Wednesday, 10 September 2014

ஆண்கள் வெட்கப்பட வேண்டும்


காம்கேர் கே புவனேஸ்வரி
        ஆண்களின் எண்ணிக்கையை விட பெண்களின் எண்ணிக்கைக் குறைந்து வருகிறது. எங்கு பார்த்தாலும் பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள். 3 வயது குழந்தை 30 வயது ஆணால், 40 வயது பெண்மணி 19 வயது ஆணால் என்று வயது வித்தியாசமின்றி பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். கருவில் உதித்த பெண் சிசு முதல் பல்லும், சொல்லும் போன பாட்டிகள் வரை எந்த நேரத்தில் என்ன ஆகுமோ என்ற ஒருவித பயத்துடன் நாட்களை நகர்த்த வேண்டிய அவலத்தில் தான் வாழ்ந்து வருகிறோம். இதுதவிர கருவிலேயே பெண் குழந்தைகளை அழித்து விடுவதும் ஆங்காங்கு நடந்து கொண்டுதான் உள்ளது.

      மிக சமீபத்தில் ஒரு செய்தியைப் படிக்க நேர்ந்தது. சென்னையில் பிசியாக இருக்கும் ஓரிடத்தில், முன்இரவு நேரத்தில், புதிதாகக் கட்டிக் கொண்டிருந்த கட்டிடத்துக்கு அருகே, மது அருந்திய இளைஞர்கள் 4 பேர் அமர்ந்து போதையில் பிதற்றிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அமர்ந்திருந்த இடத்துக்கு அருகே, ஒரு நாய் 8 குட்டிகளை ஈன்றிருந்தது. போதையில் அந்த இளைஞர்கள் தாயின் உடலோடு உடலாய் ஒட்டிக் கொண்டு படுத்திருந்த நாய் குட்டிகளை சீண்டிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் ஒருவன் ஒரு குட்டி நாயின் மீது கல்விட்டு எறிய, தாய் நாய்க்கு வந்ததே கோபம்… ஆக்ரோஷமாய் குரைத்து, பாய்ந்து பயம்காட்டி, வெறியில் அங்கும் இங்கும் ஓடி அவர்களை கொலைவெறியில் பார்த்து ஊளையிட ஆரம்பித்தது. போதை கண்களை மறைக்க, அந்த இளைஞர்களுக்கு அந்த தாய் நாய் மீது வந்ததே கோபம்… அந்த இடத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த செங்ககற்களை எடுத்து அந்த குட்டி நாய்கள் மீது வேகமாக அடித்தார்கள். ஆளுக்கு 2 நாய்க்குட்டிகள் என 8 நாய்களையும்  அடித்தே கொன்று விட்டார்கள். அந்தத் தாய் நாய் மீதும் தொடர்ந்து கல்லடிக் கொடுத்து விரட்டியபடியே இருந்திருக்கிறார்கள். தாய்நாய் எவ்வளவு போராடியும் தன் குட்டிகளைக் காப்பாற்ற முடியவில்லை. இந்த செய்தியை இறந்த எட்டு குட்டிநாய்களும் வரிசையாய் படுத்திருக்க, தாய்நாய் ஏக்கத்தோடு அவற்றைப் பார்த்தபடி நின்று கொண்டிருக்கும் புகைப்படத்தோடு வெளிடிட்டிருந்தார்கள். அது மிகவும் பரிதாபமாக உள்ளத்தை உருக்கும் காட்சியாக இருந்தது.

      நாயாக இருந்தாலும், போதையில் அந்த இளைஞர்களுக்கு அந்தத் தாய்நாயைப் பார்க்கும் போது பெண்நாயாக மட்டுமே பார்க்க முடிந்திருக்கிறது. அதனால் தான் அதைப் பழிவாங்கும் எண்ணத்தில் பிறந்து சிலமணி நேரங்களே ஆகியிருந்த பிஞ்சு நாய்க்குட்டிகளை கொன்று வெறியை தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

      சமீபத்தில் டெல்லியில் தன் நண்பனோடு சினிமாவுக்குச் சென்றுவிட்டு பஸ்ஸில் வீடு திரும்பிக் கொண்டிருந்த ஒரு இளம் பெண்ணுக்கு நடந்த கொடூரமான பாலியல் வன்கொடுமைக்கும் போதையில் இருந்த இளைஞர்கள் தான் காரணம்.  சுயநினைவில் இருக்கின்ற எந்தஒரு மனிதனாலும் அந்த அளவுக்கு கொடூரங்களை செய்ய முடியாது.

