Thursday 8 May 2014

இன்று, +2  ரிசல்ட்.
 மாணவ, மாணவிகளுக்காக... மங்கையர் மலர் 
மே 1-15, 2014  இதழில் வெளியான கட்டுரை
காம்கேர் கே புவனேஸ்வரி



நம்பிக்கை... நெஞ்சில் வை...
(உண்மை நிகழ்வின் அடிப்படையிலான கட்டுரை)

இன்று +2 ரிசல்ட். நான் வசிக்கின்ற அப்பார்ட்மெண்ட்டில் உள்ள பிள்ளைகள் பரபரப்பாக தங்கள் மொபைலிலும், கம்ப்யூட்டரிலும் ரிசல்ட் பார்த்துக் கொண்டிருந்தார்கள். எங்கள் தெருவில் இருக்கும் பிரவுசிங் செண்டரில் சீசனல் பிசினஸாக ரிசல்ட் பார்த்துச் சொல்லும் பிசினஸ் பிசியாக நடந்து கொண்டிருந்தது.

ஒவ்வொரு குழந்தையின் முகத்தையும் நான் பார்த்துக் கொண்டிருந்தேன். யாருக்குமே முழு திருப்தி இல்லை. 1200 க்கு 1100 மதிப்பெண் எடுத்த பிள்ளைகளுக்கும் வாடிய முகம் தான். 1200 க்கு 700 மதிப்பெண் எடுத்த பிள்ளைகளுக்கும் வாடிய முகம் தான். தேர்வில் ஃபெயிலான பிள்ளைகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். வாழ்க்கையே முடிந்து விட்டதைப் போல துக்கம். அவமானம். தலை நிமிராமல் வீட்டு அறைக்குள் முடங்கிப் போயினர். தோல்வி அடைந்த பிள்ளைகளின் பெற்றோர்கள் கண்களும், மூக்கு நுனியும் சிவக்க அழுது புலம்பி திட்டி தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தத் தெரியாமல் குமுறிக் கொண்டிருந்தனர்.

குறைந்த மதிப்பெண், தேர்வில் தோல்வி, கிடைத்த கோர்ஸ் கிடைக்கவில்லை – இப்படி தோல்வி எந்த வடிவத்தில் உங்களை வந்தடைந்திருந்தாலும் அதுபற்றி நீங்கள் கவலைப் படுங்கள், அழுங்கள். சோகமாய் இருங்கள். இரண்டு நாட்கள் சாப்பிடாமல் கூட இருங்கள். ஆனால் எந்தத் தவறான முடிவையும் எடுக்காதீர்கள்.


என் வாழ்வில் நான் சந்தித்த ஒரு நபரை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன். அவரைப் பற்றித் தெரிந்து கொண்ட பின் முடிவெடுங்கள் - நீங்கள் எவ்வளவு பாக்கியசாலிகள் என்று.

2008-ஆம் ஆண்டு. இன்லண்ட் லெட்டர் ஒன்று எனக்கு வந்திருந்தது.
----------------------------------------------------------------------------------
‘அன்புடையீர் அம்மா அவர்களுக்கு,
எனது பணிவன்பான இனிய நமஸ்காரங்கள். தாங்கள் நடத்தி வரும் மென்பொருள் நிறுவனத்தையும், தங்களால் தமிழில் எழுதப்பட்டு வரும் நூல்களையும் கேள்விப்பட்டுள்ளேன். பத்திரிகைகளில் தாங்கள் எழுதி வரும் கம்ப்யூட்டர் தொடர்களையும், தன்னம்பிக்கைக் கட்டுரைகளையும் தொடர்ந்து படித்து வருகிறேன்.
கடந்த மூன்று வருடங்களாக கணினி அடிப்படைகளைக் கற்றுக் கொண்டு வருகிறேன். அத்துடன் தொலைதூரக் கல்வியில் B.Sc., பட்டப் படிப்பையும் படித்து வருகின்றேன். எனக்கு தற்போது C, C++, Java போன்ற கம்ப்யூட்டர் மொழிகளைக் கற்றுக் கொள்ள ஆர்வமாக உள்ளது.
எனக்கு அம்மா அவர்கள் Java, C, C++ போன்ற நூல்களை இலவசமாக தந்து உதவுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இந்த உதவியை தாங்கள் செய்து கொடுப்பீர்கள் என்று அன்புடன் எதிர்பார்க்கிறேன்.
இவண்
தங்கள் உண்மையுள்ள,
ரமேஷ்
----------------------------------------------------------------------------------
இவருக்கு என்ன குறைச்சல்…கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கிறார். அத்துடன் கம்ப்யூட்டரில் பயிற்சியும் எடுத்து வருகிறார். நீங்கள் நினைப்பது எனக்குப் புரிகிறது.

