Wednesday, 11 June 2014


ஹாய்,
     இன்று எந்தெந்த விஷயங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், எப்போது மூன்று புள்ளிகள் வைத்து தொடர வேண்டும் என்ற தத்துவத்தை அழகான கதை மூலம் சொல்கிறேன்
- காம்கேர் கே புவனேஸ்வரி
      வாழ்க்கை என்பது, நாணல் போன்றது; சூழ்நிலைக்கு ஏற்ப வளைந்து கொடுத்து வாழ வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் பலருக்கு ஓரளவுக்கு வளைந்து கொடுப்பதற்கும், முற்றிலும் முறிந்து போகும் அளவிற்கு வளைந்து கொடுப்பதற்கும் வித்தியாசம் தெரிவதில்லை. சூழலுக்கு ஏற்ப நம்மை பக்குவப்படுத்திக் கொள்வது அவசியம் தான். அதன் எல்லை எதுவரை என்றும் தெரிந்து வைத்துக் கொள்வது அதைவிட முக்கியம்.  பக்குவப்படுத்திக் கொள்வதாக நினைத்துக் கொண்டு முற்றிலும் நம்மைத் தொலைத்து விடக் கூடாது. தீய சூழலுக்குள் நாம் தொலைந்து விடாமல் இருக்கும் சூட்சுமம் நம் கைகளில் தான் உள்ளது.
      உதாரணத்துக்கு ஒரு அலுவலகத்துக்குப் புதிதாய் வேலைக்குச் சேர்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அந்த அலுவலகத்தின் விதிமுறைகளை தெரிந்து கொண்டு பின்பற்ற வேண்டியது நம் கடமை. அலுவலக வேலைநேரம், உடைக் கட்டுப்பாடு இன்னபிற அடிப்படை விஷயங்களுக்கு நம்மை தயார்படுத்திக் கொள்வது தான் நம் வேலைக்கும், வேலை செய்கின்ற நிறுவனத்துக்கும் நாம் கொடுக்கும் மரியாதை.
      ஆனால் அந்த அலுவலகத்தில் உள்ள ஒரு மேலதிகாரி தனிப்பட்ட முறையில் நம்மை தொந்திரவு கொடுத்தால் அதற்கு நாம் உடன்பட வேண்டும் என்கின்ற அவசியம் இல்லை. கொஞ்சம் கூட வளைந்து கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. தைரியமாக நமக்கு அதில் உடன்பாடில்லை என்பதை தெரிவிக்கக் காலம் கடத்தக் கூடாது. ஆரம்பத்திலேயே அதற்கு முற்றுப் புள்ளி வைத்து விட வேண்டும். முற்றுப் புள்ளி வைக்காமல் மூன்று புள்ளிகளை வைத்து அந்தச் சூழலைத் தொடர விட்டுக் காலம் கடத்தினால், நம்மைப் பற்றிய மதிப்பீடு தவறாக எதிராளியின் மனதில் பதிவாகும். பிரச்சனைகள் வலுக்க நாமே காரணமாகி விடுவோம். பின்னர், நாமே நினைத்தாலும் அதிலிருந்து வெளியே வருவது சிரமமாகி விடும்.
      நம்மை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மற்றவர்கள் நெருக்கடிக் கொடுக்கத் தொடங்குவதை ஆரம்பத்திலேயே தெரிந்து கொண்டு, அதில் சிக்காமல் சுதாகரித்துக் கொள்ள வேண்டும். ஏதேனும் ஓரிடத்தில் சற்றே நெகிழ்ந்து இடமளித்து விட்டால், அந்த இடத்தை அவர்கள் எடுத்துக் கொண்டு, நம்மை நசுக்க ஆரம்பித்து விடுவார்கள்.
      நம் உடலிலும், மனதிலும் வலிமை இருக்கும் போதே, அவர்களிடமிருந்து தப்பித்துவிடுதல் நன்று. சுருங்கச் சொன்னால் தவறான விஷயங்களை முளையிலேயே கிள்ளி எறிந்து விட வேண்டும். 
      இதை விளக்குவதற்கு எரிகின்ற அடுப்பில் உள்ள தண்ணீரில் தவறித் தாவி விழுந்த ஒரு தவளையின் கதையைப் பார்ப்போம். தவளை தண்ணீரில் விழுந்த போது அடுப்பு அப்போது தான் எரிய ஆரம்பித்திருந்ததால், தண்ணீர் மிக மிதமான சூட்டில் இருந்தது. எனவே தவளையும் சொகுசாக தண்ணீருக்குள் அமர்ந்திருந்தது. நேரம் செல்லச் செல்ல தண்ணீரின் வெப்பம் அதிகரித்துக் கொண்டே வந்தது. தவளையும் அதற்கேற்ப, தன் உடலை அந்த வெப்ப நிலைக்கு ஏற்ப மாற்றி கொண்டே வந்தது.
      இது தான் தவளையின் குணம்: வெப்பம் ஏற ஏற தவளையும் அந்த வெப்பநிலைக்கு ஏற்ப தன் உடலை அந்த வெப்பத்துக்கு ஏற்ப மாற்றி கொள்ளும்.
      பொறுக்க முடியாத உச்ச கட்ட வெப்பநிலையை தண்ணீர் அடையும் போது, அதன் தாக்கத்தைத் தாங்கமுடியாமல் தவளை பாத்திரத்தில் இருந்து வெளியே குதிக்க முயற்சி செய்தது. ஆனால் எவ்வளவு கஷ்டப்பட்டு முயற்சித்தாலும் வெளியே குதிக்கவே முடியவில்லை.