      பஸ்ஸில் இளம் பெண்ணை கொடூரமாகச் சீரழித்து அவரது இறப்பிற்குக் காரணமான இளைஞர்களுக்கும், பிறந்து சிலமணிநேரங்களே ஆன பிஞ்சு நாய்க்குட்டிகளை கல்லாம் அடித்தே கொன்ற இளைஞர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. போதை, பெண் பாலினம் மீதான வக்கிரம், ஆண் என்கின்ற கர்வம் இப்படி எல்லாமுமாக சேர்ந்து அவர்கள் கண்களை மறைக்க என்ன செய்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் கொடூரங்களை அரங்கேற்றி வருகிறார்கள்.

      ஆகஸ்ட் 15, 2014 சுதந்திர தின விழாவில் நம் நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடி நிகழ்த்திய உரையில் மிக அழகாக ஒரு விஷயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

‘பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. இதற்கு ஆண்கள் வெட்கத்தால் தலைகுனிய வேண்டும். பெண்களைத் துன்புறுத்தும் ஆண்களும் நம்மில் ஒருவரது மகன் தான். பெண் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியேச் செல்லும் போது எங்கு செல்கிறாய் என்று கேட்டு கட்டுப்படுத்துவதைப்  போல, ஆண் குழந்தைகளையும் கேள்வி கேட்க வேண்டும். கட்டுப்படுத்த வேண்டும். ஆண் குழந்தைகளுக்கும் ஒழுக்க நெறிகளையும், கட்டுப்பாடுகளையும் கற்றுத் தர வேண்டும்…’

இதைத் தானே பாரதியார் அன்றே அழகாய் பாடிச் சென்றுள்ளார்.

கற்பு நிலையென்று சொல்ல வந்தார்,இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்;…………..
ஆணெல்லாம் கற்பைவிட்டுத் தவறு செய்தால்
அப்போது பெண்மையும் கற்பழிந்தி டாதோ?...........

      வீட்டில் அம்மாக்கள் தங்கள் பெண் குழந்தைகளுக்குக் கற்றுத் தருவதைப் போல, ஆண் குழந்தைகளுக்கும் ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும். மேலும் அப்பாக்கள் நல்ல ரோல்மாடலாக இருக்க வேண்டும்.  ‘ஆம்பிளை சிங்கம்டா நீ’, ‘நீ அம்பளைடா…பெண் போல அழுது கொண்டிருக்கிறாய்?’ என்ற ஆண்களை உசுப்பேற்றுகின்ற வார்த்தைகள் அகராதியில் இருந்தே நீக்கப்பட வேண்டும். ஆண், பெண் என்கின்ற பேதமில்லாமல் வளர்க்கப்படுகின்ற குழந்தைகள் மனதளவில் ஆரோக்கியமாக வளர்கிறார்கள். பெண் குழந்தைகளைக் கண்காணிப்பதைப் போலவே, ஆண் குழந்தைகளையும் கண்காணிக்க வேண்டும்.

      இறைவன் படைப்பில் ஆணும், பெண்ணும் சமம். இருவரையும் ஒப்பிடக் கூடத் முடியாது. அதற்கு அவசியமும் இல்லை. ஒவ்வொருவருக்கும் தனித்தனி சிறப்புகளும், மேன்மைகளும் உள்ளன. உதாரணத்துக்கு நெருப்பு என்பது பஞ்சபூதங்களில் ஒன்று, தண்ணீர் என்பது மற்றொன்று. இரண்டில் எது சிறந்தது என்று ஒப்பிட முடியுமா? இரண்டுமே நமக்குத் தேவை. தனித்தனியாக சக்திவாய்ந்தவை. அதுபோல தான் ஆண், பெண் என்ற இருபாலினரும் தனித்தனியாக சக்தி வாய்ந்தவர்கள்.

      புரிந்து கொள்வோம். ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கப் போராடுவோம். வெற்றி பெறுவோம்.