கொஞ்சம் பொறுங்கள். கடிதத்தின் அடுத்த பக்கத்தில் உள்ள வாசகங்களையும் படியுங்கள்.
----------------------------------------------------------------------------------
பின்குறிப்பு:

‘அம்மா, என் வயது 35. நான் சிறைச்சாலையில் கடந்த 10 வருடங்களாக தண்டனைக் கைதியாக இருக்கிறேன்’
----------------------------------------------------------------------------------
இப்படி எழுதி சிறைச்சாலையின் அவருடைய கைதி எண்ணைக் குறிப்பிட்டு, சிறை அலுவலரிடம் கையெழுத்து வாங்கி, சீல் வைத்திருந்தார். சிறைச்சாலையின் முகவரியைக் குறிப்பிட்டு அம்முகவரிக்கு புத்தகங்களை அனுப்பி வைக்குமாறு கேட்டிருந்தார்.
ஏதோ சந்தர்ப்ப வசத்தால் சிறைக்குச் சென்ற அந்த இளைஞர் நம்பிக்கையை இழக்காமல் தன்னுடைய படிப்பைத் தொடர்ந்துள்ளார். நம்பிக்கை உள்ள மனிதர்களுக்கு அவர்கள் விரும்பும் சூழல் தானாகவே அமையப்பெறும் என்பதற்கு இதைவிட என்ன உதாரணத்தைக் காட்ட முடியும்.

அவரது தன்னம்பிக்கைக் கொடுத்த ஆர்வம், அவரைப் படிக்கத் தூண்டியது. ஏதோ ஒருநிறுவனம் கைதிகளுக்கு சிறப்பு கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்க, அதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்த, அந்நிறுவனமே அவருக்கு எல்லா கம்ப்யூட்டர் மொழிகளையும் கற்றுக் கொடுத்தது.

அவரது நம்பிக்கை கொடுத்த தைரியம், எனக்குக் கடிதம் எழுத வைத்தது. நானும் புத்தகங்களை அனுப்பி வைத்தேன்.
அவரது நம்பிக்கைக் கொடுத்த சக்தி, அவர் ஜெயிலில் இருந்து வெளியே வரும் முன்பே நல்ல வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. ஆம். அவருக்குக் கம்ப்யூட்டர் பயிற்சி அளித்த நிறுவனமே அவருக்கான ஒரு வேலையை ஏற்பாடு செய்து கொடுத்தது.

இந்தக் கதையை எல்லாம் நான் சிறைச்சாலை அலுவலர்களிடம் தொலைபேசியில் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.
25 வயதில் ஜெயிலுக்குச் சென்ற இவராலேயே முடியும் போது உங்களால் முடியாதா?
----------------------------------------------------------------------------------
“தோல்வி எந்த வடிவத்தில் உங்களை வந்தடைந்திருந்தாலும் அது குறித்து நீங்கள்...

• கவலைப் படுங்கள்
• சோகமாய் இருங்கள், அழுங்கள்
• இரண்டு நாட்கள் சாப்பிடாமல் கூட இருங்கள்

ஆனால் எந்தத் தவறான முடிவையும் எடுக்காதீர்கள்”
இவை மாணவர்களுக்கு மட்டும் அல்ல. நம் ஒவ்வொருவருக்கும் தான்.

----------------------------------------------------------------------------------
இப்படிக்கு அன்புடன்,
காம்கேர் கே புவனேஸ்வரி