நாணயத்தின் மதிப்பு
பணம் என்பது நம்மிடமே இருக்கப் போவதில்லை.
பொருட்கள் வாங்குவதற்காக, சேவைகளைப் பெறுவதற்காக என்று பல்வேறு காரணங்களுக்காக, நம்
பணம் மற்றொருவரிடத்துக்குச் செல்லும், மற்றவரது பணம் நம்மிடத்துக்கு வரும். பணத்தைக்
கையாளும் போது இரு தரப்பினரும் நாணயமாக இருந்தால் மட்டுமே அந்த பரிவர்த்தனை(Transaction)
நல்லபடியாக இருக்கும். இரு தரப்பில் நாணயம்
இல்லை என்றால், கீரைக் கடைக்காரரிடம் கீரையைக் கூட வாங்க இயலாது.
அதுபோலவே தான் நம்மிடம் உள்ள நேர்மை,
நாம் செய்கின்ற எல்லா செயல்களிலும் பிரதிபலிக்கும். அந்த குணத்தோடு ஒரு செயலைச் செய்யும்
போது அது ஒருவித பாசிடிவ் வைப்ரேஷனை உருவாக்கிக் கொடுக்கும். அந்த செயலை வெற்றியடையச்
செய்யும். அதுபோல மற்றொருவர் நமக்காக செய்கின்ற செயல்களிலும் நேர்மை இருந்தால் மட்டுமே,
நேர்மையான செயல்படும் நம்மால் அந்த செயலை ஏற்றுக் கொள்ள இயலும். இல்லை என்றால் முரண்பாடுகள்
தான் உண்டாகும். நாளடைவில் அதிகரிக்கும். இறுதியில் அந்தத் தொடர்பு முறிந்து விடும்.
நாணயத்தின் மதிப்பு அதன் இரண்டு
பக்கங்களிலும் ஒன்றாகத் தானே இருக்க முடியும். ஒரு ரூபாய் நாணயத்தின் ஒரு பக்க
மதிப்பு ஒரு ரூபாயாகவும், மற்றொரு பக்கம் ஐந்து ரூபாயாகவும் இருக்க முடியுமா?
இருக்க முடியாதல்லவா?
அது போல தான் மனிதனின் நேர்மையும்,
நாணயமும் அவனது தனிமனித ஒழுக்கத்திலும், வேலை/தொழில் சார்ந்த புரொஃபஷனிலும்
ஒன்றாகவே இருக்க வேண்டும். ஒரு மனிதன் அவனது வேலையில் நேர்மையாகவும், தனி மனித
ஒழுக்கத்தில் கீழ்த்தரமாகவும் இருந்தால் அவனது வாழ்க்கை நிறைவாக இருக்க முடியாது.
அதுபோல ஒருவன், தனிமனித ஒழுக்கத்தில் சிறந்தும், புரொஃபஷனில் கீழ்த்தரமாகவும்
விளங்கினாலும் இதே நிலை தான். வாழ்க்கையில் பூரணத்துவம் கிடைக்காது.
ஆனால், தனிமனித வாழ்க்கையிலும், புரொஃபஷனிலும் வெவ்வேறாக இருந்தாலும்
அவர்கள் சந்தோஷமாகத் தானே இருக்கிறார்கள் என்று உங்களுக்குத் தோன்றலாம். தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு கெட்ட பழக்கங்கள்
உள்ள நபர்கள், தங்கள் புரொஃபஷனில் சிறந்து விளங்குவது போல வெளிப்பார்வைக்குத் தோன்றினாலும்,
அவர்கள் மனதளவில் ஒருவித போராட்டத்துடன் தான் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருப்பார்கள்.
அந்த அவஸ்த்தை அவர்களுக்கு மட்டுமே தெரியும்.
எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற பதட்டம், குற்ற உணர்ச்சி,
யாரால் எப்போது என்ன பிரச்சனை வரும் என்ற தடுமாற்றம், மன உளைச்சல், செய்கின்ற எதிர்மறைச்
செயல்கள் உண்டாக்குகின்ற நெகடிவ் வைப்ரேஷன் இவை அனைத்தும் மனிதனின் உடல் மற்றும் மன
அமைதியை குலைத்து நாசம் செய்து விடும்.
உலகில் சிற்றின்பம், பேரின்பம் என இரண்டு விதமான இன்பங்கள் உள்ளன.
உலகில் அனுமதிக்கப்பட்ட இன்பங்களுக்கு பேரின்பம் என்றும், அனுமதிக்கப்படாத இன்பங்களுக்கு
சிற்றின்பம் என்றும் பெயர்.
நேர்மை, நாணயம், ஒழுக்கம், சுயகட்டுப்பாடு இவற்றுடன் கூடிய வாழ்க்கையை
நடத்தும் போது கிடைக்கின்ற பணம், புகழ் இன்ன பிற வசதிகள், மேலே சொன்ன பண்புகள் எதையுமே
கடைபிடிக்காமல் தங்கள் இஷ்டப்படி எந்த கொள்கைப் பிடிப்பும் இல்லாமல் வாழுகின்றவர்கள்
பெறுகின்ற வாழ்க்கை வசதி வாய்ப்புகளை விட குறைவானதாகவே வெளிப்பார்வைக்குத் தோன்றும்.
அது தான் உண்மை. நடைமுறையில் இன்று நடந்து கொண்டிருப்பதும் அது தான்.
ஆனால் உண்மையில் பூரணத்துவமான வாழ்க்கை யாருக்குக் கிடைக்கிறது
தெரியுமா? வாழ்க்கையில் அனுமதிக்கப்பட்ட பேரின்பங்களை மட்டும் அனுபவித்து வாழ்கின்றவர்களுக்குத்
தான் அந்த நிம்மதியான வாழ்க்கைக் கிடைக்கிறது. வெளிப் பார்வைக்கு வசதி, வாய்ப்புகளில்
குறைவானவர்களாகத் தோன்றினாலும், மனதளவில் இவர்கள் தான் உண்மையான கோடீஸ்வரர்கள்.
வாழ்க்கையில் அனுமதிக்கப்படாத இன்பங்களை அனுபவித்து எதிர்மறையாக
வாழ்பவர்களுக்கு என்றுமே பூரணத்துவமான வாழ்க்கைக் கிடைப்பதில்லை. வீடு, வாசல், தோட்டம்,
கார், பங்களா என்று வெளித் தோற்ற வாழ்க்கை மிக அழகாக இருக்கும். மனதளவில் மிகப் பெரிய
அளவில் துயரங்களோடும், மன அழுத்தங்களோடும் மட்டுமே அவர்களால் வாழ்க்கையை நகர்த்த முடியும்.
நாணயமான வாழ்க்கையினால் மனதளவில் கோடீஸ்வரராக வாழ வேண்டுமா?
அல்லது சற்றே ‘முன்ன பின்ன’ இருந்து நாணயமில்லா வாழ்க்கையினால் வெளிப் பார்வைக்கு மட்டும்
கோடீஸ்வரராகத் தெரிய வேண்டுமா?
நாம் தான் நாணயமாக முடிவெடுக்க
வேண்டும். நாணயத்தின் இரு பக்க மதிப்பும் ஒன்றாகவே இருப்பதைப் போல, நம் வாழ்க்கையை எத்தனைப் பக்கங்களில் திருப்பிப் போட்டுப்
பார்த்தாலும் ஒரே வாழ்க்கை முறை தான் தெரிய வேண்டும். அதில் தான் நிம்மதியும், பூரணத்துவமும்,
பேரின்பமும், பேரானந்தமும் கிடைக்கும்.
இவற்றைப் பின்பற்றிப் பாருங்கள்… நீங்களும் நான் சொன்ன
கருத்தை பலருக்கு சொல்ல ஆரம்பிப்பீர்கள்.