Wednesday, 28 May 2014

அன்பான வாசகிகளுக்கு... 
வணக்கம். விடுமுறைக் கொண்டாட்டத்தில் இருக்கும் மே மாதம் முதல் வாரத்தில் ஒரு நாள், பள்ளி மாணவ, மாணவிகளுக்கான வாழ்வியல் பயிலரங்கம் ஒன்றில் சிறப்பு விருந்தினராக அவர்களுடன் பேசுவதற்கு அழைக்கப்பட்டிருந்தேன். ஹாபியே வேலையானால் என்ற தலைப்பில் பேசினேன். அதன் சாராம்சத்தை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
காம்கேர் புவனேஸ்வரி

      திறமை என்றால் என்ன? நாம் தினமும் எத்தனையோ வேலைகளை செய்கிறோம்... விளையாடுகிறோம்... பாடப் புத்தகங்களை படிக்கின்றோம்... நோட்டுப் புத்தகங்களில் எழுதுகின்றோம்,  பாடங்களுக்குத் தேவையான படங்களை வரைகின்றோம். இப்படி பலதரப்பட்ட வேலைகளில், நமக்கு எந்த வேலையை செய்யும் போது மனதுக்கு பிடித்திருக்கிறதோ, நம் மனம்  திருப்தி அடைகிறதோ, சந்தோஷம் உண்டாகிறதோ அந்த வேலை தான் நம் திறமை.
      டிவி பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது என்பதற்காக, டிவி பார்ப்பதை நம் திறமை என்று சொல்ல முடியாது. அது ஒரு பொழுதுபோக்கு. படிக்கும் போது மிகவும் கஷ்டமாக இருக்கிறது, போர் அடிக்கிறது என்பதற்காக, படிக்கும் திறமை நமக்கு இல்லை என்றும் சொல்ல முடியாது. ஏன் என்றால் படிப்பது என்பது நம் கடமை. அது திறமை அல்ல.
      இவற்றை எல்லாம் தாண்டி நமக்குள் நமக்கே நமக்காக பொதிந்து கிடக்கும் சக்தி தான் நம் திறமை. நமக்குள் இருக்கின்ற திறமையை வெளிக் கொண்டு வருவதே ஒரு திறமை தான்.
      படம் வரைதல், கதை-கவிதை-கட்டுரை எழுதுதல், பாட்டுப் பாடுதல், தோட்டம் அமைத்தல், வளர்ப்புப் பிராணிகளைப் பராமரித்தல் இப்படி ஒவ்வொருக்குள்ளும் ஒரு திறமை இருக்கும். அதை என்ன என்று கண்டுபிடித்து விட்டால், அத்திறமையை மெருகேற்றிக் கொள்வது தான் அடுத்த வேலை.
      முதலில் ஒரு நோட்டு ஒன்றை தயார் செய்ய வேண்டும். படம் வரையத் தெரிந்தவர்கள் தினமும் அதில் தேதி போட்டு படம் வரைந்து கொண்டே வரலாம். எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்கள் தங்கள்  அனுபவங்களை அதில் கதையாக எழுதி வரலாம். அதை நண்பர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களிடம் காண்பித்து அவர்கள் கருத்துக்களையும் உள்வாங்கிக் கொண்டு திறமையை மெருகேற்றிக் கொண்டே வர வேண்டும். அண்மையில் உருவாக்கிய படைப்புகளை, சில மாதங்களுக்கு முந்தைய படைப்புடன் ஒப்பிட்டுப் பார்த்தால் மாற்றத்தை நீங்களே உணர முடியும். அண்மை படைப்புகள் அழகாக மெருகேறி இருப்பதைக் காணலாம். ஆக, உங்கள் திறமையை கண்டுபிடித்து, தொடர் பயிற்சி  செய்து, மெருகேற்றிக் கொண்டே வர வேண்டும்.
      இப்படி செய்து வந்தால் உங்கள் படிப்போடு சேர்ந்து, உங்கள் திறமையும் வளர்ந்து வரும். இரட்டைப் பட்டங்கள் பெறுவதற்கு ஒப்பாகும் இச்செயல்.  
      அடிப்படையில் உங்கள் திறமைகளை வளர்த்துக் கொண்டு விட்டால், கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர்கள் மூலமும், உங்கள் கல்வி மூலமும் அவற்றை இந்த உலகம் அறிய வைக்கலாம். பணமும் சம்பாதிக்க முடியும்.
      15-20 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் கதை எழுதுவது, பாட்டுப் பாடுவது, படம் வரைவது, பரத நாட்டியம் ஆடுவது .... இது போன்ற திறமைகள் எல்லாம் ஹாபியாக மட்டுமே செய்கின்ற வேலையாக இருந்து வந்தன. ஆனால் இன்றோ இது போன்ற திறமைகள் இருப்பவர்களுக்கு நல்ல வரவேற்பு. திறமை சார்ந்த பணிகளுக்கான வாய்ப்புகள் சாஃப்ட்வேர் துறை, பிரிண்ட்டிங் மீடியா, தொலைக்காட்சி மீடியா, மல்டிமீடியா துறை என பல்வேறு துறைகளில் குவிந்து கிடக்கின்றன.