Wednesday, 3 September 2014

குடும்ப பாஸ்வேர்ட்

காம்கேர் கே புவனேஸ்வரி
       அந்தக்கால தமிழ் சினிமாக்களில் குடும்பப்பாடல் என்பது பிரசித்தி பெற்ற ஒன்று.  ஹீரோ தன் குடும்பப் பாடலைப் பாடுவார். உடனே, ஹீரோயின் எங்கிருந்தாலும் அந்தப் பாடலைக் கேட்டு ஓடிவருவார்.
      அதுபோல, நாம் நம் குடும்பத்துக்கென்று குடும்பப் பாஸ்வேர்டை உருவாக்கிக் கொள்ள முடியும். அது என்ன குடும்ப பாஸ்வேர்ட்?
      இன்று, குழந்தைகள் பள்ளி, டியூஷன், சிறப்பு வகுப்புகள் என்று வீட்டைவிட்டு பலமணி நேரங்கள் வெளியே இருக்க வேண்டிய சூழல். பெரும்பாலான வீடுகளில் இருவரும் வேலைக்குச் செல்கின்ற தேவை இருப்பதால்,  தனியாக இருக்க வேண்டியது இன்றைய பெரியோர்களின் நிலை. குடும்பத் தலைவிகளுக்கு, குழந்தைகளையும், கணவனையும் பள்ளிக்கும், அலுவலகத்துக்கும் அனுப்பிவிட்டு, வீட்டில் தனியாக இருக்க வேண்டிய கட்டாயம். இவர்கள் அனைவருக்கும் பாதுக்காப்பு அரணாய் இருக்கும் குடும்பப் பாஸ்வேர்ட்.
      இன்றைய இன்டர்நெட் உலகில் இமெயில், ஃபேஸ்புக், டிவிட்டர், வலைப்பூ, வெப்சைட் என்று எல்லா வசதிகளையும் பயன்படுத்துகின்ற மக்களை பாதுகாப்பது பாஸ்வேர்ட்கள் தான்.
      இதுபோலவே நம் குடும்ப உறுப்பினர்களுக்கும் பொதுவான ஒரு பாஸ்வேர்டைப் பயன்படுத்தி பாதுகாப்பான சூழலை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
      பள்ளிக்குச் சென்றிருக்கும் குழந்தைகளை அறிமுகம் இல்லாத நபர்கள்  ‘உன் அப்பாவுக்கு ஆக்ஸிடெண்ட் ஆகிவிட்டது’, ‘அம்மாவுக்கு உடம்பு சரியில்லை’ என்று ஏதேனும் காரணங்களைச் சொல்லி ஏமாற்றி கடத்திச்  சென்று விடுவது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுவரும் ஒரு அவலமாக உள்ளது.
      அதுபோல வீட்டில் தனியாக இருக்கும் ஹவுஸ் மேக்கர்களிடம்  ஏசி, ஃபிரிட்ஜ், மைக்ரோ வேவ் ஓவன் சர்வீஸ் செய்கின்ற நபர்கள் என அறிமுகம் இல்லாத நபர்கள் கணவன் அனுப்பியதாகச் சொல்லி ஏமாற்றி கொலை, கொள்ளை நடைபெறுகின்ற காலத்தில் இருக்கிறோம்.
      வீட்டில் தனியாக இருக்கின்ற பெரியோர்களுக்கும் இதுபோல பாதுகாப்பில்லாத நிலைதான்.
      ஒவ்வொரு குடும்பத்துக்கும் பாஸ்வேர்ட் ஒன்றை உருவாக்கி வைத்துக் கொண்டால், அறிமுகம் இல்லாத நபர்கள் அணுகும்போது அவர்களிடம் அந்த பாஸ்வேர்டை கேட்கலாம். பாஸ்வேர்டை அவர்கள் சரியாகச் சொன்னால் மட்டும் அவர்களை நம்பலாம், இல்லையென்றால் அவர்கள் மோசடிப் பேர்வழிகள் என முடிவெடுக்கலாம்.
      குடும்பப் பாஸ்வேர்டை நம் இண்டர்நெட் பாஸ்வேர்டை போலவே இரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும், குழந்தைகளுக்கும் பழக்க வேண்டும். ஒருமுறை குடும்பத்தில் உள்ள நபர்கள் யாரேனும் அந்தப் பாஸ்வேர்டைப் பயன்படுத்திவிட்டால், உடனே பாஸ்வேர்டை மாற்றிவிட வேண்டும்.
      இந்த ஐடியாவிற்கு பிள்ளையார்சுழி போட்டவர் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்று சமூகவலைதளங்களில் இவரது கருத்து பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
      என் சிறுவயதில், என் அப்பா அம்மா இருவருக்கும் 24 மணிநேர சுழற்சி வேலை. இரவு, பகல் என்று பாராமல், தீபாவளி, பொங்கல் என்று பண்டிகை தினங்களிலும்  வேலைக்குச் செல்லும் பணிச்சூழல். யாரேனும் ஒருவர் மாற்றி மாற்றி வீட்டில் இருந்தாலும், என்றாவது இருவரும் சேர்ந்து பணிக்குச் செல்ல வேண்டியதாகிவிடும். அந்தக் காலத்தில் வீட்டு வாசலில் வந்து பிச்சை கேட்போர் அதிகம். அதுபோன்ற சூழலில் என் தம்பி, தங்கைகளுடன் வீட்டில் தனியாக இருப்பேன். பிச்சை கேட்போர் வந்தால், வீட்டினுள் சென்று அப்பா அம்மாவிடம் கேட்பதைப் போல கேட்டு வந்து, அவர்களை போகச் சொல்லிக் கற்றுக் கொடுத்திருந்தார்கள். 
      அதுபோல அப்பா இரவு ஷிஃப்ட் சென்றால், அம்மா எங்கள் மூவரையும் அருகருகே படுக்க வைத்துக் கொள்வார். திருடர்கள் வந்தால் கண்களில் துவுவதற்காக, தலையணை அருகில் மிளகாய் பொடி டப்பா வைத்திருப்பார்.
      மேலும் பள்ளிகளில் யாரேனும் வந்து அழைத்தால் செல்லக் கூடாது, அறிமுகம் இல்லாத நபர்கள் கொடுக்கின்ற தின்பண்டங்களை சாப்பிடக் கூடாது என்றெல்லாம் சொல்லிக் கொடுத்து வளர்த்தார்கள்.
      காலமாற்றத்துக்கு ஏற்றாற் போல, இன்றைய இண்டர்நெட் உலகில் குழந்தைகளுக்கு குடும்பப் பாஸ்வேர்ட் என்பது ஒரு வரப்பிரசாதமாக அமையும். அனைவரும் இதை கடைபிடித்துதான் பார்ப்போமே!

