Wednesday 18 June 2014

இந்த நிமிடம்…இந்த நிமிடம்…இது உங்களுக்கு மட்டும் தானே! 

காம்கேர் கே. புவனேஸ்வரி



      சிலர் வாழ்க்கையில் ஓயாமல் உழைத்துக் கொண்டே இருப்பார்கள். கை நிறைய சம்பாதிக்கவும் செய்வார்கள். ஆனால், செலவு செய்ய அத்தனை யோசிப்பார்கள். எதிர்காலத்துக்காக வீடு, குழந்தைகளுக்காக சேமிப்பு, வங்கிக் கணக்கு, அசையா சொத்து, தங்க, வைர, வைடூர்ய, பிளாட்டின ஆபரணங்கள் என்று சொத்துக்களைச் சேர்த்து இவைகள் தான் வாழ்க்கையின் மூலதனம் என்று பெருமகிழ்ச்சி அடைவார்கள். நிகழ்காலத்தில் எதையுமே அனுபவிக்காமல் சந்தோஷத்தை வீணடிப்பார்கள். நிகழ்கால சந்தோஷம் தான் நிலையான சொத்து, நிம்மதியான வாழ்க்கை என்ற எண்ணமே அவர்களுக்கு வருவதில்லை. சேமிப்பும், குடும்ப எதிர்காலத் திட்டமும் தேவை தான். ஆனால், வாழ்க்கை அதற்காக மட்டுமே இல்லை அல்லவா? இவர்கள் சேர்த்து வைக்கும் சொத்துக்களை எல்லாம் யார் எப்படி அனுபவிக்கப் போகிறார்கள் என்பது அவர்களுக்கேத் தெரியாத ஒரு புதிர் தான். இப்படிப்பட்டவர்களுக்கு வாழ்க்கையின் இரகசியத்தைப் புரிய வைக்க இதோ ஒரு கதை:
இறக்கும் தருவாயில் இருந்த ஒரு மனிதனிடம், கடவுள் கையில் மிகப்பெரிய பெட்டியுடன் வந்தார். இருவருக்கும் நடந்த உரையாடல்…
கடவுள்: ‘ம்...ம்… கிளம்பு…கிளம்பு… இவ்வுலகில் உனக்கான நேரம் முடிஞ்சு போச்சு…’
மனிதன்: ‘என்ன நேரம் முடிஞ்சு போச்சா… நான் செய்ய வேண்டியப் பணிகள் ஏராளமாக உள்ளனவே…இன்னும் சிலகாலம் என்னை வாழவிடுங்கள் கடவுளே!’
கடவுள்: ‘இல்லை மனிதா, உன் நேரம் முடிஞ்சுப் போச்சு…சீக்கிரம் இந்த பெட்டியை எடுத்துக் கொண்டு கிளம்பு’
மனிதன்: ‘இந்தப் பெட்டியில் என்ன இருக்கிறது கடவுளே?’
கடவுள்: ‘உன்னுடைய உடைமைகள்’
மனிதன்: ‘என்னுடைய உடைமைகளா? வாவ்… அப்படியென்றால் அவை என் உடைகளும், பொருட்களும், பணமுமா?’
கடவுள்: ‘இல்லை மனிதா, அவை உனக்குச் சொந்தமானவை இல்லை. ஏனெனில், அவற்றை நீ உழைத்து சம்பாதித்து சேமிக்க இந்த பூமி தானே காரணமாக இருந்தது. எனவே, அவை இந்த பூமிக்குச் சொந்தமானவை’
மனிதன்: ‘சரி…அவை என் நினைவுகளா?’
கடவுள்: ‘அவை என்றுமே உனக்குச் சொந்தமாக முடியாது. ஏனெனில்  சந்தோஷம், துக்கம் போன்ற உணர்வுகள் ஏற்படுத்துகின்ற நினைவுகள், அவை நடந்த காலத்துக்குச் சொந்தமானவை. அந்தந்த நேரத்தில் நடைபெறுகின்ற நிகழ்வுகளும், செயல்பாடுகளும் ஏற்படுத்துகின்ற உணர்வுகள் பதிய வைக்கும் நினைவுகள், காலத்துக்குத் தானே சொந்தமாக இருக்க முடியும். அவை எப்படி உனக்குச் சொந்தமாக முடியும்? எனவே உன் நினைவுகள் நேரத்துக்குத் தான் சொந்தம்’