      எத்தனையோ மாணவ மாணவிகள் கம்ப்யூட்டரில் பி.ஈ, எம்.ஸி.ஏ, எம்.எஸ்.ஸி என்று பட்டங்கள் பெற்றிருந்தும் வேலை கிடைக்காமல் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள். ஏன் தெரியுமா? அவர்கள் கல்வி கற்றிருக்கிறார்கள். கம்ப்யூட்டரில் பயிற்சி எடுத்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தங்கள்  திறமையை முழுமையாக பட்டைத் தீட்டாமல் விட்டவர்கள்.
      இன்றைய நவீன கம்ப்யூட்டர், இண்டர்நெட்  யுகத்தில் கம்ப்யூட்டரையும், புத்தகப் படிப்பையும் தவிர எழுதும் திறமை, பாடும் திறமை, படம் வரையும் திறமை என்று பல்வேறு திறமைகள் உள்ளவர்கள் அதிகம் தேவைப்படுகிறார்கள்.
      இது போன்ற வேலைக்கு இன்று ஆட்கள் குறைவாக இருக்கிறார்கள் . ஆனால் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. ஏன்? நான் ஏற்கனவே சொன்ன மாதிரி, இன்று மாணவர்களுக்கு கம்ப்யூட்டரும், அது சார்ந்த படிப்பும் நன்கு தெரிகிறது...ஆனால் அடிப்படைத் திறமையில் முழுமை இல்லை என்றே சொல்ல வேண்டும்.
      கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர்களைக் கற்றுக் கொள்ள ஓரிரு மாதங்கள் தான் ஆகும்...ஆனால் திறமைகளைக் கண்டறிந்து வளர்த்துக் கொள்ள வருடங்கள் ஆகும். எனவே நீங்கள் அனைவரும் உங்கள் திறமைகளை வளர்த்துக் கொண்டே இருங்கள். பள்ளிப் படிப்பை முடித்து விட்டு, கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர்களை கற்கும் நேரங்களில் உங்கள் திறமை உங்கள் வாழ்க்கைக்கு கை கொடுக்கும்.
      ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், கணக்கைக் கற்றுக் கொடுக்கலாம், ஆங்கிலத்தைச் சொல்லித் தரலாம். ஆனால், திறமையை சொல்லித் தர இயலாது, நீங்களே கண்டு கொண்டு வளர்த்து செம்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
      எழுத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கு வெப்சைட், பத்திரிகை, தொலைக்காட்சி, சினிமா என மீடியாக்களுக்கு எழுதுவதே பணியாக அமைந்தால்… படம் வரைவதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு படம் வரைந்து அனிமேஷன் செய்வதே பணியாக அமைந்தால்… பாட்டுப் பாடுபவர்களுக்கு பின்னணி குரல் கொடுப்பதே வேலையாக அமைந்தால்…எண்ணிப் பாருங்கள் அந்த வாழ்க்கையை?
      இப்படி ஹாபியே வேலையாக மாறினால் எப்படி இருக்கும்? எவ்வளவு ரம்மியமாக இருக்கும் வாழ்க்கை. அந்த வாழ்க்கையைப் பெறுவது உங்கள் கைகளில் தான் உள்ளது.
      இந்த இடத்தில் பெற்றோர்களுக்கும் ஒரு கருத்தைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.
      வாழ்க்கையில் வெற்றியின் அதிகபட்ச உயரத்தை அடைந்தவர்கள் அனைவருமே, தங்கள் பலம் என்ன என்பதைத் தெரிந்துகொண்டு, அதைத் தங்கள் பணிகளில் இணைத்துக் கொண்டவர்கள். தங்கள் பலவீனத்தைக் குறைக்கப் பயிற்சி எடுப்பதை விட பலத்தைப் பெருக்க முயிற்சி எடுத்தவர்கள்.
      உங்கள் குழந்தைகளை உன்னிப்பாக கவனியுங்கள். அவர்களிடம் படிப்பைத் தாண்டி என்ன திறமை இருக்கிறது என்று கண்டுபிடியுங்கள். கல்வியோடு சேர்த்து அதையும் வளர்க்க ஊக்கப்படுத்துங்கள்.
      உங்கள் பிள்ளைக்கு கணக்கு வரவில்லையா? கவலை வேண்டாம். கவிதை வருகிறதா? எழுதட்டும். விட்டு விடுங்கள். கொஞ்சம் கவிதை. கொஞ்சம் கணக்கு என்று ஆசை காட்டி பயிற்சி கொடுங்கள். ஆனால் கவிதைக்கு முழுக்குப் போடு என்று சொல்லி பிள்ளையின் ஊக்க சக்தியை விஷம் வைத்து அழித்து விடாதீர்கள்.
