Wednesday, 13 August 2014

ஆசையும், பேராசையும்

காம்கேர் கே புவனேஸ்வரி

       வாழ்க்கையில் நம் ஒவ்வொருக்கும் ஏராளமான ஆசைகள் இருக்கும். லேட்டஸ்ட் கார் வாங்க வேண்டும், அடுத்தவர் பொறாமைப்படும் அளவுக்கு அட்டகாசமான வீடு கட்ட வேண்டும், வருடந்தோறும் வெளிநாட்டுச் சுற்றுலா செல்ல வேண்டும், வங்கி அக்கவுண்ட்டில் ஏராளமாக பணம் வைத்துக்கொள்ள வேண்டும்… இப்படி அவரவர் தகுதிக்கும் அதிகமாகவே ஆசைகள் மனதை ஆக்கிரமித்திருக்கும்.
அந்த ஆசைகளை நம் கட்டுக்குள் வைத்துக் கொள்ளும்வரை தான் நாம் சந்தோஷமாக வாழ முடியும். ஆசைகளின் கட்டுக்குள் நாம் சென்று விட்டால் நாம் நிரந்த அடிமை தான். அதில் எள்ளளவும் சந்தேகத்துக்கு இடமேயில்லை.
ஆசைகள் தான் உழைக்க வேண்டும் என்ற உத்வேகத்தைக் கொடுக்கும். ஆசைகள் இருந்தால் தான் நாம் அடுத்தகட்ட வளர்ச்சியை அடைய முடியும். ஆனால் ஆசை பேராசையாக மாறும் போது அதுவே பேரழிவுக்குக் காரணமாகும். ஆக, ஆசைக்கும், பேராசைக்கும் நூழிலை வித்தியாசம் தான். அதன் எல்லையை மீறாமல் வாழப் பழகிக் கொண்டால் மகிழ்ச்சியாக வாழலாம்.
யு-டியூபில் ஒரு வீடியோ பதிவைக் காண நேர்ந்தது. சுமார் 2 நிமிடம் 45 விநாடிகள் மட்டுமே ஓடும், The Black Hole என்ற தலைப்பிலான சின்னஞ்சிறு வீடியோ மனிதனின் எல்லையற்ற ஆசையின் விளைவை மிக நுணுக்கமாகப் பிரதிபலிக்கிறது.
ஜெராக்ஸ் கடையில் பணிபுரியும் ஒரு பணியாளர் ஜெராக்ஸ் எடுக்க முற்படும் போது அது சரியாக வேலை செய்யவில்லை. இரண்டு மூன்று முறை ஏதேதோ பட்டனை கிளிக் செய்து பார்க்கிறார். சில நிமிடங்களுக்குப் பிறகு, பெரிய கருப்பு வட்டம் ஒன்று ஜெராக்ஸ் பேப்பரில் கிடைக்கிறது. அதை எடுத்து அலுப்புடன் அருகில் இருந்த மேஜையில் வைக்கிறார். மிகுந்த தாகம் எடுக்கவே, அருகில் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து தண்ணீர் குடித்து விட்டு மேஜை மீதிருந்த கருப்பு வட்டம் பிரின்ட் ஆகியிருந்த பேப்பர் மீது வைக்கிறார். தண்ணீர் பாட்டில் அந்த கருப்பு வட்டத்தின் வழியாக உள்ளே சென்று விட்டது. அதிர்ச்சியுடன் அந்த கருப்பு வட்டத்தை எட்டிப் பார்க்கிறார் பணியாளர். தயங்கித் தயங்கி கையை அந்த வட்டத்துக்குள் விட கை உள்ளே செல்கிறது. அதனுள் விழுந்த தண்ணீர் பாட்டில் கைக்குக் கிடைக்க வியப்புடன் மேஜைக்குக் கீழே குனிந்து பார்க்கிறார்.
பிறகு, கருப்பு வட்டம் பிரின்ட் ஆகியிருந்த பேப்பரை எடுத்து ஒரு கையால் பிடித்துக் கொண்டு, மறு கையை அந்த கருப்பு வட்டத்துக்குள் விட கை உள்ளே செல்கிறது. இரண்டு மூன்று முறை அப்படியே செய்து பார்க்கிறார். வியப்புக்கு மேல் வியப்புடன் அந்த அறையை அப்படியே நோட்டம் விடுகிறார். அந்த அறையில் இருந்த காசு போட்டால் சாக்லெட் கிடைக்கின்ற இயந்திரத்தின் மீது அந்த கருப்பு வட்டம் பிரின்ட் செய்த பேப்பரை வைத்து, வட்டத்துக்குள் கையை விட்டு காசு போடாமலே விருப்பமான சாக்லெட்டை எடுத்து சாப்பிடுகிறார்.
அடுத்து அந்த அறையில் பூட்டி வைக்கப்பட்டிருந்த இரும்பு பீரோ ஒன்று கண்களில் படவே, அவசரம் அவசரமாக சாக்லெட்டைத் தின்று விட்டு, அந்த பீரோ மீது அந்த பேப்பரை ஒட்டுகிறார். கைகளை அந்த பேப்பரில் இருந்த கருப்பு வட்டத்துக்குள் விட்டவுடன், பணக்கட்டுகள் கைகளில் தென்படுகிறது. உடனே அவசரம் அவசரமாக அவற்றை அள்ளி வெளியே எடுத்து ஆசை ஆசையாய் பார்க்கிறார். பரவசம், ஆனந்தம், பரபரப்பு… உணர்ச்சிக் கலவை...
இன்னும் ஏதேனும் பணம் இருக்கிறதா என்று படபடப்புடன் மீண்டும் கைகளை அந்த கருப்பு வட்டத்தின் உள்ளே விட்டு, பீரோவின் இறுதி வரை  துழாவி, எல்லா பணத்தையும் வெளியே எடுத்து வைக்கிறார்.
ஆனாலும் ஆசை விடவில்லை. மீண்டும் கைகளை உள்ளே விட்டுத் துழாவிப் பார்க்கும் போது, ஏதோ ஒன்று கைகளுக்குத் தட்டுப்பட, அதை எடுக்க முயற்சிக்க பீரோவினுள் உடல் முழுவதும் சென்று விடுகிறது.
அந்த அதிர்வில் பீரோ மீது ஒட்டப்பட்டிருந்த கருப்பு வட்ட பேப்பர்  கீழே விழுந்து விட, உள்ளே சென்றவரால் வெளியே வர முடியவில்லை. உள்ளே சென்றவர் சென்றவர் தான்.
அடுத்தவர் பீரோவில் இருக்கும் பொருட்களை தகாத முறையில் எடுக்க ஆசைப்பட்டதே தவறான எண்ணம். அதோடு நிற்காமல், அதில் இருந்து பணம் முழுவதையும் எடுத்த பிறகும், அவருடைய கட்டுப்பாடற்ற ஆசையே  அவருக்கு அழிவை ஏற்படுத்தியது.
பேராசை பெருநஷ்டம் என்பதை இந்த மனிதனின் செய்கை ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு பாடமாக அமைகிறது.