Wednesday, 27 August 2014

கணிப்புகள்

கணிப்புகள்
காம்கேர் கே புவனேஸ்வரி
   பொதுவாகவே நம் ஒவ்வொருவருக்கும், மற்றவர்களைப் பற்றிய கணிப்புகள் சிறிதளவாவது இருக்கும். அதை வைத்துக் கொண்டு தான் அவர்களை சந்திப்பதற்கு முன்பே அவர்களைப் பற்றிய அபிர்ப்பிராயங்களை வைத்துக் கொண்டு பேசுவோம், பழகுவோம். கேட்டில் நின்று கொண்டு வீட்டைக் நிற்கும் செக்யூரிடிகளில் இருந்து நாட்டைக் காக்கும் அரசியல்வாதிகள் வரை நமக்குள் அவர்களைப் பற்றிய கணிப்புகள் இருக்கும். அப்படி இருப்பதை சரி என்றோ, தவறு என்றோ சொல்லி விட முடியாது. கணிப்புகளும், முன் அனுமானங்களும் நமக்கு எச்சரிக்கையாக, பாதுகாப்பாக இருக்க வேண்டுமே தவிர, அவை மற்றவர்களுடன் செய்ய வேண்டிய பணிகளுக்கு முட்டுக் கட்டையாக அமைந்து விடக் கூடாது.
      உதாரணத்துக்கு, மாமியார்-மருமகள் உறவையே எடுத்துக் கொள்ளலாம். சொல்லலாம். திருமணம் என்றாலே ஒவ்வொரு பெண்ணின் மனதிலும் தன் திருமணக் கனவை விட, மாமியார் பற்றிய கவலைகளே அதிகம் இருக்கும். அதுபோல மாமியாருக்கு வீட்டிற்கு வர இருக்கும் மருமகள் பற்றிய பயம் அடிமனதில் ஓடத் தொடங்கி விடும். காரணம் என்ன? மாமியார் என்றால் கொடுமைப்படுத்துகிறவர், மருமகள் என்றால் தன் மகனை தன்னிடம் இருந்து பிரித்து எடுத்துச் செல்ல வர இருக்கும் பெண் – இவை தான் மீடியாக்கள் குறிப்பாக தமிழ் சினிமாக்கள் அடையாளப்படுத்தியிருக்கும் பிம்பம். எனவே மாமியார் தன் மருமகளைப் பற்றியும், மருமகள் தன் மாமியாரைப் பற்றிய வைத்திருக்கும் இத்தகைய தவறான கணிப்புகளினால், அவர்கள் பரஸ்பரம் நல்லவர்களாகவே இருந்தாலும் பழகும் போது இறுக்கம் இருந்து கொண்டே தான் இருக்கும். இன்று வரை இருந்து கொண்டு தான் இருக்கிறது.
      சமீபத்தில், ஒரு நாள் மாலை 5 மணி அளவில் அவசரமாக தி.நகர் வரை செல்ல வேண்டியிருந்தது. என்னை கடந்து சென்ற ஒரு ஆட்டோவை நிறுத்தி, எவ்வளவுப்பா? என்று கேட்டேன். ஆட்டோ ஓட்டுனர்,  ‘மீட்டர் போடுகிறேன்’ என்றார் மிகவும் சாத்வீகமாக. எனக்குள் பளிச்சென்று அவர்மீது மரியாதைத் தோன்றியது.
ஆட்டோவை கார் போல வெகு நளினமாக ஓட்டிச் சென்றார். ஒடித்து நொடித்து, இடித்து விடுவது போல வெகு அருகில் சென்று அடுத்தவர்களை பயம் காட்டி விர்ரென்று செல்லும் ஆட்டோக்களையே பார்த்துப் பழகி இருந்த எனக்கு இவ்வளவு அழகாக ஆட்டோவை ஓட்டிச் சென்று கொண்டிருந்த ஓட்டுனர் மீது மரியாதை அதிகரித்துக் கொண்டே வந்தது.
எப்போதேனும் ஆட்டோவில் ஏற வேண்டிய சூழல் வந்தால், ‘கொஞ்சம் மெதுவாவே ஓட்டுங்க…அவசரமில்லை’ என்று ஒரு பாதுகாப்புக்காகச் சொல்லி வைப்பது வழக்கம். ஆனால் நான் சொல்வதை எந்த ஓட்டுனரும் கேட்டதில்லை. இந்த முறை நான் எதுவுமே சொல்லாமலேயே ஓட்டுனர் அழகாக வண்டியை ஓட்டிக் செல்கிறாரே என்ற வியப்பில் நான் பயணித்துக் கொண்டிருந்தேன்.
