இது தான் (தன்)நம்பிக்கை!
காம்கேர் கே புவனேஸ்வரி
காம்கேர் கே புவனேஸ்வரி
அன்று இரவு 7
மணி இருக்கும். எனக்கு ஒரு போன் கால் வந்தது. ‘வணக்கம்மா...வருகின்ற 25-ம் தேதி
நான் HOD ஆக பதவியேற்கிறேன்…இந்த நல்ல விஷயத்தை உங்களிடம் சொல்ல வேண்டும் என்று தோன்றியதால்
போன் செய்தேன்…’ என்று ஆரம்பித்த தொலைபேசி உரையாடல் அரை மணி நேரம் நேரம் நீடித்தது. வாழ்க்கையில் ஆரம்ப
காலத்தில் அவர் இருந்த நிலை, படிப்படியாக முன்னேற எடுத்துக் கொண்ட சிரத்தைகள், பல வருடங்களாக
நான் அவருடன் இணைந்து அவர் குழுக்களுக்கு நடத்திக் கொண்டிருக்கும் கம்ப்யூட்டர்-இன்டர்நெட்-நெட்வொர்க்கிங்
சார்ந்த ஒர்க்ஷாப்புகள், அவர்களுக்காக எங்கள் நிறுவனத்தில் தயாரித்து வரும் சாஃப்ட்வேர்கள், இன்றைய மாணவர்களிடம் தென்படும்
சற்றே அலட்சிய மனப்பாங்கு என்று பொதுவாக சென்று கொண்டிருந்த உரையாடல், மோடியின் வெற்றி,
செயல்திறன் என்று சீரியஸாகச் சென்று, தன்னம்பிக்கைக் குறித்த சில கருத்துக்களுடன் மிக
நிறைவாக நிறைவடைந்தது.
தொலைபேசி உரையாடலில், அவர் சொன்ன தன்னம்பிக்கைக் கருத்துக்கள்
என்னை பிரமிக்க வைத்தது. அதைத் தான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். கல்லூரியில்
வேலை செய்து கொண்டிருக்கும் ஒரு நபர் HOD ஆகியிருக்கிறார். இதில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது.
சாதாரணமாக நடக்கின்ற விஷயம் தானே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அவரைப் பற்றிய சிறுகுறிப்பைச்
சொன்னதும் உங்கள் எண்ணத்தை நீங்கள் மாற்றிக் கொண்டு விடுவீர்கள்.
ஆம். உண்மையில் பிரமிக்க வைக்கும் நபர் தான் அவர். அவர் ஒரு
மாற்றுத் திறனாளி. இரு கண்களும் தெரியாது. மிக ஏழ்மையான விவசாயக் குடும்பத்தில் பிறந்த
அவர், படித்து, பட்டம் பெற்று, தமிழில் Ph.D செய்து டாக்டர் பட்டமும் வாங்கியவர். ஆரம்ப
காலத்தில் கல்லூரிப் பேராசிரியராகப் பொறுப்பேற்று, படிப்படியாக முன்னேறி, தமிழ்துறைத்
தலைவராக பதவியேற்றவர்.
சீனா போன்ற வெளிநாடுகளுக்கு தனி நபராகச் சென்று அங்குள்ள ஆராய்ச்சி
நிறுவனங்களில் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தியிருக்கிறார். கம்ப்யூட்டர்-இண்டர்நெட் நம்
நாட்டில் பிரபலமாக ஆரம்பித்தத் தொடக்கக் காலங்களிலேயே கம்ப்யூட்டரை மிக இலாவகமாக கையாளப்
பயிற்சி எடுத்தார். இதற்குப் பயன்படும் Screen Recognition Software-கள் மூலம் கம்ப்யூட்டரில் எம்.எஸ்.ஆஃபீஸ்,
இன்டர்நெட், இமெயில், கூகுல் சர்ச் சென்று அனைத்தையும் அருமையாகக் கையாளக் கூடிய நபர்.
