![]() |
எப்படி?
அவள்....
தனக்கு உடம்புக்கு வந்து விட்டது என்று
சொல்லி படுக்கவே மாட்டாள். தனக்குத் தானே குணப்படுத்திக் கொள்வாள்...கடுமையான ஜூரத்திலும்
குடும்பத்துக்காக செய்கின்ற வேலைகளில் எந்தக் குறையும் இல்லாமல் செய்து முடித்து விட
துடிப்பாள்...
உடம்பு முடிவதால் தானே செய்கிறாள் என்ற பிறரின் எண்ணத்தையும் தாங்கிக் கொள்வாள்
ஒரு நாளைக்கு 18 மணி நேரம் கூட தொடர்ந்து
உழைப்பாள்...தேவைப்பட்டால் 24 மணி நேரமும் கண்விழித்திருப்பாள்...
சின்னதாக நன்றியை/பாராட்டை எதிர்நோக்குகின்ற நேரத்தில், செய்ய வேண்டியது அவள் கடமை என்பதைப் போன்ற கட்டாயச் சுமைதாங்கியாக்குகின்ற சுமையைத் தாங்கிக் கொள்வாள்
இவள் பார்வைக்கு மிருதுவானவள்...ஆனால் மனதளவில்
இரும்பை விட வலிமையானவள்... இவளது எதையும் தாங்கும் சக்தியை யாராலும் நினைத்துக் கூடப்
பார்க்க முடியாது...
ஆனாலும் பலவீனமானவள் என்ற பட்டத்தை சுமப்பவள்
சிந்திக்கும் ஆற்றல், எல்லா விஷயங்களையும்
தீர அலசி பார்க்கும் தன்மை, அவற்றுக்காக தேவைப்படும் போது வாதிட்டு வெற்றி பெறும் திறனையும்
கொண்டவள்...
இதனால் திமிர் பிடித்தவள் என்ற பட்டங்களை பல சமயம் பெண்களிடம் இருந்தே பெறுபவள்
அவளது கண்ணீர் துளி தான் அவளது ஒட்டு மொத்த
உணர்ச்சிகளின் வெளிப்பாடு...அவளது சுகம், துக்கம், ஏக்கம், ஏமாற்றம், தனிமை, துயரம்,
அன்பு, பெருமை அத்தனையையும் அந்த கண்ணீர்த்
துளிதான் வெளிப்படுத்துகிறது...
அழுதே காரியத்தை சாதித்துக் கொள்வாள் என்ற ஆதிக்க வார்த்தைகளையும் கண்ணீரோடே கேட்டுக் கொள்வாள்
அவளால் மட்டும் தான் அழ வேண்டிய நேரத்தில்
கூட அழகாய் சிரிக்கவும், பாடவும் முடியும். பாரேன்...
கொஞ்சமாவது இங்கிதம் இருக்கா என்ற ஏளன வார்த்தைகளையும் தாங்கிக் கொள்வாள்
அவளால் மட்டுமே நெருக்கடியான பரபரப்பான
சூழ்நிலையிலும் முகம் சுளிக்காமல் இன்முகத்தோடு இருக்க முடியும்.
கொஞ்சமாவது டென்ஷன் இருக்கா பார்...கல்நெஞ்சக்காரி என்ற கல்லெறி வார்த்தைகளையும் இன்முகத்தோடே எதிர்கொள்வாள்
அவளால் மட்டுமே சந்தோஷம் பொங்கும் வேளையில்
கண்ணீர் சிந்த முடியும்.
ஆனந்தக் கண்ணீர் விடுமளவுக்கு என்ன சாதித்து விட்டாள் என்ற பொறாமை எண்ணங்களையும் எதிர்கொள்வாள்
அவளால் மட்டுமே மற்றவர்கள் சாப்பிடுவதற்காக
தான் பட்டினி கிடக்க முடியும்.
அவளுக்கு பசிக்காது...சின்ன வயிறு என்ற பட்டத்தைச் சுமந்து கொண்டு அண்ணப்பூரணியாக இருப்பாள்
அவளால் மட்டுமே ஒரு சின்ன அணைப்பு, ஒரு
குட்டி முத்தம் கொடுத்து ரணமாகிய உள்ளங்களுக்கு மருந்திட முடியும்.
இது மட்டும் எல்லோருக்கும் தேவையாய் இருக்கிறது.
அவளால் மட்டுமே உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரது சுகதுக்கங்களிலும் பங்கு கொண்டு சந்தோஷத்தை இரட்டிப்பாக்கி, துயரங்களை பாதியாக்க
முடியும்.
அப்போது கூட விவஸ்தை இல்லாமல் ஏன் பிறர் விவகாரங்களில் தலையிடுகிறாள் என்ற பட்டம் கிடைக்கும். இன்முகத்துடன் வாங்கிக் கொள்வாள்
தன் குழந்தைகளின் சாதனைகளுக்கு ஆனந்தக்
கண்ணீர் வடித்து மேலும் ஊக்கப்படுத்த முடியும்.
ஆனால் அவளுக்கு என்ன சாப்பாடு பிடிக்கும் என்று கூட தெரியாத குழந்தைகளைப் பற்றி அவள் கவலைப்படுவதே இல்லை
ஐயோ...என்னால் இந்த இழப்பைத் தாங்க முடியவில்லையே
என்று உடைந்து கொண்டிருக்கும் போதே, தன்னை திடப்படுத்திக் கொண்டு அவளால் வாழ்க்கையை
எதிர் நோக்க முடியும்.
என்ன திமிர்...இத்தனை பட்டும் கொஞ்சமும் பயமில்லாமல்... என்ற அடக்குமுறை வார்த்தைகளை தாங்கிக் கொள்வாள்
இந்த உலகையே சுழலச் செய்யும் ஆற்றல் படைத்த
வாழ்க்கையின் ஆதார சுருதியாக விளங்கும் இப்பெண்ணிடத்திலும் ஒரு குறையுண்டு. அது என்னவென்றால்...தன்னிடம்
இருக்கின்ற இந்த அற்புத ஆற்றலை அவள் அடிக்கடி மறந்து விடுகிறாள்...
ஆம். மாதவம் செய்து வரம் பெற்று வந்திருந்தால்
மட்டுமே இவை அத்தனையும் சாத்தியமாகும். பெண்ணைப் பற்றிய இந்த உண்மைகளை நம்மில் யாராலாவது
மறுக்க முடியுமா?
பெண்மையைப் போற்றுவோம்.
மதிக்கக் கற்றுக் கொள்வோம்.
மதிக்கக் கற்றுக் கொடுப்போம்.
குறிப்பாக
நம்மை நாம் மதிக்கக் கற்றுக் கொள்வோம்.
வாழ்த்துக்கள்.
காம்கேர் கே புவனேஸ்வரி