Monday 10 February 2014

இண்டர்நெட் பாதுகாப்பு தினம்

ஹலோ மங்கையர் மலர் ரீடர்ஸ், 

        ஸ்மார்ட் லேடி தொடருக்கும் அதன் தொடர்பான ஃபேஸ்புக் மற்றும் ப்ளாகிற்கும் ஆதரவளித்து வரும் வாசகிகள் அனைவருக்கும் மங்கையர் மலர் சார்பில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இன்று மிக முக்கியமான நாள்.        

இன்று Safer internet day (SID), ஃபிப்ரவரி 11. இண்டர்நெட் பாதுகாப்பு  குறித்த விழிப்புணர்வு நாள்.  Cyber பயணம் குறித்து சில விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். 

உலகம்...நல்லதும் இருக்கும், கெட்டதும் இருக்கும். இன்று நாம் பயணித்துக் கொண்டிருக்கும் சைபர் வேர்ல்டிலும் இரண்டுமே கலந்திருக்கும். கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் சார்ந்த உலகிற்கு சைபர் வேர்ல்ட் என்று பெயர். அதில் பாதுகாப்பாய் பயணிக்கும் சூட்சுமத்தைக் கற்றுக் கொள்ள வேண்டியது நம் ஒவ்வொருவருக்கும் அவசியமாகிறது. ஏனெனில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகோடு, இரயில் தண்டவாளம் போல சைபர் வேர்ல்டும் இணைந்து வந்து கொண்டிருக்கிறது. இரண்டையும் பேலன்ஸ் செய்தே வாழ வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் அறிமுகமான ஆரம்ப காலகட்டங்களில் நம் வாழ்வில் இருந்து, மிகவும் பின்தங்கி இருந்த சைபர் வேர்ல்ட், கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி இன்று இணையாக வந்து கொண்டிருக்கிறது. இனிவரும் காலத்தில் சைபர் வேர்ல்ட் இன்னும் வேகமாக முன்னேறிச் சென்று விடும்; நம் வாழ்க்கை முழுமையாக சைபர் வேர்ல்டைச் சார்ந்தே இருக்கும் என்பதில் சந்தேகத்துக்கு இடமே இல்லை.

இப்போது இந்த உலகம் நமக்கு இரண்டு வாய்ப்புகளைக் கொடுத்துள்ளது. ஒன்று நேரடியாக அந்தந்த அலுவலகங்களுக்குச் சென்று வசதிகளைப் பயன்படுத்திக் கொள்வது; மற்றொன்று இன்டர்நெட்டில் ஆன்லைனில் உட்கார்ந்த இடத்தில் இருந்தே அவற்றைப் பெறுவது.

இனி வரும் காலத்தில், சைபர் வேர்ல்டில் எல்லாமே இன்டர்நெட் மயமாக்கப்பட்டிருக்கும். புத்தகங்கள், தியேட்டர்கள், கடைகள், லைப்ரரிகள், பள்ளிகள், கல்லூரிகள்...இப்படி எல்லாமே இருக்கும் இடம் தேடி இன்டர்நெட் மூலம் வந்து விடும். மனிதர்களின் சேவைகள் குறைந்து எங்கும் எதிலும் கம்ப்யூட்டர் மற்றும் அதன் தொழில் நுட்பங்களின் ஆதிக்கம் நிறைந்திருக்கும். தவித்த வாய்க்கு தண்ணீர் கிடைக்காத குறையாக மனித உதவி குறைந்து போயிருக்கும். எனவே, இப்போதிலிருந்தே, வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பத்தோடு இணைந்து வளர்ந்து வாருங்கள். அப்போது தான் இனி வரும் காலத்தில் மற்றவர்களை சார்ந்திருக்காமல் வாழ முடியும்.

நம் வாழ்வில் நாம் சந்திக்கின்ற அத்தனை பிரச்சனைகளையும் சைபர் வேர்ல்டில் கம்ப்யூட்டர், இன்டர்நெட் சார்ந்தவைகளாக சந்திக்க வேண்டியுள்ளது. டெபிட் கார்ட், கிரெடிட் கார்ட் மோசடிகள், நெட்பேங்கிங் சிக்கல்கள், மொபைல் போன் அம்பலங்கள்,  இன்டர்நெட் மிரட்டல்கள், இமெயி(லி)ல் அச்சுறுத்தல்கள், ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சோஷியல் நெட்வொர்க்குகளில் அத்துமீறல்கள்,  யு&டியூபில் அம்பலமாகும் இரகசியங்கள், வெப்சைட்டுகளில் ஆன்லைன் மோசடிகள், ஆன்லைன் ஆள்மாறட்டம், கம்ப்யூட்டரில் வைரஸ்கள், குழந்தைகள் மீதான ஆபத்துக்கள் என்று ஏகப்பட்ட ஆபத்துக்கள் நித்தம் நம்மை பயமுறுத்திக் கொண்டு தான் இருக்கின்றன. 