மனைவி ஆசிரியராகப் பணி புரிகிறார். இவருடைய மகள் எம்.பி.ஏ படிக்கிறார்.
இவர், கம்ப்யூட்டர், இன்டர்நெட் இணைப்புடன் கூடிய மொபைல், லேப்டாப்,
மாற்றுத் திறனாளிகளுக்குப் பயன்படுகின்ற சாஃப்ட்வேர்கள் என்று தொழில்நுட்பத்துக்குத்
துணை போகின்ற அத்தனை விஷயங்களையும் அப்டேட் செய்து வைத்திருக்கிறார்.
கம்ப்யூட்டர், லேப்டாப், டேப்லெட், உயர்ரக மொபைல், சாஃப்ட்வேர்கள்
என்று தொழில்நுட்ப விஷயங்களுக்கு, அதிகம் செலவு செய்யும் அவர், கார் வாங்கப் போவதில்லை
என்பதில் உறுதியாய் இருக்கிறார். ஏன் என்று காரணம் கேட்டதுக்கு அவர் கொடுத்த விளக்கம்
வியக்க வைத்தது.
தொழில்நுட்ப விஷயங்கள் உலக நடப்புகளை நான் அறிந்து கொள்ளவும்,
என் பணிச் சுமையைக் குறைத்துக் கொள்ளவும் உதவுகிறது. குறிப்பாக நானே அவற்றை நேரடியாகப்
பயன்படுத்த முடிவதால், அவை எனக்கு தன்னம்பிக்கையைக் கொடுக்கின்றன.
ஆனால் கார் வாங்கினாலும், காரை நான் ஓட்ட முடியாது. பிறரை நம்பித்
தான் சொந்த காரில் பிரயாணம் செய்ய வேண்டும் என்ற எண்ணமே, எனக்குள் இருக்கும் தன்னம்பிக்கையைக்
குறைக்கிறது. அதற்கு பதிலாக, எப்போது வெளியில் செல்ல வேண்டுமோ, அப்போது போன் செய்து
சொன்னால், அடுத்த கால் மணி நேரத்தில், கால் டாக்ஸி வீட்டு வாசலில்
வந்து நமக்காகக் காத்திருக்கப் போகிறது. நாம் கம்பீரமாக காரில் சென்று வரலாம்.
இவர் சொன்னக் கருத்துக்கள் நம் அனைவருக்கும் பொருந்தும் தானே?
சிந்தித்துப் பாருங்கள்…
தன்னம்பிக்கை என்பது பிறரால் பெறுவது அல்ல. நாம் செய்கின்ற செயல்களால்
நமக்குள் தானாக பொங்கி எழுவது தான் உண்மையான தன்னம்பிக்கை. ஒரு செயலை செய்யும் போது
அது கொடுக்கும் புத்துணர்ச்சி, பூரிப்பு, மனநிறைவு இவைதான் தன்னம்பிக்கையை வளர்க்க
உதவும் காரணிகள். ஒருபோதும் தன்னம்பிக்கையை பிறர் நமக்குள் திணிக்கவே முடியாது.
தன்னம்பிக்கையை எப்படி பிறரால் நமக்குக் கொடுக்க முடியாதோ, அதுபோல
அவநம்பிக்கையையும் பிறர் நமக்குள் திணிக்க முடியாது. எந்த வேலையிலும் ஈடுபாடில்லாமை,
ஒருவித மனச்சோர்வு, சலிப்பு இவைதான் அவநம்பிக்கையின் அறிகுறிகள். ஆரம்பத்திலேயே அவற்றைக்
கண்டறிந்து களை எடுத்து விட்டால் அதிலிருந்து மீண்டு விடலாம்.
நமக்கு தன்னம்பிக்கைக் கொடுக்கின்ற விஷயங்களைக் கண்டறிந்து,
அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்போம். நம் நம்பிக்கையைக் குலைக்கும் விஷயங்களைக் கண்டறிந்து,
அவற்றைக் களை எடுப்போம்.
வெற்றி நிச்சயம்.