Wednesday 14 May 2014


அன்பார்ந்த மங்கையர் மலர் வாசகிகளே, இன்று தைரியம், வீரம், விவேகம் குறித்து உங்களுடன் பேச இருக்கிறேன். - காம்கேர் கே புவனேஸ்வரி

தைரியம் என்பது ஒரு வகை தன்னம்பிக்கையே. நாம் நம் மனதை தைரியம் என்ற உணர்வால் கட்டிப் போட்டு வைத்திருக்க வேண்டும். நாம் செய்கின்ற செயல்கள் தொடர்பான அனைத்து விஷயங்களிலும் ஆழ்ந்த அறிவைப் பெற்று வைத்திருந்தாலே தைரியம் தானாகவே நம்மைத் தொற்றிக் கொள்வது சர்வ நிச்சயம்.

தைரியம் என்பது ஓர் உணர்வு. வீரம் என்பது வெளிப்பாடு. விவேகம் என்பது வீரத்தை வெளிப்படுத்தும் நுணுக்கம்.

மனதில் இருக்கும் தைரியத்தை, விவேகத்துடன் இணைத்து செயல்படுத்தும் போது தான் உண்மையான வீரம் வெளிப்படும். மாறாக, இடம், பொருள், சூழல் அறியாமல் காட்டப்படும் வீரம் செயலிழந்து போய்விடும்.

உதாரணத்துக்கு தெரு விளக்குகளும், ஆள் நடமாட்டமே இல்லாத பகுதியில் கும்மிருட்டில் இரவு 12 மணிக்கு நடந்து வருவது என்பது தைரியம் அல்ல. அசட்டு தைரியம். ஏன் என்றால், அந்நேரத்தில் வழக்கமாக பழக்கப்பட்ட நம் தெரு நாய்கள் கூட நம்மை பார்த்துக் குரைப்பதையும், பைக்கின் சப்தத்துக்கு மிரண்டு பைக்கின் வேகத்துக்கு ஏற்ப, பாய்ந்து வருவதையும் நம்மில் பலர் அனுபவித்திருப்போம்.

நிலநடுக்கம் வரும் நேரங்களில் எப்படி பாதுகாப்பாய் இருப்பது என்று பயிற்சி கொடுக்கிறார்களே? அது எதற்கு நிலத்துக்கு பயந்தா?

சுற்றலாத் தளங்களில் படகில் செல்லும் போது உயிர்காக்கும் சாதனங்களை எடுத்துச் செல்வது தண்ணீருக்கு பயந்தா?

ஒவ்வொரு அலுவலகத்திலும், பெரிய பெரிய வளாகங்களிலும் தீயணைப்பு சாதனம் பொருத்தப்பட்டுள்ளதே அது எதற்காக? நெருப்புக்கு பயந்தா?

புயல் வீசும் காலங்களில் வீடுகளில் அடைந்து கிடக்கிறோம்…கடலில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்துகிறார்கள். அவை எதற்கு? காற்றுக்கு பயந்தா?

விமானத்தில் செல்லும் போது பாராசூட் பற்றி சொல்லி ஆபத்து சமயத்தில் பயன்படுத்த அறிவுறுத்துகிறார்களே? அது எதற்காக ஆகாயத்துக்கு பயந்தா?

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இவை அனைத்தும் இயல்பாய் இருக்கும் போது எந்த பிரச்சனையும் இல்லை. மாறாக சீற்றம் அடையும் போது அவை விளைவிக்கும் ஊறுகள் கணக்கிலடங்கா. எனவே அவற்றின் சீற்றத்தில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள நாம் பல வழிமுறைகளைப் பின்பற்றுகிறோம். அவ்வளவு தான். அதற்காக ஐம்பூதங்கள் மீது நமக்கு பயம் என்று பொருள் அல்ல. நாம் கோழைகள் என்றும் அர்த்தமல்ல.

புயல் அடிக்கும் போது நான் படகில் செல்வேன் என்று சொல்வதும், தீப்பிடிக்கும் என்று தெரிந்தும் தீக்குச்சியை பற்ற வைத்து நம் சட்டைப் பாக்கெட்டில் வைத்துக் கொள்வதும் வீரம் என்று நம்மில் யாராலாவது சொல்ல முடியுமா?