இதுபோன்ற கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் சார்ந்த குற்றங்களுக்கு சைபர் க்ரைம் என்று பெயர். சைபர் குற்றங்களுக்கும், ஆபத்துக்களுக்கும் பயந்து கொண்டு சைபர் வேர்ல்டை விட்டு விலகி விடவும் முடியாது. அப்படி விலகினால், நாம் இந்த சமுதாயத்தை விட்டே விலகி வாழ வேண்டிய சூழல் உண்டாகி விடும். மாற்றங்களோடு இணைந்து பயணிக்கும் போது தான் சமுதாயத்தோடு ஒன்றி வாழ முடியும்.

நம் நாட்டில் கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆரம்ப காலகட்டத்திலேயே சாஃப்ட்வேர் நிறுவனத்தை தொடங்கி, இன்டர்நெட் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்ட காலகட்டத்தில் சைபர் வேர்ல்டில் காலடி எடுத்து வைத்ததோடு, தமிழையும், கம்ப்யூட்டரையும் இணைத்து சாஃப்ட்வேர் தயாரிப்புகளை உருவாக்கி, அம்முயற்சியில் வெற்றி பெற்றேன். அந்த தொழில்நுட்ப முயற்சி இத்துறையில் முதல் முயற்சியாகும் என்பது குறிப்பிடத் தக்கதாகும். 

என் 20 வருட தொழில்நுட்ப அனுபவத்தினாலும், 70-க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர் மற்றும் சாஃப்ட்வேர் தொடர்பான நூல்களை எழுதிய அனுபவத்தினாலும், பயிலரங்குகள் பல நடத்துவதன் மூலம் ஆயிரக்கணக்கானவர்களை சந்திப்பதால் கிடைக்கின்ற நேரடி அனுபவத்தினாலும், சைபர் வேர்ல்டில் பாதுகாப்பாய் பயணிப்பதற்குத் தேவையான தொழில்நுட்ப விவரங்களை தொகுத்து புத்தகமாக்கியுள்ளேன். 

புத்தகத்தின் பெயர்:  நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்
                                         (சைபர் க்ரைம் குறித்த விழிப்புணர்வு புத்தகம்)
மங்கையர் மலர் 15 ஜனவரி 2014 இதழில் வெளியான புத்தக விமர்சனம்

சென்னை காவல்துறை அதிகாரி டாக்டர் ஆர். சிவகுமார்(DC, CCB, Chennai)  அவர்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில், நாம் சந்திக்கின்ற சைபர் குற்றங்களுக்கு சட்டரீதியாக அணுகும் முறைகளையும், காவல் துறையில் புகார் அளிக்கும் வழிமுறைகளையும் இந்நூலில் விளக்கிக் கொடுத்துள்ளேன். 

'நீங்கள் உங்கள் அளவில் பாதுகாப்பாக இருங்கள், உண்மையாக செயல்படுங்கள்'--இதுதான் காவல்துறையினர் பொதுமக்களுக்கு வலியுறுத்தும் கருத்துக்கள்.

சைபர் வேர்ல்டில் மூன்றாவது கண் நம்மை கண்காணித்துக் கொண்டிருக்கிறது என்ற உணர்வோடு தான் பயணம் செய்ய வேண்டும். அது காமிராவின் கண்ணாக இருக்கலாம்; வேவு பார்க்கும் ஸ்பை சாஃப்ட்வேர்களின் கண்ணாக இருக்கலாம்; வைரஸின் கண்ணாக இருக்கலாம்; பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு டீ குடிக்கும் நண்பனின் கண்களாக இருக்கலாம்...எச்சரிக்கை உணர்வோடு தான் பயணிக்க வேண்டும். அப்போது தான் சைபர் வேர்ல்டில் நம் பயணம், பாதுகாப்பான பயணமாக இருக்கும்.

வாழ்த்துக்கள். Happy Journey!

           -  காம்கேர் கே.புவனேஸ்வரி
                                                                                                         நன்றி: விகடன் பிரசுரம்