ஓட்டுனர் வண்டியில் நான் ஏறி அமர்ந்ததில் இருந்து கொஞ்சம் அநீசையாகவே இருந்தார். அடிக்கடி சீட்டுக்குப் பின் இருந்த ஒரு புத்தகத்தை தொட்டுத் தொட்டுப் பார்த்துக் கொண்டார். பிறகு அதை எடுத்து முன்பக்கம் வைத்துக் கொண்டார்.
அது என்ன புத்தகமாக இருக்கும். ஏன் இப்படி தடுமாறுகிறார்? ஏதேனும் தவறான புத்தகமாக இருக்குமோ, அது நம் கண்ணில் பட்டுவிடக்கூடாது என்று இப்படி தடுமாறுகிறாரோ? என்ற ரீதியில் என் எண்ணங்கள் ஓடின.
அப்புத்தகம் வழுக்கி விழ முற்பட்ட போது அதை எடுத்து மீட்டருக்கு அருகில் இருக்கும் இடுக்கில் சொருகினார். ஆனாலும் திருப்தி இல்லாமல் அதை எடுத்து தன் சீட்டுக்குப் பின்னாலேயே வைத்துக் கொண்டு அதன்மீது தன் தோள் துண்டை எடுத்து வெயிட்டுக்கு வைத்தார்.
இதற்கு நடுவில் ஓட்டுனர் ஆட்டோவுக்கு பெட்ரோல் போடுவதற்காக பெட்ரோல் பேங்கில் நிறுத்தி விட்டு அதில் கவனமானார். இதற்குள் நான் மெல்ல முன்னால் சென்று எட்டிப் பார்த்தேன். துண்டு அப்புத்தகத்தின் மீதிருந்ததால் அது என்ன புத்தகம் என்று தெரியவில்லை. சின்ன ஏமாற்றம்.
மீண்டும் ஆட்டோ பயணப்பட்டது. ஓட்டுனர் வண்டி ஓட்டுவதில் காட்டிய அக்கறையை, தன் சீட்டிற்குப் பின் வைத்திருக்கும் புத்தகத்தின் மீதும் காட்டிக் கொண்டே வந்தார். அடிக்கடி தன் கையை பின்பக்கம் வளைத்து, புத்தகம் இருக்கிறதா என்று தடவிப் பார்த்துக் கொண்டே வந்தார்.
எனக்குள் அது என்ன புத்தகமாக இருக்கும் என்ற ஆவல் அதிகரித்துக் கொண்டே வந்தது.
நான் சென்றடையும் இடம் வந்ததும் மீட்டரைப் பார்த்து பணம் கொடுத்து விட்டு நகரும் முற்பட்ட போது, ஆட்டோ ஓட்டுனர் அந்தப் புத்தகத்தை எடுத்து என் கைகளில் கொடுத்து விட்டு ‘இப்புத்தகம் உங்களிடம் இருந்தால் தான் மதிப்பு…’ என்று சொல்லி விட்டு நகர்ந்தார்.
எனக்கு பொட்டில் அறைந்தது போல இருந்தது. காரணம்…
‘சங்கரானந்தம்!’ பெயரிடப்பட்டு, சங்கராச்சாரியார் கம்பீரமாய் உட்கார்ந்து ஆசிர்வாதம் செய்து கொண்டிருந்தார்.
‘இப்புத்தகம் எப்படி உங்களுக்கு…’ என்று நான் இழுக்க, காலையில் மாம்பலத்தில் ஒரு ஆன்மிக சொற்பொழிவுக்கு சவாரி சென்றேனம்மா...அங்கு இதைக் கொடுத்தார்கள்…’ என்றார் ஓட்டுனர்.
பிரமிப்பு, ஆச்சர்யம், தவறாக நினைத்து விட்டோமே என்ற குற்ற உணர்ச்சி இப்படி பல்வேறு உணர்வுக் குவியல்கள் என்னை போட்டிப் போட்டுக் கொண்டு ஆக்கிரமித்திருத்துக் கொள்ள, அவற்றை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சமாளித்துக்கொண்டு ‘ரொம்ப அழகா பொறுமையா வண்டி ஓட்டினீங்க’ என்று பாராட்டி விட்டு நகர்ந்தேன். ஆட்டோ ஓட்டுனர் ‘நன்றிம்மா!’ என்று தன் இரு கைகளால் வணங்கியது என் மனதில் ஆழப் பதிந்து விட்டது.
மீட்டர் போட்டு வண்டியை ஓட்டிய நேர்மை, ஆட்டோவை கார் போல இலாவகமாக ஓட்டிச் சென்ற பொறுமை, சங்கராச்சாரியார் புகைப்படம் போடப்பட்ட புத்தகத்துக்கு அவர் கொடுத்த மரியாதை இவை எல்லாம் சேர்ந்து கொண்டு அவரது கருமையான இறுகிய முகத்துக்கு தங்க முலாம் பூசிய அழகை உண்டாக்கின என்று நான் சொல்வதை நம்ப முடிகிறதா?

