Wednesday, 23 July 2014

சீண்டும் மனிதன், சீறும் இயற்கை

சீண்டும் மனிதன், சீறும் இயற்கை
காம்கேர் கே புவனேஸ்வரி
இயற்கையை ஒதுக்கி விட்டு,  நாம் உயிர் வாழ முடியாது. உயிர் வாழ்தலுக்கு இயற்கை அவசியமாகிறது. பூமி மனிதனுக்கு சொந்தமல்ல. மனிதன் தான் பூமிக்குச் சொந்தமானவன். இது தெரியாமல் அல்லது புரியாமல் அல்லது புரிந்து கொண்டிருந்தாலும் புரியாததைப் போல, என்னவோ பூமியை தான், தான் ஆண்டு கொண்டிருப்பதைப் போல மாயையில் வாழ்ந்து கொண்டிருக்கிறான் மனிதன். மேலும் இவ்வுலகில் உள்ள பொருட்கள் அனைத்தும் ஏதேனும் ஒரு வகையில் ஒன்றோடொன்று தொடர்புடையவை. இந்த உயிரினச் சங்கிலித் தொடர்பில் மனிதன் மட்டும் பிரதானமல்ல. அவனும் ஓர் அங்கம்.
               ஆதிகாலத்தில் மனிதன் இயற்கையோடு இயற்கையாய் இணைந்து வாழ்ந்தான். இயற்கையை பஞ்சபூதங்களாக பிரித்து, அவற்றை பூமாதேவி, காங்கா தேவி, அக்கினி பகவான், வாயு பகவான் என தெய்வங்களாக பாவித்து, இயற்கையை அழிக்க பயந்து மரியாதையுடன் வழிபட்டு அதனோடு இணைந்து மிக சந்தோஷமாக வாழ்ந்து வந்தான்.
நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம் என்ற ஐம்பூதங்களும் மனிதனுக்கு இலவசமாக இயற்கையில் கிடைத்தன. இவ்வுலகில் தோன்றிய அனைத்து ஜீவன்களும் அவற்றை சுதந்திரமாக அனுபவித்தன. இயற்கையை யாரும் பணம் கொடுத்து அனுபவிக்கவில்லை. ஆனால் இன்று, இயற்கை அனைத்தும் தனிப்பட்ட நபர்களின் சொத்தாகிவிட்டது.
குடிக்கும் தண்ணீர், வசிக்கும் நிலம், அடுப்பெரிக்க உதவும் நெருப்பு, இயற்கையை இரசிப்பதற்கு கட்டணம் என்று பஞ்ச பூதங்கள் அனைத்தையும் காசு கொடுத்து பயன்படுத்தும் நிலைமைத் தொடங்கி பல வருடங்கள் ஆகிவிட்டன. 30 வருடங்களுக்கு முன் குடிக்கும் தண்ணீரை நாம் காசு கொடுத்து வாங்க வேண்டி வரும் என்று யாராவது நினைத்தாவது பார்த்திருப்போமா? அதுபோல சுவாசிக்கும் காற்றுக்கே பணம் செலுத்தும் நாளும்  மிக அருகில் தான் உள்ளது. எதிர்காலத்தில் ஆக்ஸிஜன் பைகளைச் சுமந்து கொண்டு தான் மனிதர்கள் நடமாடிக் கொண்டிருப்பார்கள். இது வெறும் கற்பனையோ, நகைச்சுவையோ அல்ல. விரைவில் நடைபெற இருக்கும் அவலம்.
நாகரிகம் வளர வளர, மனிதன் தான் அறிவாளியாய் மேன்மையடைவதாய் எண்ணிக்கொண்டு  இயற்கையை அழித்து புதுமையைப் புகுத்தி செயற்கை இயற்கையை உருவாக்கத் தொடங்கினான். மரங்களை அழிக்கத் தொடங்கினான். விளவு மழை நின்று போனது. விவசாயம் படுத்து விட்டது. வறுமை தலைவிரித்து ஆடத் தொடங்கியுள்ளது. இன்று நம்மைச் சுற்றி விண்ணை முட்டும் கட்டிடங்களும், விதவிதமான டெபிட், கிரெடிட் கார்டுகளில் பணமும் ஏராளமாக உள்ளன. ஆனால், விவசாய நிலமும், நிலத்தடி நீரும், பருவ மழையும் சீரழிந்து மனிதனுக்கு நித்தம் எச்சரிக்கை மணியை அடித்துக் கொண்டே இருக்கிறது.
