வளர்ச்சியும், வெற்றியும்
காம்கேர் கே. புவனேஸ்வரி
ஒரு சிலருக்கு வளர்ச்சியும், வெற்றியும்
கண் சிமிட்டும் நேரத்தில் ‘டக் டக்’ என்று நடந்தேறிக் கொண்டே இருக்கும். ஒரு
சிலருக்கோ அதற்கு காலம் கனிந்து வரும் வரை காத்திருக்க வேண்டியிருக்கும்.
அவரவர்கள் எடுத்துக் கொண்ட இலக்கு, அதில் அவர்கள் காட்டுகின்ற தொலை நோக்குப்
பார்வை, அதற்காக அவர்கள் போடுகின்ற உழைப்பு, நேரம் போன்றவற்றின் அடிப்படையில்
வெற்றி கிட்டுவதற்கான காலமும் வேறுபடும்.
உதாரணத்துக்கு,
கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் பாகங்களை வாங்கி வைத்து விற்பனை செய்கின்ற தொழில் நடத்துவது
தான் இலட்சியம் என்று வைத்திருப்பவர்களுக்கு அவர்களின் இலக்கை அடைவது அவ்வளவு ஒன்றும்
கடினமானதாக இருக்காது. ஏனெனில், பிசியான பகுதியில் ஷாப் வைப்பதற்கான இடம்,
ஹார்ட்வேர் சாதனங்கள் சிலவற்றை வாங்கி ஷோ-கேஸில் வைப்பதற்கு கொஞ்சம் முன் பணம்,
ஓரிரு பணியாட்கள், இவை இருந்து விட்டால் அவர்கள் இலக்கை அடைவதற்கு சாத்தியக்
கூறுகள் அதிகம்.
ஆனால்,
கம்ப்யூட்டரின் உயிர்நாடியான மதர்போர்ட், சிப், பிராசசர் போன்றவற்றைத் தயாரிப்பதை
நோக்கமாகவும், இலக்காகவும் வைத்திருப்பவர்களுக்கு அவர்களது இலட்சியத்தை அடைவதற்கு
நேரம் அதிகம் எடுக்கும். ஏனெனில் தொழிற்சாலை அமைக்க பெரிய இடம், சாதனங்களை
தயாரிப்பதற்கான பாகங்களை இறக்குமதி செய்ய பொருளாதார வசதி, மாதா மாதம் பணியாளர்களுக்கு
சம்பளம் கொடுக்க தேவையான நிதி வசதி இப்படி இலக்கின் தன்மைக்கு ஏற்ப, அதனை
அடைவதற்கான வழிமுறைகளும் அதிகரிக்கத் தானே செய்யும்.
இதனை
இயற்கையே மிக அழகாக பாடம் கற்பிக்கிறது. ஒரு தோட்டத்தில் ஒரே நேரத்தில் விதைக்கப்பட்ட
மூங்கில் விதையையும், சாதாரண தாவர விதையையும் எடுத்துக் கொள்வோம்.
சாதாரண
தாவர விதை, ஆறு மாத காலத்துக்குள் சிறிய செடியாக ஆனது, இரண்டு வருடங்களுக்குள்
குட்டி மரமாகவும், ஐந்து வருடங்களுக்குள்
மிகப் பெரிய மரமாக வளர்ந்து விட்டது.
ஆனால்
மூங்கில் விதை மண்ணுக்குள்ளேயே விதையாகவே இருந்தது. கொஞ்சம் கூட மண்ணை விட்டு
வெளியே வரவில்லை. காரணம் மூங்கில் வேர் மண்ணுக்குள் தன் வேரை வலுவாக்கி, ஆழமாக
மண்ணுக்குள் ஊன்றி உறுதியாக்கிக் கொண்டிருந்தது. சில நாட்களுக்குப் பிறகு சிறிதாக
முளை விட்டது. சரியாக ஆறு மாதங்களுக்குப் பிறகு மூங்கில் முளை 100 அடி உயரம்
வளர்ந்து மேகத்தைத் தொட்டு விடும் அளவுக்கு ஒய்யாரமாய் நெடு நெடுவென வளர்ந்து
நின்றது.
சாதாரண்
தாவர விதை முளை விட்டு, செடியாகி, சிறிய மரமாகி பிறகு பெரிய மரமாக 5 வருடங்கள்
எடுத்துக் கொள்கிறது. ஆனால் மூங்கில் 5 வருடங்கள் வளர்ச்சியை வெளியில் காட்டாமல்,
மண்ணுக்குள் தன் வேர்களை பலப்படுத்திக் கொண்டு நன்றாக வேரை வலுவாக்கியபடி ஊன்றிக்
கொண்டிருக்கிறது. சரியாக அடுத்த ஆறாவது மாதம் நெடுநெடுவென வளர்ந்து மற்ற மரங்கள்
வாயைப் பிளந்து ஆச்சர்யப்படும் அளவுக்கு வானத்தைத் தொட்டு நிற்கிறது.