ஒருவரைப் பற்றிய கணிப்புகளை வைத்துக் கொண்டு அதே கண்ணோட்டத்துடன் அணுக வேண்டிய அவசியமில்லை. பிறரைப் பற்றிய கணிப்புகள்  நமக்கு பாதுகாப்பிற்காக இருக்க வேண்டுமே தவிர, தேவையில்லாத பயத்தை ஏற்படுத்திக் கொண்டு பட்டும்படாமலும் பழகுவதற்காக இருக்கக் கூடாது என்பதற்காகத் தான் இந்தப் பதிவு.

Wednesday, 20 August 2014

கசக்கும் விருந்தோம்பல்

      
காம்கேர் கே புவனேஸ்வரி
       நம் இந்தியக் கலாச்சாரத்தின் பெருமைகளில் ஒன்று விருந்தோம்பல். வீட்டிற்கு வருகின்ற விருந்தினர்களின் உடல்நிலைக்கு ஏற்ப உணவளிக்க வேண்டும் என்பதும், பாசம், நேசம் என்கின்ற பெயரில் ஒவ்வாத உணவுப் பண்டங்களையும், இனிப்பு வகைகளையும் அளிப்பதையும் தவிர்க்க வேண்டும் என்பதும் பலருக்குத் தெரிவதில்லை.  ‘
இன்னிக்கு ஒரு நாள் தானே...என்ன ஆயிடும்?’ என்று சொல்லி சொல்லியே விருந்தினர்களும், நண்பர்களும் படுத்தும் பாட்டுக்கு பெரும்பாலானோர் உடல்நிலை ஒத்துழைக்க மறுப்பது என்னவோ உண்மை.
பொதுவாகவே உடல்நிலை காரணமாக இனிப்பு வகைகளையும், எண்ணெய் பண்டங்களையும் சாப்பிட முடியாத பெரியோர்களுக்கு, அதைப் பார்க்கும் போது சாப்பிடத் தோன்றும். அதிலும் விருந்தினர்கள் வற்புறுத்திக் கொடுக்கும் போது எப்படி சாப்பிடாமல் இருக்கத் தோன்றும்?
      வெளிப் பார்ப்பதற்கு உடல்நலம் சரியில்லாதவர் போல தெரியாததால், உள்ளுக்குள் இருக்கின்ற வலியையும், வேதனையையும் மற்றவர்களுக்கு புரிய வைக்க முடிவதில்லை. அதற்காக எப்போதும் உடல்நிலை சரியில்லாதவர்களைப் போல வேஷம் போடவா முடியும்?
      மற்றவர்கள் நம் மீது அன்பால் செலுத்துகின்ற விருந்தோம்பல் நம்  அன்றாட வாழ்க்கையை எந்த அளவுக்கு பாதிக்கின்றது  என்பதை மகாபாரதக் கதை ஒன்று அழகாக விளக்குகிறது.
      ஒருசமயம் அஸ்தினாபுரத்தில் தர்மபுத்திரர் நிகழ்த்தும் ராஜசூய யாகத்தை ஒட்டி தினந்தோறும் அன்ன தானத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சுற்றியுள்ள எல்லா ஊர்களில் இருந்தும் மக்கள் தினந்தோறும் அந்த யாகத்துக்கு வருகை தந்து வயிறார சாப்பிட்டுச் சென்றனர்நகுல சகாதேவர்களுக்கு யாகத்துக்கு வருபவர்களை வரவேற்கின்ற வேலை,  அர்ஜூனனுக்கு யாகசாலையை பாதுகாக்கும் பொறுப்பு, போஜனப் பிரியரான பீமனிடம் யாகத்துக்கு வருகின்றவர்களுக்கு வயிராற சாப்பாடு பரிமாறி உபசரிக்க வேண்டும் என்ற பணி  என்று தன் சகோதர்கள் அனைவருக்கும் பிரத்யேகமாக வேலைகளை பிரித்துக் கொடுத்தார் தர்மபுத்திரர்.