மனிதன்: ‘அப்படியென்றால் அவை என் திறமைகளா?’
கடவுள்: ‘நிச்சயம் இல்லை மனிதா? ஏனெனில் உன் சூழல் தான் உன் திறமைகளை வளர்த்தெடுத்தது. அமைதியான சூழல் உன் கற்பனையை வளர்த்தெடுத்திருக்கலாம். ஆனந்தமான சூழல் உன் கற்பனைக்கு வடிவம் கொடுத்திருக்கலாம்.  எனவே, உன் திறமைகள்  நிச்சயம் சூழலுக்குத் தான் சொந்தம்’.
மனிதன்: ‘ஓ…சரி, என் நண்பர்களும், உறவுகளுமா?’
கடவுள்: ‘இல்லவே இல்லை மனிதா, அவர்கள் வாழ்க்கைப் பாதையில் உன்னோடு சேர்ந்து பயணித்தவர்கள் என்பதால், அவர்களும் உனக்குச் சொந்தமானவர்கள் இல்லை. உன் வாழ்க்கைப் பாதைக்குச் சொந்தமானவர்கள்’
மனிதன்: ‘ம்…சரி அப்படியென்றால் என் மனைவியும், குழந்தைகளுமா?’
கடவுள்: ‘இல்லை, இல்லவே இல்லை… அவர்கள் உன் அன்பிற்கும், பாசத்திற்கும், பரிவிற்கும், காதலுக்கும் வடிகாலாக இருந்தவர்கள். அவ்வுணர்வுகள் உன் இதயத்துக்கு இதமளித்திருக்கும், உன் வாழ்க்கைப் பாதைக்கு சுவாராஸ்யம் கொடுத்திருக்கும். எனவே, உன் மனைவியும், குழந்தைகளும் உன் இதயத்துக்குச் சொந்தமானவர்கள்.’
மனிதன்: ‘சரி கடவுளே, அப்படியென்றால் என் உடலா?’
கடவுள்: ‘மனிதா, உன் உடல் இந்த மண்ணுக்குத் தான் சொந்தம்’
மனிதன்: ‘அப்படியானால் அது என் ஆன்மா? சரிதானே கடவுளே?’
கடவுள்: ‘நிச்சயமாக இல்லை. உன் ஆன்மா எனக்கு மட்டுமே சொந்தம். வேறு யாரும் அதற்குச் சொந்தமோ, உரிமையோ கொண்டாடவே முடியாது’
மனிதனுக்கு இதற்குமேல் பொறுக்க முடியவில்லை. மனம் நொந்து போய் மிக பதட்டத்துடன் அப்பெட்டியைத் திறந்து பார்த்தான். அப்பெட்டி காலியாக இருந்தது. மனிதனுக்கு கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது.
அவன் கடவுளைப் பார்த்துக் கேட்டான்: ‘கடவுளே இந்த  உலகை விட்டுச் செல்லும் போது எனக்கு எதுவுமே கிடையாதா?’
அதற்குக் கடவுள் சொன்னார்: ‘ஆம். இப்போது சொன்னாயே மனிதா, இது தான் சரியான பதில்… ஒவ்வொரு நிமிடமும் நீ வாழ்ந்து அனுபவித்த வாழ்க்கை அனுபவம் மட்டுமே உனக்குச் சொந்தமானது.’
இந்த கற்பனைக் கதையில் வரும் மனிதனிடம் கடவுள் சொன்னதைப் போல,  கடவுள் கொடுத்த இந்த வாழ்க்கை நமக்கு இருக்கும் வரை அதை சந்தோஷமாக அனுபவிக்க கற்றுக் கொள்வோம்.
இறந்த காலம் முடிந்து விட்டது. அதில் இருந்து பாடம் கற்றுக் கொள்வோம். அதன் படிப்பினையில் நிகழ்காலத்தில் ஆனந்தமாய் வாழ முயற்சிப்போம். அது கற்றுக் கொடுக்கும் பாதையில் வருங்காலத்தை வரவேற்போம்.

இறந்தகாலத்தை மாற்றவோ, வருங்காலத்தை நிர்ணயிக்கவோ நம்மால் முடியாது. ஆனால் நிகழ்காலம் நம் கையில். அது மட்டுமே நிதர்சனம். அதை நின்று, நிதானித்து சுவாசிப்போம். ஆக. நில். கவனி. செல்.