Wednesday, 6 August 2014

ஒப்பீடுகள்


காம்கேர் கே புவனேஸ்வரி

இறைவன் கொடுத்திருக்கும் இந்த வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக கொடுக்கப்பட்டிருக்கும் அருமையான வாய்ப்பு. எல்லோருக்கும் ஒரே விதமான சந்தோஷங்கள், வருத்தங்கள், துக்கங்கள், சோகங்கள் இருப்பதில்லை. ஒருவரோடு ஒருவர் ஒப்பீடு செய்து கொள்ளவே முடியாத அளவுக்கு ஒவ்வொருடமும் ஏதேனும் ஒரு சிறப்பியல்பு இருக்கும். அதை விட்டு நம்மை மற்றொருவரோடு ஒப்பீடு செய்து கொண்டு, அதனால் அவர்களைப் போல அழகாக நாம் இல்லையே, அவர்களுக்கு இருக்கும் வசதிகள் நம்மிடம் இல்லையே, அவர்கள் சம்பாதிப்பதைப் போல நாம் சம்பாதிக்க முடியவில்லையே என்று வருத்தப்படத் தேவையில்லை. அதற்கு பதிலாக நம்மிடம் உள்ள சிறப்பியல்பைக் கண்டறிய முற்படலாம். அதை மேம்படுத்திக் கொள்ள முயற்சி செய்யலாம்.
இதற்கு ஒரு அருமையான கதை உள்ளது. ஒரு காகம் காட்டில் சுதந்திரமாக பறந்து திரிந்து தன் குடும்பத்துடன் வசித்து வந்தது. ஒரு நாள் பளிச்சென வெள்ளை வெளேறென்றிருக்கும் வாத்தைச் சந்தித்தது. உடனே, தான் மிகவும் கருப்பாக இருப்பதாகவும், வாத்து வெள்ளைக் கலரில் அழகாக இருப்பதாகவும் நினைத்தது. அதை வாத்திடமும் பகிர்ந்து கொண்டது ‘வெள்ளைக் கலரில் அழகாக இருக்கும் நீ தான் உலகிலேயே சந்தோஷமாக இருக்கும் பறவை அல்லவா?’
அதற்கு வாத்து சொன்னது, ‘பச்சைக் கிளியை சந்திக்கும் வரை நானும் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தேன். அழகான பச்சைக் கலரில் இருக்கும் கிளி தான் உலகிலேயே சந்தோஷமாக இருக்கும் பறவை’
உடனே காகம் பச்சைக் கிளியைச் சந்திக்கச் சென்றது. அதனிடமும் தன் எண்ணத்தைத் தெரிவித்தது. அதற்கு பச்சைக் கிளி சொன்னது, ‘நான் மிக சந்தோஷமாக வாழ்ந்து வந்தேன்… ஆனால் அழகாக தோகைகளைக் கொண்ட மயிலை சந்தித்தப் பிறகு தான் என்னை விட மயில் தான் அழகானப் பறவை என்ற உண்மை தெரிந்தது. பல வண்ணக் கலர்களில் அழகான தோகை. பார்ப்பவர்களை மயக்கும் அழகு. என்னைப் பொருத்த வரை மயில் தான் அழகானப் பறவை. அது தான் உலகில் மிக சந்தோஷமாக இருக்கும் பறவை’
காகத்துக்கு மயிலை சந்திக்க ஆர்வம் பொங்கியது. அப்படியே பறந்து சென்று ஒரு மிருகக்காட்சிச் சாலைக்குச்  சென்றது. அங்கு மயில் கூண்டில் அடைக்கப்பட்டிருந்தது. நூற்றுக் கணக்கான மக்கள் அதை வேடிக்கப் பார்த்து ரசித்து புகைப்படமெல்லாம் எடுத்துக் கொண்டிருந்தனர்.
காகம் மயிலிடம் சொன்னது ‘என்ன அழகு உனக்கு. உன்னைச் சந்திக்க தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். புகைப்படமெல்லாம் எடுத்துக் கொள்கின்றனர். நீ தான் உலகிலேயே மிக அழகானப் பறவை. நீ கொடுத்து வைத்தவன். என்னைப் பார்த்தாலே மக்கள் சூ..சூ என விரட்டி விடுவார்கள், நான் அதிர்ஷமில்லாதவன்.’
அதற்கு மயில் சொன்னது ‘ஆமாம் காகமே, நான் தான் உலகிலேயே அழகு என்பதில் நானும் கர்வம் கொண்டிருந்தேன். ஆனால், அந்த அழகின் காரணத்தாலே தான் நான் கூண்டில் அடைக்கப்பட்டிருக்கிறேன். கூண்டில் சிறைப்பட்டிருப்பதால் தான் என்னை ரசிக்க மக்கள் வருகிறார்கள்.
இந்த மிருகக்காட்சி சாலையில் காகம் ஒன்றைத்தான் காட்சிப் பொருளாக அடைத்து வைக்கவில்லை. காகமாகப் பிறந்திருந்தால் சுதந்திரமாக ஜாலியாக சுற்றிப் பறந்து திரிந்து வாழ்ந்திருக்கலாம் அல்லவா? அது தான் இப்போதைய என் ஏக்கம்.’
காகத்துக்கு தன் பெருமை புரிந்தது. கூண்டில் அடைபட்டிருந்த மயிலிடம்  விடைபெற்று ‘காகா’ என கத்திக் கொண்டே வானத்தில் பறந்து சென்றது.
இந்தக் கதை மனிதர்களாகிய நமக்கும் மிகப் பொருத்தமாக இருக்கும். கடவுள் கொடுத்த இந்த வாழ்க்கையை அப்படியே அனுபவிக்கக் கற்றுக் கொள்வோம். நமக்கு இருப்பதை வைத்துக் கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து மகிழ்ச்சியாக வாழ்க்கையை அனுபவிப்போம். மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டு நமக்கான இந்த அருமையான வாழ்க்கையை அனுபவிக்கத் தவறிவிடக் கூடாது.
நம் வாழ்க்கை நமக்குக் கிடைத்த வரம். அதை பூரணமாக அனுபவிப்பது தான் நம் புத்திசாலித்தனம்.