இதே
கோட்ப்பாட்டின்படி தான் ஒவ்வொருவருடைய வளர்ச்சியும், வெற்றியும் அமைகிறது.
தொலைநோக்குப் பார்வையுடன் ஆராயப்பட்டு எடுக்கப்படும் எந்த ஒரு இலக்கும், அதற்கான
முயற்சியும் தோற்பதில்லை. எடுத்துக் கொண்ட அந்த இலக்கில் வெற்றிக் கிடைப்பதற்கான
காலம் அதிகமானாலும், அதன் பின்னணியில் உள்ள உண்மையும், உழைப்பும் கிடைத்த வெற்றியை
நீண்ட காலம் தக்க வைத்துக் கொள்ளும் உத்வேகத்தைக் கொடுக்கும் என்பது உறுதி.
ஆனால்
தொலைநோக்குப் பார்வையின்றி, இப்போதைக்கு இது போதும் என்ற நோக்கில் வைத்துக்
கொள்ளும் இலக்குகளும், அதற்கான முயற்சிகளும் உடனுக்குடன் வெற்றியைக் கொடுத்தாலும்,
அந்த வெற்றி தற்காலிக சந்தோஷத்தை மட்டுமே கொடுக்கும். நீண்ட கால தேவைகளுக்கும்,
வெற்றிகளுக்கும் அது பயன்படாது.
பொதுவாகவே
நாம் நம் உடம்பில் ஒரு வலிக்காக ஒரு மருந்தை உட்கொள்கிறோம் என்றால், அது
இரத்தத்தில் மெதுவாக கரைந்து மெல்ல மெல்ல வலியைப் போக்க வேண்டும். அப்போது தான்
அந்த மருந்து நமக்குத் தீமை விளைவிக்காமல் நன்மை செய்வதாகப் பொருள். அதை விட்டு,
மருந்தை சாப்பிட்ட ஐந்தாவது நிமிடம் வலி நீங்கி விடுகிறதென்றால், அதன் வீரியம்
எப்படி இருக்கும் என்று எண்ணிப் பாருங்கள். நம் நாடி நரம்புகளை முறுக்கிப்
பிழிந்து ரத்தத்தைச் சுண்டச் செய்து உடனடி வலி நிவாரணம் கொடுக்கும் மருந்துகள்
விரைவில் நம்மை படுத்தப் படுக்கையில் தள்ளி பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதில்
சந்தேகம் இல்லை.
ஆக,
மருந்தானாலும், வெற்றியானாலும் அதற்கான நேரத்தை எடுத்துக் கொண்டு செயல்படுமேயானால்
பின்விளைவுகள் இன்றி பூரண நிம்மதியைக் கொடுக்கும்.
இயற்கையை
மீறி வலுக்கட்டாயமாக பழுக்க வைக்கப்படும் பழங்கள் பார்வைக்குப் பளபளப்பாய்
இருக்கும். குழந்தைகளை மட்டுமில்லாமல் பெரியோர்களையும் சுண்டி இழுக்கும். ஆனால்
உடல் நலத்தை கெடுத்து நாசம் செய்து விடுவதைப் போல தான் உடனடி வெற்றிக்காக நாம்
எடுக்கும் முயற்சிகள் நேர்மைக்கு விரோதமாகவும் ஆகி விடக் கூடும். அப்படி
கிடைக்கும் வெற்றியும், சந்தோஷமும் விரைவில் அழிந்து விடும் என்பதில் கவனமாக
இருக்க வேண்டும்.
இலக்கில்
தோல்வி அடையும் போது, அமைதியையும்,
நிதானத்தையும் கடைபிடிக்க வேண்டும். அப்போது தான் மனம் ஒருமுகப்படுத்தப்படும். இப்போது
என்ன தவறு செய்தோம்...இனி அதை எப்படி திருத்திக் கொள்ளலாம்... என சிந்தனை செய்து
செயல்பட முடியும்.
வெற்றி
அடையும் போது, அதைவிட அதிகமாக அமைதியையும், நிதானத்தையும் கடைபிடிக்க வேண்டும்.
அப்போது தான், கிடைத்த வெற்றியை மிகச் சரியாகப் பயன்படுத்தி பயனுள்ளதாக ஆக்கிக்
கொள்ள முடியும்.
வெற்றி,
தோல்வி இரண்டும் வாழ்க்கை என்னும் ஆசிரியர் நமக்குக் கற்றுக் கொடுக்கும் இரண்டு
பாடங்கள். எனவே,
கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.