      அதிக ஈடுபாடு இல்லாத சப்ஜெக்ட்டை, அதிகபட்சமாக எவ்வளவு சொல்லிக் கொடுக்க முடியுமோ அவ்வளவு சொல்லிக் கொடுத்து அதில் தேர்ச்சி பெறச் செய்யுங்கள். ஆனால் எந்த சப்ஜெக்ட் பிடித்திருக்கிறது என்பதை கண்டு கொள்ள தவறாதீர்கள். அதில் என்ன மாதிரியான எதிர்காலம் இருக்கிறது என்று கண்டறிந்து அதை நோக்கியப் பயணத்துக்குத் தயாரா(க்)குங்கள். வராத சப்ஜெக்ட்டில் முதல் மதிப்பெண் எடுக்க வைக்கின்ற நோக்கத்தில், பிடித்த சப்ஜெக்ட்டில் கோட்டை விடச் செய்து விடாதீர்கள்.
      அதைத்தான் முன்பு சொன்னேன், பலவீனத்தைக் குறைக்கும் முயற்சியில், பலத்தைப் பெருக்கத் தவற விட்டு விடாதீர்கள். 
      ஒரு குட்டிக் கதை…
ஓர் அடர்ந்த காட்டில் உள்ள ஒரு மரத்தின் அடியில் யானை, நாய், குரங்கு, கோழி, காக்கா, எறும்பு, பல்லி இவை கூடியிருந்தன. அருகே ஒரு குளம். அதிலுள்ள மீன் ஒன்றும் அவர்களுடன் சேர்ந்து பேசிக் கொண்டிருந்தது.
அப்போது சிங்கம் ஒன்று கம்பீரமாக நடந்து வந்து ஒரு மேட்டில் அமர்ந்தது. அது தான் அந்தக் கூட்டத்துக்கு தலைவர். அது எதிரே கூடியிருந்த மிருகங்களுக்கு ஒரு போட்டி ஒன்றை அறிவித்தது. 
‘உங்கள் தலைக்கு மேல் இருக்கும் மரத்தில் இருக்கின்ற ஒரு கிளையை யார் முதலில் பிடித்துத் தொங்குகிறார்களோ அவருக்கு எனக்கு உதவியாளனாக இருக்கும் பதவியை அளிக்க இருக்கிறேன்.’
இந்தப் போட்டி எவ்வளவு முட்டாள்தனமானது? ஊர்வன, நடப்பன, பறப்பன, நீந்துவன என பல்வேறு வகையான மிருகங்களுக்கும் சேர்த்து ஒரே போட்டி என்றால் அது எப்படி சாத்தியமாகும். முயன்றால் முடியாததில்லை தான். ஆனால், எத்தனை முயன்றாலும் மீனால் மரக்கிளையைப் பிடிக்க முடியுமா? முடியாதல்லவா? தண்ணீரை விட்டு வெளியே வந்தால் இறந்து விடாதா?
      இந்தப் போட்டியை முட்டாள்தனமானப் போட்டி என்று கருதும் பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளை மற்றவர்களோடு ஒப்பிடாமல், அவரவர்களுக்கு எதில் ஆர்வம் உள்ளதோ அதைக் கண்டறிந்து ஊக்கப்படுத்துங்கள். இப்போதெல்லாம் டியூயல் டிகிரி என்பது பெருகி வருகிறது. ஒரு டிகிரிக்காக படிக்கும் போதே மற்றொரு கோர்ஸிலும் சேர்ந்து பட்டம் பெற முடியும். வாழ்க்கைக்காக ஒன்று, ஆர்வத்துக்காக மற்றொன்று என இரட்டைப் பட்டங்கள் பெற இன்றைய கல்விச் சூழலில் அறிமுகப்படுத்தி வருகிறார்கள். எனவே, படித்த படிப்பிற்கான வேலையா? பிடித்த திறமைக்கான வேலையா? என்ற கேள்விக்கு இரண்டுக்குமே பாசிடிவான பதிலைச் சொல்லும் அளவுக்கு இன்று வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.
      உங்கள் பிள்ளையும், அடுத்த வீட்டுப் பிள்ளையும் ஒரே வயதாக இருக்கலாம், ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் கூட படிக்கலாம். ஆனால் அவர்கள் இருவரும் வெவ்வேறு மனதை பெற்றவர்கள். வித்தியாசமான திறமைகளைக் கொண்டவர்கள். வேறுபட்ட விருப்பு வெறுப்புகளை உள்ளுக்குள் சுமப்பவர்கள்.

      உங்கள் பிள்ளைகள்  களிமண்ணல்ல… அவர்களை வைத்து ஒரே மாதிரியான பொம்மைகளைச் செய்ய… எனவே பெற்றோர்களே யோசியுங்கள்!
இப்படிக்கு அன்புடன்
காம்கேர் புவனேஸ்வரி