இடம்: கல்கி அலுவலகம்
நாள்: 16-04-2014 - புதன் கிழமை
மார்ச் மாத மங்கையர் மலர் இதழில் ஜி.எஸ்.எஸ் 'சிறகடித்துப் பறப்போம்' என்ற தலைப்பில் மாணவர்களின் மேற்படிப்பு சம்பந்தமான கேள்விகளுக்கு விடை அளித்தார். இதனைத் தொடர்ந்து, மாணவர்களுக்கு ஏற்படக்கூறிய சந்தேகங்களுக்கு நேரில் விளக்கம் அளிக்க உள்ளார். கல்கி அலுவலகத்தில் நடக்கவிருக்கும் இந்த ஒன் டே வொர்க்ஷாப்பில் கலந்து கொண்டு பயன் பெறுங்கள்...முன் பதிவுக் கட்டணம் ரூ.100 வரும் 16.04.2014 (புதன்கிழமை) காலை 11 மணியிலிருந்து மாலை 4 மணி வரை.
மேல் படிப்பு மற்றும்வேலை வாய்ப்பு தொடர்பாக சில இளைய தலைமுறையினர் கேட்ட சில கேள்விகளும் அவற்றிற்கான பதில்களும் பிறருக்கும் பயனளிக்கக் கூடியவை.
* எனக்குப் பேச்சுத் திறமை கிடையாது. ஆனாலும் சட்டப் படிப்பில் ஆர்வம் உண்டு. சட்டக் கல்வி எனக்கு ஒத்துப் போகுமா?
‘’கனம் கோர்ட்டார் அவர்களே” என்று தொண்டை கிழிய நீதிமன்றத்தில் பேசுவது மட்டுமே வழக்கறிஞர்களின் வேலை அல்ல. சட்ட உதவிக்காக தன்னிடம் வருபவர்களுக்கு அவர்களின் சட்ட உரிமைகளை எடுத்துச் சொல்ல வேண்டும். எந்தவிதத்தில் செயல்பட்டு அந்த உரிமையை நிலைநாட்டலாம் என்பதற்கான வழிமுறைகளைச் சொல்ல வேண்டும். ஒப்பந்தம், உயில் போன்றவற்றை எப்படி வடிவமைக்க வேண்டும் என்பதில் ஆலோசனை கூற வேண்டியிருக்கலாம்.
வழக்கறிஞர்களைப் பொருத்தவரை அவர்கள் படித்த படிப்பு உதவுவதைவிட, அவர்கள் பெறும் அனுபவம்தான் அதிகம் உதவும். எனவே திறமையுள்ள சீனியர் வழக்கறிஞர் ஒருவரின் உதவியாளராக சில வருடங்கள் பயிற்சி பெறுவது நல்லது. சட்டத்தில் பல பிரிவுகள் உள்ளன. சிவில் சட்டம், கிரிமினல் சட்டம், தொழிலாளர் சட்டம், வரி சட்டம், சர்வதேச சட்டம் என்பது போன்ற பல பிரிவுகளில் நீங்கள் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து ஸ்பெஷலைஸ் செய்யலாம்.
சொல்லப் போனால் நீதிமன்றத்திற்கே வராமல், நிறைய சம்பாதிக்கும் வழக்கறிஞர்கள் உண்டு. பிரபல நிறுவனங்களுக்கு சட்ட ஆலோசகராக இருக்கலாம். டிரஸ்டுகளுக்கு டிரஸ்டியாகச் செயல்படலாம்.
* பப்ளிக் ரிலேஷன்ஸ் பதவிக்கென்று படிப்பு ஏதாவது உண்டா?
மக்கள் தொடர்புப் பணியில் மிக முக்கியமான இரண்டு விஷயங்கள். சூழலை சட்டென்று கிரகித்துக் கொள்ளும் தன்மையும், சரியான தகவல் பரிமாற்றமும்தான். எனவே உங்களால் சரளமாகவும், தெளிவாகவும் பேச முடிகிறது, பிரச்னைகளை உடனுக்குடன் புரிந்து கொண்டு முடிவெடுக்க முடிகிறது என்றால் தாராளமாக நீங்கள் பி.ஆர்.ஓ. ஆகலாம். ஊடகங்களிலும், பெரும் நிறுவனங்களிலும் இந்த வாய்ப்புகள் நிறைய உள்ளன. கார்ப்பரேட் கம்யூனிகேஷன் எனும் படிப்பும், எம்.பி.ஏ.வை சிறப்புப் பிரிவாக ஆங்கிலம் மற்றும் மனிதவளம் ஆகியவற்றை எடுத்துக் கொள்வதும் மக்கள் தொடர்புப் பணிக்கான வேலை வாய்ப்பில் உங்களுக்கு முன்னுரிமை அளிக்கும்.