காம்கேர் கே புவனேஸ்வரி |
அந்தக்கால தமிழ் சினிமாக்களில் குடும்பப்பாடல் என்பது பிரசித்தி பெற்ற ஒன்று. ஹீரோ தன் குடும்பப் பாடலைப் பாடுவார். உடனே, ஹீரோயின்
எங்கிருந்தாலும் அந்தப் பாடலைக் கேட்டு ஓடிவருவார்.
அதுபோல, நாம் நம் குடும்பத்துக்கென்று
குடும்பப் பாஸ்வேர்டை உருவாக்கிக் கொள்ள முடியும். அது என்ன குடும்ப பாஸ்வேர்ட்?
இன்று, குழந்தைகள் பள்ளி, டியூஷன்,
சிறப்பு வகுப்புகள் என்று வீட்டைவிட்டு பலமணி நேரங்கள் வெளியே இருக்க வேண்டிய சூழல்.
பெரும்பாலான வீடுகளில் இருவரும் வேலைக்குச் செல்கின்ற தேவை இருப்பதால், தனியாக இருக்க வேண்டியது இன்றைய பெரியோர்களின் நிலை.
குடும்பத் தலைவிகளுக்கு, குழந்தைகளையும், கணவனையும் பள்ளிக்கும், அலுவலகத்துக்கும்
அனுப்பிவிட்டு, வீட்டில் தனியாக இருக்க வேண்டிய கட்டாயம். இவர்கள் அனைவருக்கும் பாதுக்காப்பு
அரணாய் இருக்கும் குடும்பப் பாஸ்வேர்ட்.
இன்றைய இன்டர்நெட் உலகில் இமெயில், ஃபேஸ்புக், டிவிட்டர், வலைப்பூ,
வெப்சைட் என்று எல்லா வசதிகளையும் பயன்படுத்துகின்ற மக்களை பாதுகாப்பது பாஸ்வேர்ட்கள்
தான்.
இதுபோலவே நம் குடும்ப உறுப்பினர்களுக்கும்
பொதுவான ஒரு பாஸ்வேர்டைப் பயன்படுத்தி பாதுகாப்பான சூழலை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
பள்ளிக்குச் சென்றிருக்கும் குழந்தைகளை
அறிமுகம் இல்லாத நபர்கள் ‘உன் அப்பாவுக்கு
ஆக்ஸிடெண்ட் ஆகிவிட்டது’, ‘அம்மாவுக்கு உடம்பு சரியில்லை’ என்று ஏதேனும் காரணங்களைச்
சொல்லி ஏமாற்றி கடத்திச் சென்று விடுவது தொடர்ந்து
நடைபெற்றுக் கொண்டுவரும் ஒரு அவலமாக உள்ளது.
அதுபோல வீட்டில் தனியாக இருக்கும்
ஹவுஸ் மேக்கர்களிடம் ஏசி, ஃபிரிட்ஜ், மைக்ரோ
வேவ் ஓவன் சர்வீஸ் செய்கின்ற நபர்கள் என அறிமுகம் இல்லாத நபர்கள் கணவன் அனுப்பியதாகச்
சொல்லி ஏமாற்றி கொலை, கொள்ளை நடைபெறுகின்ற காலத்தில் இருக்கிறோம்.
வீட்டில் தனியாக இருக்கின்ற பெரியோர்களுக்கும்
இதுபோல பாதுகாப்பில்லாத நிலைதான்.
ஒவ்வொரு குடும்பத்துக்கும் பாஸ்வேர்ட்
ஒன்றை உருவாக்கி வைத்துக் கொண்டால், அறிமுகம் இல்லாத நபர்கள் அணுகும்போது அவர்களிடம்
அந்த பாஸ்வேர்டை கேட்கலாம். பாஸ்வேர்டை அவர்கள் சரியாகச் சொன்னால் மட்டும் அவர்களை
நம்பலாம், இல்லையென்றால் அவர்கள் மோசடிப் பேர்வழிகள் என முடிவெடுக்கலாம்.
குடும்பப் பாஸ்வேர்டை நம் இண்டர்நெட்
பாஸ்வேர்டை போலவே இரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும், குழந்தைகளுக்கும் பழக்க வேண்டும்.
ஒருமுறை குடும்பத்தில் உள்ள நபர்கள் யாரேனும் அந்தப் பாஸ்வேர்டைப் பயன்படுத்திவிட்டால்,
உடனே பாஸ்வேர்டை மாற்றிவிட வேண்டும்.
இந்த ஐடியாவிற்கு பிள்ளையார்சுழி போட்டவர்
பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்று சமூகவலைதளங்களில் இவரது கருத்து பெருத்த வரவேற்பைப்
பெற்றுள்ளது.
என் சிறுவயதில், என் அப்பா அம்மா இருவருக்கும்
24 மணிநேர சுழற்சி வேலை. இரவு, பகல் என்று பாராமல், தீபாவளி, பொங்கல் என்று பண்டிகை
தினங்களிலும் வேலைக்குச் செல்லும் பணிச்சூழல்.
யாரேனும் ஒருவர் மாற்றி மாற்றி வீட்டில் இருந்தாலும், என்றாவது இருவரும் சேர்ந்து பணிக்குச்
செல்ல வேண்டியதாகிவிடும். அந்தக் காலத்தில் வீட்டு வாசலில் வந்து பிச்சை கேட்போர் அதிகம்.
அதுபோன்ற சூழலில் என் தம்பி, தங்கைகளுடன் வீட்டில் தனியாக இருப்பேன். பிச்சை கேட்போர்
வந்தால், வீட்டினுள் சென்று அப்பா அம்மாவிடம் கேட்பதைப் போல கேட்டு வந்து, அவர்களை
போகச் சொல்லிக் கற்றுக் கொடுத்திருந்தார்கள்.
அதுபோல அப்பா இரவு ஷிஃப்ட் சென்றால்,
அம்மா எங்கள் மூவரையும் அருகருகே படுக்க வைத்துக் கொள்வார். திருடர்கள் வந்தால் கண்களில்
துவுவதற்காக, தலையணை அருகில் மிளகாய் பொடி டப்பா வைத்திருப்பார்.
மேலும் பள்ளிகளில் யாரேனும் வந்து
அழைத்தால் செல்லக் கூடாது, அறிமுகம் இல்லாத நபர்கள் கொடுக்கின்ற தின்பண்டங்களை சாப்பிடக்
கூடாது என்றெல்லாம் சொல்லிக் கொடுத்து வளர்த்தார்கள்.
காலமாற்றத்துக்கு
ஏற்றாற் போல, இன்றைய இண்டர்நெட் உலகில் குழந்தைகளுக்கு குடும்பப் பாஸ்வேர்ட் என்பது
ஒரு வரப்பிரசாதமாக அமையும். அனைவரும் இதை கடைபிடித்துதான் பார்ப்போமே!