Wednesday 16 July 2014

பிரச்சனைகளும், மன அமைதியும்!


      பொதுவாக பிரச்சனைகள் நம்மை நெருக்கும் போது தான், நாம் மன அமைதியை இழப்போம். அந்தப் பிரச்சனைகள், பணப் பிரச்சனையாக இருக்கலாம், அலுவலகத்தில் வேலை பளுவினால் உண்டாகலாம், கடன் தொல்லையால் ஏற்படலாம், மதிப்பெண் குறைந்ததினால் பாதிக்கப்படலாம் அல்லது நாம் விரும்புகின்ற நிகழ்ச்சி நடைபெறாமல், அதற்கான சூழல் உண்டாகாததால் ஏற்படக்கூடிய மன அழுத்தத்தினால் மனம் அமைதி கெட்டுப் போகலாம்.
      பிரச்சனைகள் தீர்வது அல்லது தீர்த்துக் கொள்ள முயற்சிப்பது என்பது ஒரு பக்கம் இருக்க, பிரச்சனைகள் உண்டாகும் நேரத்தில் மன அமைதியை இழக்காமல் இருப்பது தான் மிகவும் முக்கியம். மன அமைதி இல்லாத நேரத்தில் குழப்பங்களும், போராட்டங்களும்தான் மனதில் குடியேறி இருக்கும். அப்போது பிரச்சனைகளை தீர்ப்பதற்கான வழிமுறைகளை சிந்திக்க இயலாது. அப்படியே சிந்தித்தாலும் எதிமறையான முடிவுகளை தான் எடுக்க முடியும்.
இதன் காரணமாய் தான் இன்று, மதிப்பெண் குறைந்ததினால் தற்கொலை செய்து கொள்ளும் மாணவ மாணவிகள், உடல் உபாதைகளினால் தற்கொலை செய்து கொள்பவர்கள், கடன் தொல்லையினால் போராட இயலாமல் தற்கொலைக்கு முயற்சிப்பவர்கள் என்று பல்வேறு பிரிவுகளில் மன அழுத்தத்திற்கு ஆளானோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 
மன அமைதியைப் பெறுவதற்கு பெரிய முயற்சிகள் எதையும் எடுக்க வேண்டியதில்லை. மனதை அப்படியே விட்டு விட்டாலே அது தானாக அமைதியாகி விடும். பிறகு பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ளும் வழிமுறைகளை ஆராய்ந்து அதிலிருந்து மீளலாம். 
ஒருமுறை  புத்தர்  தன்னுடைய சீடர்களுடன் காட்டில் பயணம் செய்து கொண்டிருந்தார். சிறிது தூரம் சென்றதும், அங்கிருந்த ஒரு மரத்தடியில் ஓய்வெடுக்க நினைத்து அனைவரும் தங்கினார்கள். அருமையான நிழல் தரும் மரம். அருகில் ஒரு ஏரி. அப்போது, புத்தர்  தன்னுடைய  சீடர்களில் ஒருவரை அனுப்பி ஏரியில் இருந்து குடிப்பதற்கு நீர்கொண்டு வரச் சொன்னார்.
சீடரும் பானை ஒன்றை எடுத்துக்கொண்டு ஏரியை நோக்கி நடந்தார். அந்த நேரத்தில், ஒரு மாட்டு வண்டி அந்த  ஏரிக்குள் இறங்கி  கடந்து சென்றது. மாடும், வண்டியும் கடந்து சென்றதால் ஏரி சேறும் சகதியுமாக கலங்கி விட்டது. 
 சகதியாக மாறிய தண்ணீரை எடுத்து வராமல் திரும்பிய சீடர் தன் குருவிடமும் அதைத் தெரிவித்தார்.
கால் மணி நேரத்துக்குப் பிறகு, புத்தர் தன்னுடைய சீடரை மீண்டும் ஏரிக்குச் சென்று தண்ணீர் கொண்டு வரச் சொன்னார்.
ஏரியின் அருகே சென்று சீடன் பார்த்தார். இப்போதும் நீர் கலங்கியே இருந்தது. மீண்டும் சீடர் தண்ணீர் இல்லாமலேயே திரும்பி விட்டார்.
அரை மணி நேரத்துக்குப் பிறகு, புத்தர் தன்னுடைய சீடரை மீண்டும் ஏரிக்குச் சென்று தண்ணீர் கொண்டு வரச் சொன்னார்.  
இந்த முறை சீடர் ஏரிக்குச் சென்று பார்த்த போது நீர் தெளிந்திருந்ததுபானையில் தண்ணீரை நிரப்பிக் கொண்டு புத்தரிடம் திரும்பினார்.
புத்தர் தண்ணீரைப் பார்த்தார். சீடனையும் பார்த்தார். பிறகு மெல்லிய குரலில் கேட்டார்: ‘தண்ணீர் சுத்தமாவதற்கு என்ன செய்தாய்?’
‘நான் ஒன்றும் செய்யவில்லை சுவாமி! அதை அப்படியே விட்டுவிட்டு வந்தேன். அது தானாகவே சுத்தமாயிற்று!’ என்று சீடன் பதிலுரைத்தார்.
புத்தர் மேலும் தொடர்ந்தார்…
 ‘நீ அதை அதன் போக்கிலேயே விட்டாய். அது தானாகவே சுத்தமாயிற்று. அத்துடன் உனக்கு தெளிந்த சுத்தமான நீரும் கிடைத்தது இல்லையா?
நம் மனமும் அப்படிப்பட்டதுதான். மனம் குழப்பத்தில் இருக்கும்போது நாம் ஒன்றும் செய்ய வேண்டாம். அதை அப்படியே விட்டு விட வேண்டும். சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டும். அது தனக்குத்தானே சரியாகிவிடும்.
நாம் எந்தவித முயற்சியும் செய்ய வேண்டாம். மனதை சமாதானப் படுத்தும் விதத்தைப் பற்றி யோசிக்கவும் வேண்டாம். அது அமைதியாகிவிடும் . அது தன்னிச்சையாக நடக்கும். அத்துடன் நம்முடைய முயற்சியின்றி அது நடக்கும்.
மன அமைதி என்பது இயலாத செயல் அல்ல! இயலும் செயலே! அதற்கு நம் பங்கு எதுவும் தேவை இல்லை! It is an effortless process!
      புத்தரின் இந்த விளக்கம், நித்தம் பல்வேறு பிரச்சனைகளினால் மன அமைதியின்றி தவிக்கும் நமக்கு ஒரு தீர்வைக் கொடுப்பதுபோல இருக்கிறதல்லவா?

நாம் ஒரு விஷயத்தை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். பிரச்சனைகளினால் குழம்பித் தவிக்கும் மனதை அமைதிப்படுத்துவதற்கான  வழியைத் தான் புத்தர் சொல்லியிருக்கிறார். மற்றபடி நம் பிரச்சனைகளில் இருந்து மீள்வதற்கு நாம் தான் முயற்சி எடுக்க வேண்டும். அந்த முயற்சியை தெளிவான மனதுடன் இருக்கும் போது எடுத்தால் நேர்மறையான ரிசல்ட் கிடைக்கும் என்பது உறுதி. வெற்றி உறுதி.