Thursday 13 March 2014

ஐ.டி துறையில் ஸ்ட்ரெஸ் பற்றி…
ஐ.டி துறையில் பணிபுரியும் இளைஞர்கள் Stress என்ற மன இறுக்கத்தில் இருந்து விடுபட 9-3-2014 ஜூனியர் விகடனில் நான் அளித்திருந்த சில டிப்ஸ்களைப் படித்துப் பாருங்களேன். பின்பற்ற முடிந்தால் பின்பற்றுங்கள்...

நன்றி: ஜூனியர் விகடன் (09-03-2014)

ஒய்ஃப் டே!
  • ஒயிட் காலர் ஜாப் 
  • கை நிறைய சம்பளம்
  • ஒன்றுக்கு இரண்டாய் கார்கள்
  • குடியிருக்க ஒரு வீடு, ஹை-வையான ஏரியாவில் ஒரு வீடு
  •  நினைத்ததை வாங்கக் கூடிய பொருளாதார வசதி
ஐடி துறை கொடுக்கும் வசதிகளைப் பற்றி இப்படியாகச் சொல்லிக் கொண்டே போகலாம்.
      இதற்கிடையில் ஸ்ட்ரெஸ் என்ற வார்த்தை அவர்கள் வாழ்க்கையில் நிறைய அடிபடுகிறது. செய்கின்ற வேலையில் பிடிப்பு; அதன் காரணமாய் ஏற்படுகின்ற சந்தோஷம்; மன நிறைவு எதுவுமே இவர்கள் மனதை உற்சாகப்படுத்துவதில்லை என்பதே உண்மை. இதன் காரணமாய் ஏற்படுவதே ஸ்ட்ரெஸ்….இதை விரட்டும் ஆயுதம் இவர்கள் கைகளில் தான் உள்ளது.
·         செய்கின்ற வேலையை நேசித்து செய்யுங்கள்
·         100 சதவிகிதம் ஈடுபாட்டுடன் பணியாற்றுங்கள்
·         கிடைக்கின்ற சம்பளம் போதும் என்கின்ற மனநிறைவு    கொள்ளுங்கள்
·         குறைந்தபட்சம் 3 வருடங்களாவது ஒரே நிறுவனத்தில் பணியாற்றும் மனப்பாங்கை வளர்த்துக் கொள்ளுங்கள்
·         இரவு அலுவலகத்தில் இருந்து வந்ததும் வெதுவெதுப்பான வெந்நீரில் குளித்து விட்டு, சாப்பிட்டும் வழக்கத்தை மேற்கொண்டு பாருங்கள். உடலும், மனமும் ரிலாக்ஸ் ஆவது உறுதி.
·         இரவு எத்தனை மணிக்கு அலுவலகத்தில் இருந்து வந்தாலும், அடுத்த 1 மணி நேரத்துக்குள் தூங்குவதற்குச் செல்ல வேண்டும் என்கின்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
·         அதுபோல வீட்டிற்கு வந்ததும் கால் செருப்பை/ஷூவை வெளியே வைத்து விட்டு வருவதைப் போல மற்ற எல்லா நினைவுகளையும் வெளியே விட்டு விட்டு உள்ளே நுழைய வேண்டும். வீட்டையும் இரண்டாவது அலுவலகமாக மாற்றிக் கொள்ளக் கூடாது.
·         இரவு 9 மணிக்கு மேல் வீடு திரும்பினால் மொபைல், லேப்டாப் இவற்றுக்கு டாட்டா பை,பை சொல்லி உங்களை விட்டு தூர வைத்து விடுங்கள்.
·         வீட்டில் சாப்பிடும் நேரங்களில் சாதம், குழம்பு, ரசம், மோர் என்ற நம் இந்தியன் உணவு வகைகளையே சாப்பிடுங்கள். பீட்சா, சப்வே போன்ற உணவு வகைகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். வாரத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் அவற்றை மாறுதலுக்காக எடுத்துக் கொள்ளலாம். தவறில்லை. ஆனால் வருடம் 365 நாட்களும் அவை தான் என்றால் நம் இந்தியன் தட்பவெப்பத்துக்கு அவை உடலுக்கு ஒத்துக் கொள்வதில்லை என்பதே உண்மை. ஒரு உண்மை தெரியுமா? அமெரிக்கர்கள் நம் இட்லி, தோசைக்கு அடிமை. விரும்பி சாப்பிடுகிறார்கள்.