      ஒருசில தினங்களில் யாகத்தில் கலந்து கொண்டு உணவு உண்போர் கூட்டம் குறைந்து கொண்டே வந்தது. காரணம் புரியாமல் அனைவரும் தவித்துக் கொண்டிருக்கும் வேலையில், புல்லாங்குழலுடன் கண்ணன் அவ்விடம் வந்து சேர, தர்மபுத்திரர்  தன் சோகத்தை அவனிடம் கொட்டித் தீர்த்தார். அதற்குள் பீமன் ஒரு தட்டில் 3 டம்ளர் பாலுடன் வந்து, ஒரு டம்ளர் பாலை எடுத்து கண்ணனிடம் நீட்டி குடிக்கச் சொல்லி உபசரித்தான். கண்ணனும் ஆனந்தமாக அருந்தினான். உடனடியாக பீமன் மற்றொரு டம்ளர் பாலை கொடுத்து பருகச் சொன்னான். வயிறு நிரம்பி விட்டது. போதும் என்று கண்ணன் மறுத்தாலும், பீமன் தொடர்ந்து வற்புறுத்தியதால் அந்த பாலையும் பருகினான் கண்ணன். அதற்கும் மூன்றாவது டம்ளர் பாலை கொடுத்து அருந்தச் சொல்லி பிடிவாதமாக வற்புறுத்தத்  தொடங்கினான் பீமன்.
அப்போது  பீமனுக்கு ஒரு அவசர் வேலையைச் செய்யச் சொல்லி பணிந்தான் கண்ணன். அதாவது கந்தமாதன மலைக்குச் சென்று, அங்கு தவம் செய்து கொண்டிருக்கும் தங்கநிற முனிவரை சந்திப்பது தான் கண்ணன் பீமனுக்கு இட்ட அந்த அவசர வேலை.
      ‘சரி... அவரிடம் நான் என்ன சொல்ல வேண்டும்?’ என்று வினவினான் பீமன்.
      ‘ஒன்றும் குறிப்பாகச் சொல்ல வேண்டாம். கண்ணன் அனுப்பினான் என்று மட்டும் சொல். ஆனால் அம்முனிவரை மிக மிக நெருக்கத்தில் பார்க்க வேண்டும் என்பது தான் முக்கியம்என்றான் கண்ணன்.
      குழப்பமாய் பார்த்துக் கொண்டிருந்த தர்மபுத்திரரிடம் கண்ணன் சொன்னான்...உன் யாகசாலையில் உணவு உண்போர் குறைந்து போனதுக்கும், பீமனை நான் கந்தமாதன மலைக்கு அனுப்பியதற்கும் ஒரு தொடர்பு உள்ளது என்று இரகசியமாக் சில விஷயங்களைச் சொல்ல, குழப்பம் தீர்ந்து ஆச்சர்யத்தில் கண்களை விரித்தார் தர்மபுத்திரர்.
      இதற்குள் பீமன் கந்தமாதன  மலையை அடைந்தான். தங்கநிறத்தில் ஜொலித்துக் கொண்டிருந்த முனிவரை சந்தித்தான். அவர் உதடுகள் மட்டும் கருத்திருந்தன. இம்மலையில் தங்கிச் செல்ல வந்தாயா? என்று முனிவர் வினவ,  ‘இல்லை ஸ்வாமி, கண்ணன் சொன்னதால் தங்களை தரிசிக்கவே வந்தேன்...’ என்று பதிலுரைத்த பீமன் கண்ணன் சொன்னபடி அம்முனிவரை வணங்க மிக அருகில் நெருங்கிச் செல்ல முயன்றான். ஆனால் பீமனுக்கு அவரை நெருங்க இயலாத அளவுக்கு துர்நாற்றம் குடலைப் பிடுங்கியது. அந்த நாற்றம் முனிவரின் வாயில் இருந்து வந்தது. ஆனாலும் மூக்கை இறுக்கிப் பிடித்தபடி முனிவரை மிக அருகில் நெருங்கு முகத்தை உற்று நோக்கினான். என்ன ஆச்சர்யம். கருத்திருந்த முனிவரின் வாய் பொன்னிறமானது.