தண்ணீரில் படகில் செல்வதும், தீக்குச்சியை ஸ்டைலாக உரசி பற்ற வைப்பதும் வீரம் என்றால், சரியான சீதோஷண நிலை இருக்கும் போது படகில் செல்வதும், தீக்குச்சியை தேவைக்காக தேவையான போது பயன்படுத்துவதும் தான் விவேகம். தண்ணீர், சீதோஷண நிலை, படகு, தீக்குச்சி, தேவைகள் இவற்றைப் பற்றிய தெளிவைப் பெற்றிருப்பது தான் தைரியம்.

வீரத்தும், விவேகத்துமான தொடர்பை உணர்த்தும் ஒரு கதை…

கோவில் யானை ஒன்று சுத்தமாக, நன்றாகக் குளித்துவிட்டு நெற்றியில் பட்டை போட்டுக் கொண்டு, குரங்கு, பூனை, எருமை என்று அதன் நண்பர்களுடன் பேசிக் கொண்டே, ஓர் ஒடுக்கமான பாலத்தில் நடந்து வந்து கொண்டிருந்தது. யானை முன்னே வர மற்றவை பின் தொடர்ந்தன.

சற்று தூரத்தில், சேற்றில் புரண்டு விட்டு இரண்டு பன்றிகள், வாலை ஆட்டிக் கொண்டே வந்து கொண்டிருந்தன.

அதை கவனித்து விட்ட யானை ஓர்  ஓரத்தில் ஒதுங்கி நின்று விட்டது. உடனே பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்த அதன் நண்பர்களும் அமைதியாய் ஒதுங்கி வழி விட்டு நின்றன.

அந்த பன்றிகள் இரண்டும் யானையைப் பார்த்து நக்கலாக சிரித்துக் கொண்டன. அதோடு விட்டனவா? ஒரு பன்றி மற்றொன்றிடம், ‘பார்த்தாயா, அந்த யானை நம்மைக் கண்டு பயந்து விட்டது!’ என்று சொல்லி எகத்தாளமாய் சிரித்தது. மேலும் வாலை வேக வேகமாக ஆட்டிக் கொண்டே பாலத்தைக் கடந்து சென்றன.

அது வரை அமைதியாக இருந்த யானையின் நண்பர்கள் யானையைப் பார்த்து, ‘அந்தப் பன்றி சொன்னதைப் போல நீ பயந்து போய் தான் வழிவிட்டு ஒதுங்கி நின்றாயா?’ என்று கேட்டன.

அதற்குக் கோவில் யானை பொறுமையாக சொன்னது:

‘இல்லை நண்பர்களே! இந்தக் குறுகலான பாதையில், அந்த பன்றிகளுக்குப் போட்டியாக அவற்றை எதிர்த்து நான் சென்று கொண்டிருந்தால், என் காலில் அவை இடறி நசுங்கி விட வாய்ப்புண்டு. மேலும் நான் குளித்து விட்டு படு சுத்தமாக இருக்கிறேன். பன்றிகளோ சேற்றில் புரண்டு சகதியை உடல் முழுவதும் பூசிக் கொண்டு நாற்றத்துடன் வந்து கொண்டிருந்தன.  என் காலில் அவை இடறும் போது, சேறும், சகதியும் என் உடல் மேல் பட்டு, சுத்தமான என் உடலை அசுத்தமாக்கி விடுமல்லவா?

மேலும், நான் நினைத்திருந்தால் ஒரு பிளிரலில் அவற்றை மிரள வைத்திருக்கலாம். அப்படி அவை மிரண்டு பயந்து ஓடும் போது அவற்றின் உடலில் ஒட்டியிருக்கும் அசுத்தங்கள் என் மீது பட்டு என்னையும் நாற்றமெடுக்கச் செய்து விடும். அதை நான் விரும்பவில்லை. எனவே தான் ஒதுங்கி வழி விட்டேன்’.

இந்தக் கோவில் யானையிடம் தைரியம், வீரம், விவேகம் இவை மூன்றும் சரிவிகிதத்தில் இருப்பதை உணர முடிந்தவர்கள் தன்னம்பிக்கை உடையவர்கள். எந்த சக்தியாலும் அவர்களை அழிக்க முடியாது.

இப்படிக்கு அன்புடன்
காம்கேர் புவனேஸ்வரி