·         தனி மனித ஒழுக்கத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். நான் இப்படித்தான் என்று ஒரு கொள்கையை ஏற்படுத்திக் கொண்டு வாழப் பழக வேண்டும். எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்பதை விட இப்படித்தான் வாழ வேண்டும் என்ற உயர்ந்த கொள்கையை வைத்துக் கொள்ளலாம்.
·         சரியான முன்னுதாரணங்களை பார்த்து அவர்களை ரோல்மாடல்களாக்கிக் கொள்ளலாம்.
·         ரெளத்திரத்தை சரியான இடத்தில் சரியானபடி காண்பிக்க வேண்டும். பல இடங்களில் பதில் சொல்லாமல் அமைதியாக இருப்பது கோழை என்று பொருளல்ல. அவர்களுடன் பேசிப் பயனில்லை என்பதே ஆகும். எனவே விவேகத்துடன் கூடிய வீரத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
·         சினிமாவில் மட்டும் தான் ஒரு ஹீரோ 10,15 பேரை அடிது துவைத்தெடுக்க முடியும். நிஜ வாழ்வில் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் ஒருவரை கூட ஒரு சமயத்தில் அடித்து வீழ்த்த முடியாது. எனவே அசட்டு தைரியத்தை விட்டு விட கற்றுக் கொள்ள வேண்டும்.
·         கூடுமானவரை அலுவலகங்களில் இருந்து வீடு திரும்பும் போது குறைந்தபட்சம் ஒருவருடனாவது திரும்பலாம்.
·         எல்லோரிடமும் உங்கள் பர்சனல் விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம். சுயநலம் அதிகரித்து விட்ட இன்றைய சூழலில் யாரையும் 100% நம்பிவிட முடியாது.
·         தாமரை இலை மேல் தண்ணீராகப் பழகக் கற்றுக் கொள்ள வேண்டும்.
·         ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் மது, சிகரெட்டிற்கு இணையாக போதை ஏற்றுபவை. அதில் உட்கார்ந்து விட்டால் எழுந்து கொள்வது என்பது மிகவும் கடினம். எனவே, கூடிமானவரை இரவி 9 மணிக்குப் பிறகாவது அவற்றில் நாட்டம் கொள்ள வேண்டாம்.
·         தினமும் ஏதேனும் ஒரு புத்தகம் படித்தல் அல்லது பிடித்த ஹாபியை செய்தல் படம் வரைவதாக இருக்கலாம், பாட்டுப் பாடுவது/கேட்பதாக இருக்கலாம், கதை/கட்டுரை எழுதுவதாக இருக்கலாம்…இப்படி ஏதேனும் ஒரு வழக்கத்தை கட்டாயப் பழக்கமாக்கிக் கொள்ளலாம். இதற்காக 1/2 மணி நேரம் அல்லது  1 மணி நேரம் செலவிடலாம். இதன் காரணமாய் மனதில் ஒரு நிறைவு ஏற்படும். நல்ல தூக்கம் வரும்.
·         குறைந்த பட்சம் 4-5 மணி நேரங்களாவது தூங்க வேண்டும்.
·         வீட்டிற்கு வந்ததும் அம்மா/அப்பா/கணவன்/மனைவி இவர்களில் யாரிடம் ஒருவரிடமாவது மனம் விட்டுப் பேச வேண்டும். அவர்களையும், சமூக வலைதள நட்புகளைப் போல விரும்பினால் பேசலாம் அல்லது பேசாமல் கண்டும் காணாதது போல இருக்கலாம் என்ற பாவனையில் கையாளக் கூடாது.
·         கடவுள் பக்தி இருந்தாலும், இல்லாவிட்டாலும் வாரம் ஒரு முறை கோயிலுக்குச் சென்று வரலாம். பீச்சிற்கு செல்லுகின்ற எல்லா நாட்களும் கடலில் நின்று கால் நனைப்பதில்லையே. அது போல கோயிலுக்குச் சென்று சாமியிடம் வேண்டித் தான் ஆக வேண்டும் என்பதில்லை. மாறுதலுக்காக சென்று வரலாம். அந்த அமைதி மனதில் மாற்றத்தை உண்டு செய்யும்.
·         வாரம் ஒரு சினிமா பார்க்கலாம் அல்லது  பீச்சிற்குச் செல்லலாம் அல்லது கோயிலுக்குச் செல்லலாம். எதுவாக இருந்தாலும் வீட்டு மனிதர்களுடன் செய்யவும். அலுவலக நண்பர்களைத் தவிர்த்து விடவும்.
