத்தனமான செயல்களை செய்வதைப் போல முட்டாள் தனமான செய்கைகள் எதுவுமே கிடையாது. அதுபோல தற்கொலை என்பது எந்த பிரச்சனைக்கும் தீர்வாகாது. மாறாக உங்கள் பெற்றோர்களுக்கு வாழ்நாள் முழுவதும் ஆறாத துக்கத்தைக் கொடுக்கக் கூடியது.
உங்களை ஆசை ஆசையாய் பெற்று, தங்கள் சக்திக்கும் மீறி படிக்க வைத்து பெரிய ஆளாக உயர்த்தும் கனவில் இருக்கும் பெற்றோர்களுக்கு நீங்கள் செய்யும் ஒரே உதவி என்ன தெரியுமா? எந்த தோல்வி வந்தாலும் அதை எதிர்த்து நின்று, ‘கவலைப்படாதீர்கள்… நான் ஜெயித்துக் காட்டுவேன், வாழ்ந்து காட்டுகிறேன்’ என்று வார்த்தைகளால் சொல்லா விட்டாலும், உண்மையில் வாழ்ந்து காட்டுவதே உங்களை பெற்றெடுத்த பெற்றொருக்கு நீங்கள் காட்டும் மரியாதை-அன்பு-பாசம்.
அவமானங்கள், தோல்விகள், சறுக்கல்கள்: இவை தான் நம்மை இன்னும் வேகமாக வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும்; ‘ஜெயித்துக் காட்டுவேன்’ என்ற ஆற்றல்மிக்க உத்வேகத்தை அளிக்க வல்லது; வெற்றிக்கான அறிகுறியை ஏற்படுத்திக் கொடுக்க வல்லது; தோல்விகள் கொடுக்கின்ற வலிகள் அழுகையை ஏற்படுத்தும். மனம் விட்டு அழுது விடுங்கள். அந்த நிமிடங்களில் எந்த முடிவையும் எடுக்காதீர்கள். எதைப் பற்றியும் யோசிக்காதீர்கள். துக்கம் தீர அழுது விடுங்கள். பிறகு பாருங்கள் உங்களுக்குள் அசாத்தியமான தைரியமும் தன்னம்பிக்கையும் புகுந்து கொள்வதை.
தோல்வி தருகின்ற வேதனையினால் அழுகின்ற அந்த குட்டி இடைவெளியில் எடுக்கின்ற முடிவுகள் தான் ஆபத்தானவையாக முடிகின்றன. அபத்தமானதாகவும் மாறிவிடுகின்றன.
தோல்வி, வேதனை, வலி, துக்கம் இவை உங்கள் மனதை ஆக்கிரமித்திருக்கும் போது எந்த முடிவுகளையும் எடுக்காதீர்கள்.
‘என்னைச் சந்திப்பவர்கள் வெற்றி அடையாமல் போவதில்லை: இப்படிக்கு தோல்வி’ என்ற அருமையான வாசகத்தை ஃபேஸ்புக் பதிவில் பார்த்தேன். இந்த கருத்தை உங்கள் மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.
உங்களைப் போலவே நானும் ஒரு மாணவியாய் இருந்து வெற்றி தோல்விகளை சந்தித்து அதிலிருந்து நல்ல படிப்பினைகளைக் கற்று தேர்ந்து, இன்று இந்த சமுதாயத்தில் மனிதநேயம் மிக்க நல்ல மனுஷியாய் வாழ நித்தம் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.
ü  தோல்வியைக் கண்டு துவலாதீர்கள்…
ü  நாம் பயணிக்கும் எல்லை வெகுதொலைவில் உள்ளது…
ü  அதோ தெரிகிறதே அதுதான் வெற்றி என்று முன்னோக்கிச் செல்லுங்கள். வெற்றி உங்கள் பாதத்தில்!

இப்படிக்கு,
உங்களில் ஒருவரான அன்பு சகோதரி

காம்கேர் கே புவனேஸ்வரி
(நன்றி: விஜயபாரதம், 18-04-2014)