      ஏன் என்றால்... தவளை தண்ணீரின் வெப்பத்துக்கு ஏற்ப தன் உடலை மாற்றி கொண்டே வந்ததால், அது வலுவிழந்து தொய்ந்து போய் விட்டது.
வெளியே வரவும் முடியாமல், தண்ணீரின் வெப்பத்தையும் தாங்க முடியாமல் விழி பிதுங்கி வெந்நீருக்குள்ளேயே இறந்து விட்டது.

      இந்தக் கதையில் வரும் தவளையை எது கொன்றது? இந்தக் கேள்விக்குப் பெரும்பாலானோரின் பதில் கொதிக்கும் நீர் என்று தான் கிடைக்கும். ஆனால் உண்மையில், சரியான நேரத்தில் வெப்பமான தண்ணீரில் இருந்து தப்பித்து வெளியேற வேண்டும் என்று முடிவெடுக்காத தவளையின் இயலாமை தான் அதன் கோர முடிவுக்குக் காரணம். தாவிக் குதிப்பது தவளைக்கு ஒன்றும் இயலாத செயலல்ல. அதன் இயல்பு தான். ஆனாலும் முடிந்த வரை வெப்பத்துக்கு ஈடு கொடுத்துக் கொண்டே வந்தது. இறுதியில் உடல் வலுவிழந்து, தாவிக் குதிக்கும் தன் இயல்பான செயலைக் கூட செய்ய முடியாமல் இறந்து விட்டது.
      நாமும் அப்படித்தான் தேவையில்லாமல் எல்லோரிடமும் அனுசரித்துச் செல்கிறோம். அவசியமில்லாமல் சூழலுக்குக் கட்டுப்படுகிறோம். பின்பு நாமும் அவற்றுக்கு முற்றிலும் அடிமையாகி அதிலிருந்து மீண்டு வர  நினைத்தாலும் முடியாத ஒரு எல்லைக்குச் சென்று சிக்கலில் மாட்டிக் கொள்கிறோம்.
      நாம் எப்போது அனுசரித்துப் போக வேண்டும், எதற்கு அரவணைத்துச் செல்ல வேண்டும் என்பதையும், எப்போது எதிர்கொள்ள வேண்டும் எதற்கெல்லாம் போராட வேண்டும்  என்பதையும் தெரிந்து வைத்திருக்கவேண்டும். கட்டாயமாக கவனமாக இருக்க வேண்டும்.
      கப்பலுக்கு வெளியே இருக்கும் கடல் தண்ணீர், கப்பலை ஒன்றும் செய்து விட முடியாது. அந்தத் தண்ணீர் கப்பலுக்குள் வந்தால் தான் ஆபத்து. அதுபோல தான் ஆபத்துக்களும், பிரச்சனைகளும் நாம் அனுமதித்தால் ஒழிய அவற்றால் நம்மை அழிக்க முடியாது.

      எந்தெந்த விஷயங்களுக்கு உடனடி முற்றுப் புள்ளி வைக்க வேண்டும், எந்தெந்த விஷயங்களுக்கு மூன்று புள்ளிகள் வைத்து தொடர வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்வது ஒன்று தான் நாம் செய்ய வேண்டிய முக்கியமான வேலை. இதைச் சரியாக செய்து விட்டால் பலாபலன்களை அதன் வழியில் விட்டு விட்டு நிம்மதியாக நம் பாதையில் சென்று கொண்டே இருக்கலாம். வெற்றி நிச்சயம்.