·         மாதம் ஒரு முறை நம் விருந்தினர்கள் வீடுகளுக்குச் சென்று வரலாம். அக்கா, சித்தி, பெரியப்பா, மாமா, மாமி என்று உறவு முறை சொல்லி அழைத்துப் பேசுவோம்.
·         வாரம் ஒருமுறையாவது 1 மணி நேரம் வாக்கில் செல்லலாம். (மொட்டை மாடியிலாவது)
·         அதுபோல வார விடுமுறை நாட்களில் மாறுதலுக்காக வீட்டு வேலைகளைச் செய்யலாம். மனம் ஒன்றிச் செய்யும் போது மனதில் உங்களை அறியாமல் ஒரு நிறைவும், சந்தோஷமும் உண்டாகும்.
·         வார விடுமுறையை திரும்பவும் அலுவலக நண்பர்களோடு கொண்டாட வேண்டாம். வீட்டு மனிதர்களுடன் செலவிடுங்கள். எனக்குத் தெரிந்த சிறிய அளவில் பிசினஸ் செய்யும் ஒருவர் ஞாயிற்றுக் கிழமையை ‘ஒய்ஃப் டே’ என்று சொல்லுவார். ஏனெனில் அன்று முழுவதும் அவர் வீட்டிற்காகவே தன் நேரத்தை செலவழிப்பார். இது நல்ல ஐடியாவாக இருக்கிறதல்லவா?
·         நேரத்துக்கு சரியான சாப்பாடு, தூக்கம், வீட்டு மனிதர்களிடம், குறிப்பாக பெரியோர்களிடம் அக்கறைக் காட்டுதல், மனம் விட்டுப் பேசுதல் போன்ற குணநலன்களை வளர்த்துக் கொண்டால் போதும் ஸ்ட்ரெஸ் காணாமல் போய்விடும்…
·         ஒரு விஷயத்தை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்… 20 வருடங்களுக்கு முன்பெல்லாம் வேலை வாய்ப்பு என்பதே மகா கஷ்டம். BE படித்தவர்கள் கூட 2000 – க்கும் 3000-க்கும் பணிபுரிந்தவர்கள் இருந்து வந்திருக்கிறார்கள். அதுபோல பெண்களுக்கான படிப்பு, வேலைவாய்ப்பு, திருமணத்தில் முடிவெடுக்கும் சுதந்திரம் இவை எதுவுமே இன்று போல 20 வருடங்களுக்கு முன்பு இல்லை. அந்த சூழல் மறைய எத்தனை பேர் போராடி இன்றைய பொருளாதார மலர்ச்சியையும், பெண்களுக்கான அடிப்படை சுதந்திரத்தையும் பெற்றுக் கொடுத்திருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வேலை பிடிக்கவில்லை, ஸ்ட்ரெஸ், பிழிந்து எடுக்கிறார்கள் என்பதைப் போன்ற வார்த்தைகளுக்குக் கூட உங்கள் மனதில் இடம் கொடுக்காதீர்கள். கொஞ்சம் கொஞ்சமாக அவை உங்களை அரித்துத் தின்று விடும்.
·         எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதை செய்யச் சொல்லி எந்த நிறுவனமும் கட்டாயப்படுத்துவதில்லை. (பார்ட்டிகளில் மது, சிகரெட் இப்படி). அவற்றை பயன்படுத்துவதும், மறுப்பதும் உங்கள் சுதந்திரம். உதாரணத்துக்கு மாமிசம் சாப்பிடவே சாப்பிடாத ஒருவர் கண் முன் மாமிச உணவை வைத்தால் அவரை எத்தனை கட்டாயப்படுத்தினாலும் அவர் சாப்பிட மாட்டார் அல்லவா? அது போல தான் மது, சிகரெட் போன்றவையும். அவற்றை நீங்கள் பயன்படுத்தினால் அதற்கு 100% காரணம் நீங்கள் மட்டுமே. பிறரையோ, நிறுவனத்தையோ காரணம் காட்டக் கூடாது. உங்களுக்குப் பிடித்திருப்பதால் தான் அப்பழக்கத்துக்கு நீங்கள் அடிமையாகிறீர்கள்.
இங்கு நான் சொன்ன அத்தனை விஷயங்களையும் நான் என் லைஃபில் பின்பற்றுகிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறேன். நீங்களும் முயற்சித்தான் பாருங்களேன். ஆரம்பத்தில் கஷ்டமாகத் தான் இருக்கும். பலன் கிடைக்கும் போது சந்தோஷம் பலமடங்காகும். முயற்சியுங்கள். வெற்றி பெறுங்கள். வெற்றி நிச்சயம்.

காம்கேர் கே புவனேஸ்வரி