      ‘கண்ணா...என் தெய்வமே... என் வாய் நாற்றத்தை என்னாலேயே சகிக்க முடியாமல் இத்தனை நாட்கள் வாழ்ந்து கொண்டிருந்தேன்...இப்போது கருத்த வாயும் பொன்னிறமாயிற்று...துர்நாற்றமும் போய்விட்டது...நன்றி கண்ணா!’ என்று நன்றிப் பெருக்கில் கண்ணீர் விட்டார் முனிவர்.
      குழப்பமாய் நின்றிருந்த பீமனிடம் சொல்லத் தொடங்கினார் முனிவர்.
நான் செய்த பாவத்தினால் தான் இத்தனை காலங்கள் என் வாய் கறுத்திருந்தது...கறுத்த வாயைத் திறந்து பேசினால் துர்நாற்றமும் வந்து கொண்டிருந்தது. கண்ணனிடம் என் நிலை எப்போது சரியாகும் என்று கேட்டேன். பீமன் வந்து சந்திக்கும் போது சரியாகும் என்று சொன்னார். இன்று நீ வந்து என்னை சந்தித்து எனக்கு பாவ விமோசனம் கொடுத்து விட்டாய்..’
      பீமனுக்கு ஆச்சர்யம் விலகாமல் கேட்டான்... ‘அப்படி என்ன பாவம் செய்தீர்கள் முனிவரே?
      முனிவர் தொடர்ந்தார்.
       ‘தானத்தில் தலை சிறந்தது அன்னதானம். பசியோடு இருப்பவர்களுக்கு அன்னதானம் செய்ததால் என் உடல் பொன்னிறம் பெற்றது. ஆனாலும் என் ஆர்வக் கோளாறால் வயிறு புடைக்க உண்டவர்களை கஷ்டப்படுத்தி இன்னும் சாப்பிடுங்கள், இன்னும் சாப்பிடுங்கள் என்று வடையையும், பாயசத்தையும் அவர்களை உபசரித்துக் கொண்டே இருந்தேன். வயிறார சாப்பாடு போட்டு உபசரிப்பது மாபெரும் புண்ணியம். அதே சமயம் வயிறார உண்டவர்களை மேலும் மேலும் சாப்பிடு, சாப்பிடு என வற்புறுத்துவது மாபெரும் பாவச் செயல். ஒருவரின் உடலுக்கு ஆரோக்கியக் கேடு விளைவித்தால் அது பாவம் தானே? மேலும் அளவுக்கு மீறி பரிமாறுபவர்களுக்கும், உணவை சாப்பிட முடியாமல் மீதம் வைப்பவர்களுக்கும் அந்த பாவத்தில் பங்கு வரும் தானே? அது மட்டுமில்லாமல் உணவை உற்பத்தி செய்கின்ற விவசயிகளுக்கு நாம் செய்கின்ற துரோகம் தானே இச்செயல்? இவை அத்தனைக்கும் காரணமான அதிகப்பிரசங்கித்தனமாய் உபசரித்த வாய் மட்டும் கறுத்து போய், அதிலிருந்து துர்நாற்றமும் வீசத் தொடங்கியது. உன்னால் அந்த தண்டனையில் இருந்து மீண்டேன்...நன்றி பீமா...’
      பீமனுக்கு தன் தவறு புரிந்தது. தன் கடுமையான உபசாரத்தினால் தான் யாகத்தில் சாப்பிட வருகின்ற கூட்டம் குறைந்து போனது என்பதை உணர்ந்து முனிவரிடம் விடைபெற்று கண்ணனை சந்தித்து மன்னிப்புக் கூறி பணிந்து நின்றான் பீமன்.
      எல்லாமே ஒரு அளவோடு இருந்தால் நல்லது. விருந்தோம்பலும் அது போல தான். அளவுக்கு மீறினால் அமிழ்தமும் விஷம் தான். விருந்தோம்பலும் கசந்து போகும்.

- காம்கேர் கே புவனேஸ்வரி