மனிதன் இயற்கையைச் சீண்ட சீண்ட, இயற்கை சீற்றம் காணத் தொடங்கியுள்ளது. பூமியின் சீற்றம் நிலநடுக்கம் மற்றும் பூகம்பமாய், காற்றின் சீற்றம் சுழற்றிப் போடும் புயல் காற்றாக, நீரின் கோபம் சுனாமியாய், நெருப்பின் கோபம் பெரும் தீ விபத்துக்களாய், ஆகாயத்தின்  கோபம் ஓசோனில் ஓட்டை விழுந்து பூமியின் வெப்பநிலை அதிகரித்து வருகிறது.
இயற்கையை அழிப்பதில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று ஒட்டு மொத்தமாக அழிப்பது, இரண்டாவது Slow Poison கொடுப்பதைப் போல கொஞ்சம் கொஞ்சமாக செயலிழக்கச் செய்வது.
      இயற்கையை இயற்கையாக இருக்க விடாமல் செயற்கை முலாம் பூசி அதன் வீரியத்தைக் குறைப்பதை இரண்டாம் பிரிவில் கொண்டு வரலாம். இதற்கு உதாரணத்துக்கு செயற்கை உரம் போட்டு உணவு தானியங்களை விளைவிப்பது, செயற்கையாய் பழங்களுக்கும், காய்கறிகளுக்கும் கலர் ஏற்றிப் பழுக்கச் செய்வது, சுற்றுச் சூழலை மாசுபடுத்தி கொஞ்சம் கொஞ்சமாய் ஓசோனில் ஓட்டைப் போடுவது இவற்றைச் சொல்லலாம்.
      Plots போட்டு Flats கட்டுவதற்காக நிழல் தரும் மரங்களை மனசாட்சியே இல்லாமல் வெட்டிச் சாய்ப்பது, மோட்டர் போர் போட்டு நிலத்தடி நீரை ஒட்டு மொத்தமாக உறுஞ்சுவது இவற்றை இயற்கையை ஒட்டு மொத்தமாக அழிக்கின்ற முதல் பிரிவின் கீழ் கொண்டு வரலாம்.
ஒட்டு மொத்தத்தில் சுற்றுச் சூழல் மாசடைந்து, பூமியின் வெப்பம் அதிகரித்து, மழை நின்று போய், மனிதன் சுவாசிக்கும் ஆக்சிஜன் குறைந்து போய், உணவை விளைவிக்கும் நிலம் சத்தற்ற வெறும் மண்ணாய் வரட்சியான பூமியில் தான் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இனி வரும் சந்ததியினருக்கு, பலவீனப்பட்ட பஞ்சபூதங்களைத் தான் நாம் சேர்த்து வைத்துள்ளோம்.
பணபலம் இருக்கிறது, அரசியல் தலைவர்களின் தொடர்பு உள்ளது, பெரும் ஆள் பலமும் இருக்கிறது என்று நெஞ்சை நிமிர்த்தி அனுமதிக்கப்படாத செயல்களுக்கு, காகிதத்தில் கையெழுத்திட்டு, சீல் வைத்து அப்ரூவல் வாங்கி கர்வமாய் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு பெருமிதம் கொள்ளலாம். ஆனால் அந்த கர்வமும், பெருமிதமும் மனிதனின் மனதில் ஆழப் பதிவதற்குள், இயற்கை பாடத்தைச் சொல்லிக் கொடுத்து விட்டு சென்று கொண்டே இருப்பதை நாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.
ஒவ்வொரு நாளும் இயற்கை மனிதனுக்கு சின்னச் சின்ன நில அதிர்வுகள் மூலமும், பொங்கும் வெள்ளம், சீறும் புயல் என்று ஏதேனும் ஒரு வகையில் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டு போய்க் கொண்டே இருக்கிறது.

மனிதன் தான் விழித்துக் கொள்ள வேண்டும். தூங்குபவர்களை எழுப்பி விடலாம். தூங்குபவர்களைப் போல நடிப்பவர்களை எழுப்ப முடியாது என்பது முன்னோர் சொல்லி விட்டுச் சென்ற வாக்கு. மனிதன் தூங்குகிறானா அல்லது தூங்குவதைப் போல நடிக்கிறானா?